2009-03-30 15:25:03

ஏமாற்றாதே ஏமாறாதே


மார்ச் 30,2009. ஏப்ரல் முதல் தேதி வரப்போகிறது என்று நினைத்தவுடனே அது முட்டாள்கள் தினமாச்சே, யாரை எப்படி? என்ன சொல்லி, யாருக்கு என்ன செய்து ஏமாற்றலாம்? என்று நம்மில் பலர் நினைக்க ஆரம்பித்து விடுவோம். பொதுவாக அன்று யாரையாவது ஏமாற்றி 'முட்டாள்' ஆக்கினாலும், அவர்கள் கோபித்துக்கொள்ளவும் மாட்டார்கள். “மார்ச் மறைந்தது; ஏப்ரல் வந்தது. நீதான் முட்டாள்; நானில்லை”- இப்படியோர் ஆங்கிலக் கவிதைகூட இந்நாளுக்கென உண்டு. முட்டாள்களுக்கென்று ஒரு தினம் எப்படி வந்தது என்று கட்டற்ற கலைக்களஞ்சியத்தைத் திறந்து பார்த்த பொழுது, கொஞ்சம் செய்திகள் கிடைத்தன. இந்நாள் பிரான்ஸ் நாட்டிலேயே முதன்முதலில் அனுசரிக்கப்பட்டதாகத் தெரிகிறது. பாஸ்வெல் என்பவர் இப்படியொரு தினம் கொண்டாட வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்திருக்கிறார். சூரிய வழிபாட்டுக்கும் இந்த விழாக் கொண்டாட்டத்திற்கும்கூடத் தொடர்பு இருப்பதாகவும் தெரிகிறது. ஸெல்ட் என்ற பழங்குடியினர் சூரியக் கடவுளைக் குறித்து இந்த வசந்த விழாவைக் கொண்டாடினர். இதில் முக்கிய அம்சம் என்னவென்றால், ஒருவர் மற்றொருவரை ஏமாற்றிக் கிண்டல் செய்வதாகும். பிரிட்டன், ஆஸ்திரேலியா, நியுசிலாந்து, கானடா போன்ற நாடுகளில் மதியத்திற்கு மேல் கிண்டல் செய்வோரை ஏப்ரல் முட்டாள் என அழைப்பதுண்டு.

மேலும், இந்த ஏப்ரல் முட்டாள்கள் தினத்திற்கு மற்றுமொரு வரலாறும் சொல்லப்படுகின்றது. ஐரோப்பாவின் பல நாடுகளில் 16ம் நூற்றாண்டு வரை ஏப்ரல் முதல் தேதியன்று புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வந்தது. 1582ம் ஆண்டில் அப்போதைய திருத்தந்தை 13வது கிரகரி, பழைய ஜூலியன் நாட்காட்டி முறையை ஒதுக்கி புதிய கிரகோரியன் நாட்காட்டி முறையை நடைமுறைப்படுத்தினார். இதன்படி ஜனவரி முதல் தேதியன்று புத்தாண்டு ஆரம்பமானது. எனினும் இந்தப் "புதிய" புத்தாண்டு தினத்தை ஐரோப்பியர்கள் உடனடியாக ஏற்றுக் கொள்ளவில்லை. பிரான்ஸ் 1582ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள் 1700ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752ம் ஆண்டிலும், இந்தப் புதிய புத்தாண்டு தினத்தை அதிகாரப்பூர்வமாக ஏற்றுக் கொண்டன. இதனை ஏற்றுக் கொள்ளாமல் ஏப்ரல் முதல் தேதியையே புத்தாண்டு தினமாகச் சிறப்பித்தவர்கள் ஏப்ரல் முட்டாள்கள் என்று அழைக்கப்பட்டதாக ஒரு வரலாறு உள்ளது. இதலிருந்து ஏப்ரல் முட்டாள்கள் தினம் ஆரம்பமாயிற்று என்பது பலராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. எனினும் 1508ம் ஆண்டில் பிரான்ஸ் நாட்டில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு வந்துள்ளது என்பதற்கும் சான்றுகள் உண்டு.

இந்த முட்டாள்கள் தினத்தை நினைத்தவுடன் ஏமாறாதே, ஏமாற்றாதே என்ற பழைய பாடல்வரிதான் நினைவுக்கு வருகிறது. இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடிக்கவுள்ளவேளை எத்தனை வேட்பாளர்கள் வாக்காளர் பெருமக்களை முட்டாளாக்கப் போகிறார்களோ? அரசியலில் இந்நிலை என்றால் பொது வாழ்க்கையில் பிறரை முட்டாளாக்கி அவர்கள் வாழ்க்கையில் சவாரி செய்யும் கில்லாடிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. ஏமாற்றங்களை வடிவமைத்து அவற்றை ஒரு தொழிலாகவே பலர் செய்து வருகின்றனர். மின் அஞ்சலைத் திறந்தால் தினம் தினம் குறைந்தது ஓர் ஏய்ப்பு கடிதமாவது இருக்கின்றது. நீங்கள் அதிர்ஷ்டசாலி. மில்லியன் டாலர் பரிசை வென்றுள்ளீர்கள். உடனே உங்களது வங்கி கணக்கு விபரத்தை அனுப்புங்கள் என்று அதில் எழுதப்பட்டிருக்கிறது. இந்தக் கணனி புதிய திருட்டு தொழிற்நுட்பம் பணப்பேராசை பிடித்த சிலரைச் சலனப்படுத்தத்தான் செய்கிறது.

