2009-03-30 15:17:31

ஆப்ரிக்க மக்களின் மகிழ்ச்சியான தோற்றமும் புனிதத்துவம் பற்றிய உணர்வும் தன்னை மிகவும் கவர்ந்ததாக கூறினார் திருத்தந்தை


மார்ச்30,2009. ஆப்ரிக்க மக்களின் மகிழ்ச்சியான தோற்றமும் புனிதத்துவம் பற்றிய உணர்வும் தன்னை மிகவும் கவர்ந்ததாக இஞ்ஞாயிறன்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, தனது அண்மை ஆப்ரிக்கப் பயணம் பற்றிய சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்டார்.

முதலில், ஆப்ரிக்க மக்களின் முகங்களில் காணப்பட்ட இறைக்குடும்பத்தின் அங்கம் என்ற மகிழ்வான உணர்வு, தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறிய அவர், நமது பெருமளவான சகோதர சகோதரிகளுடன் விசுவாசம் நிறைந்த கொண்டாட்டங்களைப் பகிர்நது கொள்ளக் கிடைத்ததற்காக இறைவனுக்கு நன்றி கூறுவதாகவும் தெரிவித்தார்.

அடுத்து, திருவழிபாட்டு நிகழ்வுகளில் காணப்பட்ட புனிதம் பற்றிய உணர்வு தன்னை மிகவும் கவர்ந்ததாகக் கூறிய திருத்தந்தை, ஆப்ரிக்க மக்களுக்கேயுரிய இப்பண்பு தனது இந்தப் பயணத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் நிறைந்திருந்ததாகவும் தெரிவித்தார்.

இந்தத் திருப்பயணம், ஆப்ரிக்கத் திருச்சபையின் உண்மை நிலையைப் புரிந்து கொள்ள உதவியதாகவும் அவர் கூறினார்.

கோதுமை மணி மண்ணில் விழுந்து மடியா விட்டால் அது அப்படியே இருக்கும். அது மடிந்தால்தான் மிகுந்த விளைச்சலை அளிக்கும் என்ற இஞ்ஞாயிறு நற்செய்தி பகுதி பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, இவ்வழியில் புதிய மனித சமுதாயம் மலர முடியும் என்றும் கூறினார்.

மனித வரையறைகளுடன் ஆப்ரிக்காவில் புதிய மனித சமுதாயம் உயிர்த்துடிப்புடன் இருப்பதைக் காண முடிந்தது எனவும் அங்கு இயேசுவைப் போல் தங்கள் வாழ்க்கையை நற்செய்திக்காக ஈந்த மற்றும் கொடுத்துக் கொண்டிருக்கிற மறைபோதகர்களுக்கு நன்றி கூறுவதாகவும் கூறினார் அவர்.

மேலும், வத்திக்கான் சதுக்கத்தில், திருத்தந்தைக்கு நன்றி கூறவும் எய்ட்ஸ் நோயை ஒழிப்பது குறித்த அவரது கருத்துகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் நின்று கொண்டிருந்த எண்ணற்ற ஆப்ரிக்க இளம் ஆண்கள் பெண்கள், குருக்கள், குருத்துவ மாணவர்கள், அருட்சகோதரிகள் என அனைவருக்கும் நன்றியும் தெரிவித்தார் திருத்தந்தை.

உங்கள் அனைவருக்கும் என் இதயத்திலிருந்து நன்றியும் தெரிவிக்கிறேன், உங்களுக்காக, உங்கள் குடும்பங்களுக்காக, உங்கள் நாடுகளுக்காகச் செபிக்கிறேன் என்றும் கூறினார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.