2009-03-23 15:22:07

திருத்தந்தையின் ஆப்ரிக்காவுக்கான திருப்பயண நிறைவு


மார்ச்23,2009. ஆப்ரிக்காவின் மேற்குக் கரையில் தென் பகுதியில் அமைந்துள்ளது அங்கோலா நாடு. இதன் தலைநகர் லுவாண்டாவில் கடந்த வெள்ளியன்று திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை. இஞ்ஞாயிறு காலைத் திருத்தந்தை நிகழ்த்திய திருப்பலியில் கடலென விசுவாசிகள் கூடியிருந்து அவரின் வார்த்தைகளைக் கேட்டனர். அவர்களிடம் அவர் அமைதியையும் பிறரில் நம்பிக்கையையும் ஏற்படுத்துபவர்களாகவும் இருங்கள் என்றார். ஆப்ரிக்கக் கண்டத்திற்குப் பிற நாடுகள் உதவுமாறும் அழைப்புவிடுத்தார். அன்று மாலை லுவாண்டா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 12 கிலோ மீட்டரில் இருக்கின்ற புனித அந்தோணியார் பங்குத்தளம் சென்றார் திருத்தந்தை. இப்பங்கை நடத்தும் கப்புச்சின் துறவிகள் ஏறத்தாழ 2000 சிறாருக்கு பள்ளியையும் நடத்துகின்றனர். இத்துறவியர் கட்டியுள்ள இவ்வாலயத்தில் மகளிர் முன்னேற்றத்திற்காக உழைக்கும் கத்தோலிக்க இயக்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தார்.

அங்கோலா ஆயர் பேரவையின் பொதுநிலையினர் ஆணையத் தலைவர் பேராயர் ஜோசே தெ கெய்ரோஸ் ஆல்வெசும் அவரைத் தொடர்ந்து இரண்டு மகளிர் பிரதிநிதிகளும் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். பின்னர் திருத்தந்தையும் உரை நிகழ்த்தினார்.

பின்னர் அங்கு வழங்கப்பட்ட இரண்டு பொருட்களைப் பெற்றுக் கொண்டு அவர்களை ஆசீர்வதித்து லுவாண்டா திருப்பீடத் தூதரகம் சென்றார் திருத்தந்தை. இத்துடன் ஞாயிறு தின நிகழ்வுகள் முற்றுப் பெற்றன.

இத்திங்கள் திருத்தந்தையின் 11வது வெளிநாட்டுத் திருப்பயணத்தின் நிறைவு நாள். காலை 7.30 மணிக்குத் திருப்பீடத் தூதரகத்தில் தனியாகத் திருப்பலி நிகழ்த்திய பின்னர் அவ்வில்லத்தில் பிரியாவிடை பெற்று லுவாண்டா 4 தெ பெவேரெய்ரோ சர்வதேச விமானநிலையத்திற்கு 5 கிலோ மீட்டர் தூரம் குண்டு துளைக்காதக் கண்ணாடிக் காரில் சென்றார். விமானநிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த சிறிய மேடையில் அவருக்குப் பிரியாவிடை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. முதலில் அங்கோலா அரசுத்தலைவர் ஜோசெ எத்வார்தோ தோஸ் சாந்தோஸ் நன்றியுரையாற்றினார். பின்னர் திருத்தந்தையும் அங்கோலாவில் தனக்குக் கிடைத்த இனிய வரவேற்பிற்கு நன்றி தெரிவித்த அவர் பல இன்னல்களுக்கு மத்தியிலும் திருச்சபை உயிர்த்துடிப்புடனும் முழு ஆர்வத்துடனும் வேலை செய்வதற்கு இறைவனுக்கு நன்றி கூறுகிறேன் என்று தனது இறுதி உரையைத் தொடங்கினார்.