ஏமாற்றப்படுதல் என்பது நாம் அனைவரும் வாழ்க்கையில் ஏதாவது ஒருவகையி்ல் சந்தித்த ஒன்றுதான். சிறு வயதில் 'காக்கா தூக்கிட்டு போச்சு' என்று, அம்மா விளையாட்டாக, நம் கையில் சிக்கக் கூடாத பொருட்களை, ஒளித்து வைத்ததில் இருந்து இந்த ஏமாறுதல் தொடங்குகிறது. பள்ளிப் படிப்பில், சில ஆசிரியர்கள், தனக்கு பிடித்த மாணவனுக்கு எப்பொழுதும் சற்று தூக்கலாகவே மதிப்பெண் போட்டு, நம்மைக் 'கீழேயே' வைத்திருக்கும் போது அந்த ஏமாற்றம் பெரிய அளவில் புரிவதில்லை. வளர்ந்து வயதாகி, கல்லூரி, வேலை என்று போகும் போது கிடைக்கும் பல ஏமாற்றங்கள் வேதனையையும் விரக்தியையும் தரத் துவங்குகின்றன. தற்கொலை முயற்சிகளிலும்கூட ஈடுபட வைக்கின்றன.

இப்படி சமுதாயம் ஏற்படுத்தும் ஏமாற்றங்கள் ஒரு பக்கம் இருக்க, தனி மனிதனால் தொடுக்கப்படும் துரோகங்கள் இன்னொரு பக்கம் வாட்டுகின்றன. மகளின் திருமணம், பிள்ளையின் கல்வி, வீடு வாங்க சேமிப்பு என்று குருவி போல் பார்த்துப் பார்த்து சேமித்ததெல்லாம், அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு, துரோகிகளிடம் கொடுத்து ஏமாந்த கூட்டமும் உண்டு. இஞ்ஞாயிறன்றுகூட இதேமாதிரியான செய்தி ஒன்று தொலைக்காட்சியில் காட்டப்பட்டது. ஏமாறும் ஏமாளி நண்பர்களே, இவ்வுலகில் எதுவுமே முழுவதும் இனாமாக வருவதில்லை என்பதை மனத்தில் ஆழமாகப் பதிய வையுங்கள். இன்று ஏமாற்றுப் பேர்வழிகள் பல உருவங்களில் ஏமாற்றி வருகிறார்கள். எனவே இதைப் போன்ற புதிய உத்திகளை ஒருவர் ஒருவருடன் பகிர்ந்து கொண்டு விழிப்போடு இருக்க உதவுவது நல்லது. புனித பேதுரு சொன்னது போல உங்கள் எதிரியான அலகை யாரை விழுங்கலாம் எனக் கர்ச்சிக்கும் சிங்கம் போலத் தேடித் திரிகிறது.(1பேதுரு5,8). எனவே அறிவுத் தெளிவோடு விழிப்பாயிருக்க வேண்டும். எதிலும் ஆழம் அறியாமல் காலை விடாதிருப்பதில் எச்சரிக்கை அவசியம்.

இப்படி ஏமாற்றுப் பேர்வழிகள் நாளுக்கு நாள் பெருகுவதற்கு என்ன காரணம்? அவர்களுக்கு வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களும் விரக்திகளுமா? அல்லது அவர்களிடம் இயல்பாகவே இருக்கும், உடல் நோவாமல் சுரண்டிப் பிழைக்கும் கேவல மனமா? அல்லது ஏமாறுபவர்கள் விழித்துக் கொள்ளாமல் இன்னும் முட்டாள்களாக இருப்பதா? கடந்த வாரம் ஒரு செய்தி எமது காதுக்கு வந்தது. அந்த இளம் தாதிப் பெண் சென்னையில் ஒரு பணக்கார மருத்துவமனையில் வேலை பார்த்து வந்தவள். ஆயினும் தனது ஏழைக் குடும்பத்தை காப்பாற்ற நினைத்து ஒரு புரோக்கரை நம்பி சிங்கப்பூர் சென்று வேலை செய்ய ஐம்பதாயிரம் கொடுத்தாள். ஆனால் சென்னை விமான நிலையத்தில் ஆயிரம் கனவுகளோடு அன்று சிங்கப்பூர் செல்லக் காத்திருந்த அவளையும் அவளோடு சேர்ந்த மற்றவரையும் வழியனுப்ப புரோக்கர் வரவே இல்லை. கஷ்டப்பட்டு சேர்த்த பணம் தொலைந்ததுதான் மிச்சம். அழுகையுடன் எல்லாரும் வீடு திரும்பியுள்ளனர். இத்தகைய சம்பவங்கள் எத்தனையோ நடந்தும் இன்னும் ஏன் ஏமாளிகளாக, முட்டாள்களாக இருக்க வேண்டும்?

