2009-03-31 12:20:06

கிறிஸ்து நமக்குத் தரும் உவமைகள் . மத் 18 , 21 – 35 .


கிறிஸ்து நமக்குத் தரும் உவமைகள் . மத் 18 , 21 – 35 . மன்னிக்க மறுத்த பணியாளர் உவமை .

கோரி பிரவுன் ஜெர்மன் விஷவாயுச் சிறையில் இருந்தவர் .

யூதர்களை ஜெர்மானியர் லட்சக்கணக்கில் சிறைப்படுத்திக் கொன்றபோது அவர்களுக்குத் தம் வீட்டில் அடைக்கலம் கொடுத்துப் பாதுகாத்ததற்காக கோரிபிரவுனும் அவரது சகோதரியும் சிறையில் அடைக்கப்பட்டனர் . இவரது சகோதரி சிறையில் இறந்தார் . கோரி பிரவுன் பின்னர் விடுதலை பெற்றபோது ஜெர்மானியரை மன்னிப்பது பற்றி பல ஊர்களுக்கும் சென்று உரை நிகழ்த்தி வந்தார் . அவர் ஜெர்மனியின் மியூனிக் நகரில் உரை நிகழ்த்தி முடிந்ததும் ஒருவர் அவருக்குக் கை குலுக்கிப் பாராட்டுத் தெரிவித்தார் . அவர் கோரி பிரவுன் சிறையில் இருந்தபோது அவருக்குச் சிறைக்காவலராக இருந்தவர் . கை கொடுத்த கோரி அவரை இனம் கண்டு கொண்டபோது அவர் உடல் நடுங்கியது . வெறுப்பு உணர்ச்சி பொங்கியது . கையை உடனே திருப்பி எடுக்க நினைத்தார் . மன்னிப்பு வழங்குவது பற்றி உரை நிகழ்த்தினாலும் மன்னிப்பது அவ்வளவு எளிதாகத் தெரியவில்லை .நமக்கு எதிராகத் துரோகம் செய்தவர்களை மன்னிக்க நாமும் மிகச் சிரமப்படுகிறோம் . நம்மீது பொய்க்குற்றங்களைச் சுமத்திக் காட்டிக் கொடுப்பவர்களை மன்னிப்பது அவ்வளவு எளிதாக நமக்குத் தெரிவதில்லை .

இந்தப் பிரச்சனையை நாம் எவ்வாறு சமாளிக்கிறோம் . ஒருவரை மன்னிக்கத் தயங்கும் போது நாம் என்ன செய்கிறோம் . நெஞ்சை நிரப்பும் உணர்வுகளை நாம் எவ்வாறு நீக்க முயல்கிறோம் . இயேசு நமக்கு அவர்கூறும் கதையில் நம் சிந்தனைக்கு ஒளியூட்டுகிறார் .



மன்னிப்பதற்கு அளவு எவ்வளவு ? .



ஏழுமுறை எழுபது என்பது 449 .இது நம்முடைய சிந்தனை கூறும் கணக்குப்பாடம் . ஆனால் நாம் உள்த்திலிருந்து முடிவில்லாத அளவு முழுவதும் மன்னிக்க அழைக்கப்படுகிறோம் . மன்னிப்பது என்பது கோபத்தைவிடுத்து பழிவாங்கும் எண்ணத்தையும் விடுவதாகும் . மன்னிப்பதும் குற்றத்தை மறக்காதிருப்பதும் மன்னிப்பதற்கு அர்த்தம் அல்ல . சட்டப்படி ஒருவரைக் குற்றவாளி எனக் கூறுவது என்பதற்காகச் சிறைப்பிடிப்பது தேவையாக இருக்கலாம் . ஆனால் மன்னிக்க வேண்டிய கடமையிலிருந்து அது நம்மை விடுவிப்பதில்லை . நீதியின்படி மட்டும் நாம் தீர்ப்பிடப்பட்டால் எவரும் மன்னிப்புப் பெறமுடியாது . நாம் இரக்கம் காட்டவேண்டும் . மன்னிப்பது என்பது செயல் இழந்து நிற்கும் நிலையல்ல . அதற்கு மாறாக, நன்மை செய்வதால் குற்றம் புரிந்ததவருக்கு மன மாற்றம் கொடுப்பதாகும் . கடவுளிடம் நாம் மன்னிப்புப் பெற நாம் முதலில் பிறரை மன்னிக்கத் தயாராக இருக்க வேண்டும் .



மன்னிப்பு வழங்க மறுக்கும் ஊழியனின் கதை நமக்குக் கற்பிக்கும் பாடம் என்ன .

என்மீது நம்பிக்கை கொண்டுள்ள இவர்களில் ஒருவருக்கு இதைச் செய்யாதபோது நீங்கள் இதை எனக்கே செய்யவில்லை என்கிறார் இயேசு . மன்னியாத குற்றம் காணாமல் போன ஆடுபற்றி அக்கறைகாட்டத் தவறுவதாகும் . ஏழு முறை எழுபது தடவை மன்னிப்புப் பெறும் நாம் ஒருமுறை மன்னிக்க மறுப்பது எப்படி சரியானதாகும் . ஊதாரி மைந்தனைத் தந்தை எப்படி ஏற்றுக் கொள்கிறார் என நாம் அறிவோம் . நல்ல சமாரித்தனின் நற்குணத்தை நாம் அறிந்திருக்கிறோம . இன்று நாம் காணும் உவமை இரக்கம் காட்ட நம்மை அழைக்கிறது . இன்றைய கதையின் மையக் கருத்து வசனம் 35 ல் வருகிறது . உங்களுள் ஒவ்வொருவரும் தம் சகோதர சகோதரிகளை மனமாற மன்னிக்காவிட்டால் விண்ணுலகில் இருக்கும் என் தந்தையும் உங்களை மன்னிக்க மாட்டார் . அவ்வாறு இயேசு கூறுவதற்கு எதிராக நாம் என்ன கூறமுடியும் .

