2009-03-25 14:41:13

புனித வெள்ளி உண்டியல் புனித பூமியில் துன்புறும் கிறிஸ்தவர்க்கென எடுக்கப்படும்


மார்ச்25,2009. அகிலத் திருச்சபையில் புனித வெள்ளித் திருவழிபாட்டில் எடுக்கப்படும் உண்டியலானது புனித பூமியில் துன்புறும் கிறிஸ்தவர்க்கென வழக்கம் போல் வழங்கப்படும் என்று திருப்பீட அறிக்கை ஒன்று கூறுகிறது.

இது குறித்து கீழைரீதி பேராயத் தலைவர் கர்தினால் லெயோனார்தோ சாந்த்ரியம் அப்பேராயச் செயலர் பேராயர் அந்தோணியோ மரிய வேலியோவும் இணைந்து உலகின் ஆயர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், புனித வெள்ளியன்று எடுக்கப்படும் உண்டியல்கள், புனித பூமிக் கிறிஸ்தவர்க்கெனப் பாரம்பரியமாகச் செலவழிக்கப்படுவதை நினைவுபடுத்தியுள்ளனர்.

கிறிஸ்தவத்தின் தொட்டிலாக இருந்த புனித பூமி கிறிஸ்தவர் இன்றி இருக்கும் நிலையை எதிர்நோக்குகின்றது என்றும் உண்மையில் அங்கு அமைதி இல்லை என்றும் அங்கு இடம் பெறும் வன்முறையினால் கிறிஸ்தவர்கள் வெளியேறுகின்றனர் என்றும் அக்கடிதத்தில் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும், திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற மே மாதம் 8 முதல் 15 வரை புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவிருப்பதை முன்னிட்டு ஏழு மொழிகளில் சிறப்பு செபம் ஒன்றையும் எருசலேம் இலத்தீன் ரீதி பிதாப்பிதா வெளியிட்டுள்ளார்.








All the contents on this site are copyrighted ©.