2009-03-23 15:23:21

தேசிய ஒப்புரவுக்காக உழைப்பதிலும் மன்னிப்பை வழங்குவதிலும் மேம்படுவதன் வழியாக, வன்முறை ஒருபொழுதும் உரையாடலை மேற்கொள்ளாது என்று காட்டுங்கள், திருத்தந்தை


மார்ச்23,2009. பிரச்சனைகள் மற்றும் தடங்கல்கள் மத்தியிலும், அங்கோலா மக்கள், மன்னிப்பு நீதி மற்றும் ஒருமைப்பாட்டுப் பாதையில் தங்கள் எதிர்காலத்தைக் கட்டுவதற்கு உறுதி பூண்டுள்ளார்கள். இந்தப் பணியில், அதிகம் உதவி தேவைப்படும் மக்களின் அடிப்படை ஏக்கங்கள் நிறைவேற்றப்படுவதற்கு முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டும் என்று தான் சொல்ல விரும்புவதாகக் கூறினார். உணவு, வேலை, குடியிருப்பு மற்றும் பிற அடிப்படைத் தேவைகள் இல்லாமல் நம் சகோதர சகோதரிகள் கஷ்டப்படும் சூழலில் நம் இதயங்கள் அமைதியைக் காண முடியாது. இதற்குப் பதில் சொல்ல வேண்டுமெனில், தலைமுறைகளுக்கிடையேயும் நாடுகள் மற்றும் கண்டங்களுக்கு இடையேயும் தோழமையுணர்வு கட்டப்பட வேண்டும். இப்பூமியின் வளங்கள் எல்லா மக்களுக்கும் சமமாகப் பகிரப்பட வேண்டும்.

வருகிற அக்டோபரில் வத்திக்கானில் நடைபெறவுள்ள ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மாமன்றத்தை ஆவலோடு எதிர்நோக்குகிறேன். இந்த நாட்டை விட்டு வெளியேறி மீண்டும் குடியமரக் காத்திருக்கும் எண்ணற்ற அகதிகளுக்கு உதவியும் பாதுகாப்பும் கிடைக்கப் பெறுமாறு இறைவனை வேண்டுகிறேன். பாலூட்டும் தாய் தன் குழந்தையை மறந்தாலும் நான் உன்னை மறக்கமாட்டேன் என்ற விண்ணகக் கடவுளின் வார்த்தைகளை மீண்டும் கூறுகிறேன். கடவுள் உங்களைத் தம் பிள்ளைகளாக அன்பு செய்கிறார். உங்கள் வேலைகளையும் ஏக்கங்களையும் இரவும் பகலும் காக்கிறார், ஆப்ரிக்க நண்பர்களே, எனதருமை சகோதர சகோதரிகளே, இதனை மனத்தில் இருத்துங்கள். அமைதியை ஊக்குவிப்பதில் சோர்ந்து போகாதீர்கள். தேசிய ஒப்புரவுக்காக உழைப்பதிலும் மன்னிப்பை வழங்குவதிலும் மேம்படுவதன் வழியாக, வன்முறை ஒருபொழுதும் உரையாடலை மேற்கொள்ளாது என்று காட்டுங்கள். பயமும் மனத்தளர்வும் நம்பிக்கையை மேற்கொண்டுவிடக் கூடாது. மனவெறுப்பு, சகோதரத்துவ அன்பை மேற்கொண்டுவிடக் கூடாது. அங்கோலாவை கடவுள் ஆசீர்வதிப்பாராக. இந்த அன்பு நாட்டில் இன்றும் என்றும் வாழுவோரை அவர் தம் அருளால் நிறைக்கட்டும் என்று சொல்லி இந்நாட்டுக்கானத் தனது பிரியாவிடை உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.

 








All the contents on this site are copyrighted ©.