பின்னர் இராணுவ அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. வத்திக்கான் மற்றும் அங்கோலா நாடுகளின் பண்கள் இசைக்கப்பட்டன. அங்கு அவரை வழியனுப்ப வந்திருந்த ஆயர்கள், அரசு அதிகாரிகள் என அனைவரையும் கைகுலுக்கி வாழ்த்தி உரோமைக்குப் பயணமானார் பாப்பிறை. உள்ளூர் நேரம் காலை 10.30 மணிக்கு அதாவது இந்திய நேரம் பிற்பகல் 3 மணிக்கு அவரை ஏற்றிக் கொண்டு பறந்த ஆல்இத்தாலியா பி777 விமானம் கண்களைவிட்டு மறையும் வரை மக்கள் வானைப் பார்த்தவாறு ஆடிக்கொண்டும் பாடிக்கொண்டும் நின்று கொண்டிருந்தனர். இந்த 5630 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க 7மணி முப்பது நிமிடங்கள் எடுக்கும். உரோமைக்குப் புறப்படும் போது அங்கோலா அரசுத் தலைவருக்கு வாழ்த்துத் தந்திச் செய்தியையும் அனுப்பினார் திருத்தந்தை.

இத்துடன் திருத்தந்தையின் 11வது வெளிநாட்டுத் திருப்பயணம் மற்றும் ஆப்ரிக்காவுக்கான முதல் திருப்பயணம் முற்றுப் பெற்றது.

திருத்தந்தையின் இப்பயணத்திற்காகப் புதிய சாலைகள் அமைத்தல், புதிய மரங்கள் நடுதல், புதிய நடைபாதைகள் அமைத்தல், ஆலயப் புதுப்பித்தல் என இலட்சக்கணக்கில் செலவு செய்துள்ளது அங்கோலா. இது மேற்கில் அட்லாண்டிக் பெருங்கடலையும் வடக்கிலும் வடகிழக்கிலும் காங்கோ ஜனநாயகக் குடியரசையும் கிழக்கே ஜாம்பியாவையும் தெற்கே நமீபியாவையும் எல்லைகளாகக் கொண்ட நாடு. 1600 கிலோ மீட்டர் நீள கடற்கரையையும் கொண்ட இந்நாட்டில் எண்ணெய்யும் வைரக் கனிமமும் நிறைந்துள்ளது. 1500கள் முதல் போர்த்துக்கீசியரின் காலனி நாடாக இருந்த அங்கோலா 1975, நவம்பரில்தான் சுதந்திரமடைந்தது. எனவே இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி போர்த்துக்கீசியமாகும். நாடு சுதந்திரமடைந்த கையோடு அங்கோலா புரட்சி படைகளுக்கும் அரசுக்குமிடையே பிரச்சனையும் உருவெடுத்து அது உள்நாட்டுப் போராக வெடித்தது. அப்போர் ஏறத்தாழ 27 வருடங்கள் இடம் பெற்றது. 2002ல் முடிவடைந்து அமைதி ஒப்பந்தமும் கையெழுத்தானது. கடந்த செப்டம்பரில் முதல் பொதுத் தேர்தல் நடைபெற்றது. தற்சமயம் நாட்டைக் கட்டி எழுப்பும் முயற்சிகளும் இடம் பெற்று வருகின்றன. எனினும் நாட்டில் வறுமை நிலவுகிறது. உலகின் 180 நாடுகளில் மோசமான நாடுகளின் வரிசையில் 158 வது இடம் அங்கோலாவுக்குக் கொடுக்கப்பட்டுள்ளது. பில்லி சூனியத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் உள்ளனர். எனவேதான் திருத்தந்தை அந்நாட்டுக் குருக்கள் துறவிகளுக்கு ஆற்றிய உரையில் மாயமந்திரம், பில்லிசூனியம், தீய ஆவிகள் இவற்றில் நம்பிக்கை உள்ளவர்களை அவற்றிலிருந்து மீண்டுவர உதவுமாறு கத்தோலிக்கருக்கு அழைப்புவிடுத்தார். எனினும் இந்நாட்டை காலனியாகக் கொண்டிருந்த போர்த்துக்கீசியர்கள் கத்தோலிக்க விசுவாசத்தை விட்டுச் சென்றனர். இந்நாட்டின் ஏறத்தாழ ஒரு கோடியே 60 இலட்சம் பேரில் 55.6 விழுக்காட்டினர் கத்தோலிக்கர். 14.7 விழுக்காட்டினர் புரோட்டஸ்டாண்ட் சபையினர், 4.3 விழுக்காட்டினர் பிற கிறிஸ்தவ சபையினர். 30.3 விழுக்காட்டினர் பிற மதத்தவர்.

அமைதி நீதி மற்றும் ஒப்புரவுக்கான இந்நாட்டினரின் பணியை இறைவன் ஆசீர்வதிக்குமாறு நாமும் மன்றாடுவோம்.








All the contents on this site are copyrighted ©.