மன்னருக்குக் கொடுக்க வேண்டிய பணத்தில் ஒரு இலட்சத்தில் ஒரு பகுதிக்கும் குறைவாகவே இவரிடம் மற்றவர் கடன் பட்டிருந்தார் . காலம் தாழ்த்திப் பணத்தைத் தருவதாகத் தவணை மட்டுமே கேட்ட இவருக்கு , மன்னர் இவர் பட்ட கடன் முழுவதையும் மன்னித்து விடுகிறார் . ஆனால் மிகப்பெரிய மன்னிப்பைப் பெற்ற இவர் தம் சக ஊழியர் சிறிய கடனைத் திருப்பித்தராததால் அவரைச் சிறையில் அடைத்துவிடுகிறார் . இந்த வேறுபாடு இரவுக்கும் பகலுக்கும் உள்ள வேறுபாடு போன்றதாக உள்ளது . கடவுள் அளிக்கும் மன்னிப்புக்கும் நாம் மன்னிக்க மறுப்பதற்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது . நாம் பார்க்கும் கதை அளவுக்கு அதிகமாக நிலைமையை விகாரமாக மிகைப் படுத்திக் காட்டுகிறதோ . இல்லை . நாங்கள் பிறர் குற்றங்களை மன்னிப்பது போல எங்கள் குற்றங்களையும் மன்னியும் என நாம் செபிக்கிறோம் . நாம் எவ்வளவு கடன் பட்டிருக்கிறோம் . ஒருநாளில் நாம் எவ்வளவு குற்றம் புரிகிறோம் . நாம் கூறும் பொய்கள் எத்தனை . நம்முடைய தவறான நடத்தைகள் எவ்வளவு . நாம் பெறும் காயங்கள் நாம் செய்யும் குற்றங்களுக்கு கடவுளிடமிருந்து மன்னிப்புப் பெறவேண்டியதில் லட்சத்தில் ஒரு பகுதி மட்டுமே . நாம் நம்முடைய குற்றங்களை உணரவும் ஏற்றுக் கொள்ளவும் தவறுகிறோம் . நாம் தெய்வத்திடம் பட்டிருக்கும் கடனைக் கணக்குப் பார்த்தால் பிறரை நாம் மன்னிக்க மறுப்பதை சரியானதாக எண்ணுவோமா .

நம்முடைய மன்னிப்பும் கடவுள் தரும் மன்னிப்பும் நெருங்கிய தொடர்புடையது என்று கதை நமக்குத் தரும் பாடத்திலிருந்து நாம் தப்பிக்க முடியாது . நாம் கடவுளின் இரக்கம் பற்றிப் பேசுகிறோம் . ஆனால் மனிதர்களின் நிலைமையை மறந்துவிடுகிறோம் . கடவுள் நம்மை எப்போதும் மன்னிக்கக் காத்திருக்கிறார் . ஆனால் பிறரை மன்னிக்க மறுக்கும் ஒருவருடைய உள்ளத்திற்குள் அவரால் நுழயைமுடியாது . மன்னிக்க மறுப்பவர் கடவுளை வரவிடாது தமது உள்ளக்கதவைத் தாழிட்டுக் கொள்கிறார் . கடவுள் நிபந்தனைகளை விதிக்கவில்லை . சரியாகச் சொல்லவேண்டும் என்றால் அவரை அன்பு செய்யவிடாது நாம்தாம் தடை செய்கிறோம் . மன்னிக்க மறுக்கும் ஒருவரை அவரால் அன்பு செய்யமுடியாது . ஏனென்றால் அன்பு செய்ய மறுப்பது என்பது கடவுளுடைய வாழ்வு நெறிக்கு மாறுபட்டது .

நாம் இயேசு கற்பித்த செபத்தில் நாங்கள் பிறர் குற்றங்களை மன்னிப்பது போல வானகத் தந்தையே எங்கள் குற்றங்களையும் மன்னித்தருளும் என்கிறோம் . கதையின் இறுதி முடிவை ஒரு இறையியல் கொள்கையாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது . ஆனால் அந்த முடிவில் எதார்த்தமும் , உண்மையும் உள்ளன . மன்னர் கோபப்படுவது , சிறைப்பிடிக்கக் காவலர் வருவது , அரசனின் ஊழியரைச் சிறையில் தள்ளுவது போன்றவை யெல்லாம் கடவுளின் நியாயமான நேர்மையான நிலையை நமக்கு உணர்த்துகின்றன . ஏனெனில் கடவுள் நமது வானகத் தந்தை . அவர் தீமையை நல்லது எனக் கூறமுடியாதவர் . கதையில் வரும் ஊழியர் தம்முடைய இயல்பு . மன்னிப்பதோ தெய்வீகம் தவறு காரணமாகத் தன்னையே சிறையில் தள்ளுகிறார் .

நீதியை நாம் இரக்கத்தோடு வழங்கும் போது உலகம் கடவுளைப் பிரதிபலிக்கிறது . பலர் கடவுளுடைய இரக்கத்தை உணரவோ , அறியவோ முடியவில்லை என்கின்றனர் . அவர்கள் மன்னிக்கின்றார்களா ?. தவறுவது மனித இயல்பு . மன்னிப்பதோ தெய்வீகம் .








All the contents on this site are copyrighted ©.