2009-03-28 15:39:53

ஜி20 நாடுகளின் கூட்டம் ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுக்க சர்வதேச காரித்தாஸ் வலியுறுத்தல்


மார்ச்28,2009. வருகிற ஏப்ரல் இரண்டாம் தேதி இலண்டனில் நடைபெறவுள்ள ஜி20 நாடுகளின் கூட்டத்தில் கொண்டுவரப்படவுள்ள பொருளாதாரச் சீர்திருத்தம், நீதி மற்றும் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்டதாயும், ஏழைகளுக்கு முன்னுரிமை கொடுப்பதாயும் இருக்குமாறு சர்வதேச காரித்தாஸ் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடி, வளரும் நாடுகளில் குறைந்தது 5 கோடியே 30 இலட்சம் பேரை வறுமைக்குள் தள்ளியுள்ளது என்றுரைக்கும் காரித்தாஸ், கடந்த ஆண்டின் உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றத்தால் 15 கோடிப் பேர் வரை ஏழ்மை நிலைக்கு உள்ளாகியுள்ளனர் என்றுரைக்கிறது.

வல்லமை படைத்த சிலரின் பண ஆசையில் நன்னெறிகள் ஓரங்கட்டப்பட்டதே தற்போதைய உலகளாவிய பொருளாதார நெருக்கடிக்குக் காரணம் என்று சர்வதேச காரித்தாஸ் அமைப்பு தலைவர் கர்தினால் ஆஸ்கார் ரொட்ரிகஸ் மாராதியாகா கூறினார்.

வரிஏய்ப்பு மற்றும் சட்டவிரோத முதலீடுகள் மூலம் ஏழை நாடுகளுக்கு ஒவ்வோர் ஆண்டும் 35 ஆயிரம் கோடி டாலர் முதல் 50 ஆயிரம் கோடி டாலர் வரை நஷ்டம் ஏற்படுவதாகவும் கூறப்படுகின்றது.

ஜி20 என்ற வளர்ந்த மற்றும் பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் 20 நாடுகள் இணைந்து தற்போதைய பொருளாதாரச் சரிவை நிவர்த்தி செய்வதற்கான வழிமுறைகள் குறித்து விவாதிக்கவுள்ளன. சர்வதேச நிதியகம் மற்றும் உலக வங்கியின் சீர்திருத்தம் குறித்தும் விவாதங்கள் இடம் பெறவுள்ளன.








All the contents on this site are copyrighted ©.