2009-03-24 12:44:59

விவிலியத் தேடல்- பத்துத் தோழியர் உவமை . 240309


விவிலியத் தேடல்- பத்துத் தோழியர் உவமை . 240309



மத்தேயு நற்செய்தி 25 , 1 -13 .



கடந்த ஞாயிற்றுக்கிழமை அலாஸ்காவில் எரிமலை வெடித்ததாகச் செய்திகள் வந்தன .



2000 ஆண்டுகளுக்கு முன்னர் இத்தாலியில் உள்ள வெசூவியஸ் மலை தீப்பிழம்பைக் கக்கியது . எரிமலை குமுறி அடங்கியபோது அருகில் இருந்த போம்பே நகரம் 18 அடி எரிமலைச் சாம்பலில் மூழ்கிக் கிடந்தது .

அந்நகரம் சில காலம் வரை அழிந்த வண்ணம் அப்படியே கிடந்தது . சில காலத்துக்கு முன்னர் அந்த இடம் ஆராய்ச்சியாளர்கள் கவனத்துக்கு வந்தது . கண்ட காட்சி அவர்களை அதிசயிப்பட வைத்தது . அங்கு உறைந்து போயிருந்த உரொட்டி , பழங்கள் , ஒலிவ எண்ணை போன்றவற்றைக் கண்டனர் . இறந்து கிடந்தவர்களின் எலும்புக்கூடுகள் அவர்கள் இருந்த நிலையை விளக்கிக் காட்டின . உடல்கள் அழிந்து விட்டன . ஆனால் தடயங்களை சிர ரசாயன முறைப்படி ஆராய்ந்தனர் .



ஒரு இளம் அன்னை ஒருவர் தம்முடைய குழந்தையை இறுக்கமாக அணைத்தவாறு இறந்திருக்கிறார் . ஒரு உரோமை வீரர் தம்முடைய கடமையில் தவறாது உடல் கவசத்தோடு நின்று கொண்டிருந்திருக்கிறார் . வேறு ஒருவர் தம் கையில் வாளை ஏந்தியபடி நின்று கொண்டிருக்க , காலடியில் தங்கக் கட்டிகளும் , வெள்ளிப் பொருட்களும் கிடந்திருக்கின்றன . அவருக்கு அருகில் 5 பேர் கொல்லப்பட்டுக் கிடந்திருக்கின்றனர் .



இந்த நிகழ்ச்சி நமக்கு இரண்டு கருத்துக்களை வலியுறுத்துகின்றன . நாம் வாழ்வு திடீரென முடிவுக்கு வரும் சாத்தியமுள்ளது . திருடனைப்போல சாவு வரும் . நாம் செல்வம் மிக்கவரா , ஏழையா , இளையோரா , முதிர்ந்த வயதை எட்டியவரா என்று கணக்குப் பார்த்து வருவதில்லை . நாம் கருமை நிறமுடையவரா , சிவந்த மேனியரா எனப் பார்ப்பதில்லை . எல்லோருக்குமே திடீரென வரக்கூடியது சாவு .

அதனால் நாம் எந்நேரமும் சாவதற்குத் தயாராக இருக்கவேண்டும் . மறுவாழ்வுக்கு ஆயத்தமாக இருக்கவேண்டும்.



சாவு வரும்போது நாம் விளக்கோடு எண்ணையையும் கொண்டு சென்ற கன்னியரைப்போல இருப்போமா . அல்லது அறிவிலிப் பெண்களைப்போல தயாரிப்பு இல்லாது இருப்போமா . உரோமைய வீரர் போம்பே நகரத்தில் தம் பணியில் கவனமாக இருந்ததைக் காண்கிறோம் . தம் குழந்தையைப் பாசத்தோடு அணைத்துக் கொண்ட தாயின் அன்பைப் பார்க்கிறோம் . அல்லது பயனில்லாத தங்கக் குவியலைப் பாதுகாத்துக் கொண்டிருந்தவரைப்போல சாவு வரும்போது அழிந்து போகும் செல்வத்துக் காவல் இருப்போமா .