'இனி எத்தனைக் காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே' 'நாட்டை ஏய்க்கும் கருங்காலிக் கூட்டமே, நாங்கள் நிமிர்ந்துவிட்டால் எடுக்க வேண்டும் ஓட்டமே' என்று ஒரு பழைய பாடல் உண்டு. சிலரை சிலகாலம் ஏமாற்றலாம். ஆனால் எப்போதுமே ஏமாற்ற முடியாது என்பதே உண்மை.

அக்காலத்தில் ஜயேந்திரன் என்ற மன்னன் விஜயபுரத்தை ஆட்சி செய்து வந்தான். மிகச் சிறந்த அறிவுடையவனாக இருந்தாலும் கருமியாக இருந்தான். அவனுக்குக் கவிதைகள் என்றால் கொள்ளைப் பிரியம். அரசவைக்குப் புலவர்களை வரவழைத்துக் கவிதைகள் கேட்பான். ஆனால் பரிசே கொடுக்க மாட்டான். இந்தக் கவிதையை நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன் என்று சொல்லி தனது திறமையால் அதனை அப்படியே சொல்வான். இதனால் ஏமாற்றமடைந்த புலவர்கள், அவனுக்குப் பாடம் புகட்ட விரும்பி ஒரு துறவியைத் தேடிச் சென்றனர். அத்துறவியும் அவர்கள் மீது மனமிரங்கி தெய்வத்தை வேண்டிக் கொண்டு ஒரு கவிதை இயற்றினார். அது எளிதில் உச்சரிக்க முடியாதபடி இருந்தது. அவர் நேரில் சென்று மன்னனிடம் பாடினார். அக்கவிதையில் ஒருவார்த்தைகூட மன்னனின் மனதில் நிற்கவில்லை. துறவி மீண்டும் மீண்டும் பாடினார். மன்னனால் முடியவில்லை. துறவியின் திறமையை ஒத்துக் கொண்ட ஜயேந்திரன், நீங்கள் இயற்றிய கவிதைச் சுவடியைக் கொடுங்கள், அதன் எடைக்கு எடை பொன் தருகிறேன் என்றான். அதற்குத் துறவி, மன்னா, இந்த அற்புதமான கவிதையை ஒரு பாறையில் எழுதியிருக்கிறேன். உங்கள் காவலாளிகளை உடன் அனுப்புங்கள் என்றார். பாறை கொண்டுவரப்பட்டது. அதைப் பார்த்த மன்னனுக்கு தலைசுற்றியது. எனினும் கொடுத்த வாக்கைக் காப்பாற்ற வேண்டுமே. வேறு வழியில்லாமல் எடைக்கு எடை பொன் கொடுத்தார். துறவியும் அதனைப் பெற்று ஏமாந்த புலவர்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டு தன்வழியே சென்றார்.

மன்னன் ஜயேந்திரன் போன்று தூங்குகிறவன் தொடையில் எப்பொழுதுமே கயிறு திரிக்கலாம் என்று இறுமாந்திருந்தால் நஷ்டம் திரிப்பவனுக்கே. ஊமைகள் ஏங்கவும் உண்மைகள் தூங்கவும் இறைவன் பொறுத்திருக்க மாட்டான். ஊரை ஏமாற்றுபவன் என்றுமே உயர்ந்து வாழ முடியாது என்பதே உண்மை. இறைவன் என்ற நீதிபதியின் தீர்ப்பு என்றுமே சத்தியமானது. அறம் பாடவந்த தெய்வப்புலவரும், “பச்சை மண்குடத்தில் வைக்கப்பட்ட நீர் தானும் கரைந்து, குடத்தையும் கரைத்து, இடத்தையும் சேறாக்குதல் போல ஏமாற்றிச் சேர்ப்பவன் பொருள் தன்னிடம் உள்ளதையும் சேர்த்துக் கரைத்துவிட்டுப் போய்விடும்” என்று எச்சரிக்கிறார்.

ஆகவே வானொலி அன்பனே, ''ஊருக்குத் சில சாட்சிகள் தேவைப்பட்டாலும், உனக்குத் தேவை மனச்சாட்சியே'. நீ பிறரை ஏமாற்றாமல் இருந்தால் உன் நெஞ்சுக்கு இறைவன் கொடுக்கும் சலனமில்லா நிம்மதி நித்தமும் கிடைக்கும். எனவே உனது வாழ்க்கையில் கனவில்கூட யாரையும் ஏமாற்றாதே, அதேசமயம் நீயும் ஏமாறாதே! இந்த ஏப்ரல் முதல் நாள் உனக்கு அறிவாளிகள் தினமாக மலரட்டும். டால்ஸ்டாய் சொன்னார்- ஒருவர் எப்போதும் வீரராய் இருக்க முடியாது. ஆனால் மனிதராய் இருக்க முடியும் என்று.








All the contents on this site are copyrighted ©.