கதையில் மணவாளன் வருவதாகக் கூறும் நம் வாழ்வு ஒருநாள் முடிவுறும் என்பதை விளக்குகிறது . மணவாளனாக வர இருப்பவர் கிறிஸ்துவே எனக் கிறிஸ்தவம் கூறுகிறது. இரண்டாம் முறையாக கிறிஸ்து இவ்வுலகுக்கு வரும்போது அவரவர் வாழ்க்கையின் தரத்திற்கேற்பத் தீர்ப்பளிக்க வருவார் . விளக்குகளுக்கு எண்ணையைத் தயாராக வைத்திருப்பவர்கள் போன்றவர்கள் ஒழுக்க நெறிகளைப் போற்றி வாழ்பவர்கள் . தம் விருப்பப்படி உலகச் சிந்தனைகளோடு ஏனோ தானோ என வாழ்கின்றவர்கள் கடுமையான தண்டனைக்கு உள்ளாவார்கள் . வாழ்க்கையில் வாய்ப்பு என்பது நாம் வாழும் இக்காலத்தில் நமக்குக் கொடுக்கப்பட்டுள்ளது . நல் வாழ்க்கை வாழத் தெரிந்திருந்தும் தீய வழிகளில் வாழ்வோமென்றால் அதற்குத் தீர்வு வீடு பேறு இல்லாமல் போவதே ஆகும் . கதையில் வரும் மணவாளன் , மணவிழா போன்ற கருத்துக்கள் நமக்கு என்ன கூற விரும்புகின்றன . வாழ்வில் நன்னெறிப்படி வாழ்வது என்பது மகிழ்ச்சியைக் கொன்றுவிட்டு நாளெல்லாம் அழுமூஞ்சியோடு கவலைகளோடு வாழ்வது என்பது இல்லை . கடவுள் விருப்பத்தை நிறைவேற்றுபவர் மணவிழாப் போல எந்நாளும் மகிழ்ந்திருக்கும் நிலையில் வாழ்கிறார் . மகிழ்ச்சியில்லாத வாழ்வு கிறிஸ்தவ வாழ்வு இல்லை .



அவரவர் தத்தமது வாழ்வுக்குப் பொறுப்பேற்க வேண்டும் . என் தாத்தா பக்தியான கிறிஸ்தவர் . என் மாமா திருப்பணியில் இருக்கிறார் எனக்கூறுவதில் அர்த்தம் ஏதும் இல்லை . அவரவர் ஆன்மாவை அவரவர் பக்குவமாக , புனிதமாக வைத்துக் கொள்வது தனிப்பட்ட ஒவ்வொருவருடைய கடமையாகும் . ஆண்டவர் நம்மிடம் கணக்குக் கேட்கும்போது அடுத்த வீட்டுக்காரர் தினமும் செபம் செய்பவர் எனக் கூறி அதை நம் கணக்கில் வரவுவைத்து நாம் வான்வீட்டை நமதாக்க முடியாது .



வாழ்வு திடீரென முடிவுக்கு வரும் என்பதையும் , நாம் கடவுளைச் சந்திக்கத் தயாராக இருக்கவேண்டும் என்பதையும் இன்றைய பத்துத் தோழியர் உவமை விளக்கிக் கூறுகிறது . வாழ்வின் முடிவு திடீரென வரும் . நாம் நமது வான்வீடு செல்ல எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் . இந்தக் கருத்து நம் வாழ்வில் மாற்றவேண்டியவற்றை மாற்றுவதற்கு எச்சரிக்கை மணியை அடிக்கிறது . இருபுறமும் கருக்கு வாய்ந்த கூரிய வாளைப் போல இந்த உவமை நம்மை மறுவாழ்வுக்குத் தயார் செய்யுமாறு வற்புறுத்துகிறது .



இந்த உவமை தவக்காலத்துக்கு ஏற்ற நல்ல கருத்துக் கதை . நாமும் வருங்கால வாழ்வை வளமாக்க அருள் வாழ்வில் நிலைத்திருந்து , அறஞ்செய்து வாழ்வோமா .

 








All the contents on this site are copyrighted ©.