2009-03-23 15:24:41

குடும்பத்தின் நிலையான தன்மைக்கும் வளர்ச்சிக்கும் தாயின் இருப்பு முக்கியமானது, திருத்தந்தை


மார்ச்23,2009 கானாவூர் திருமண விருந்தில் இரசம் தீர்ந்து விடவே, “அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்” என்று பணியாளரிடம் சொல்லி அக்குறையை தீர்த்து வைத்தவர் அன்னைமரியா. இவரின் இந்தத் தாய்க்குரிய தலையீடு, இறைவல்லமைக்கும் ஏழைகளுக்குமிடையேயான புதிய உடன்படிக்கையை முன்குறிப்பதாய் இருக்கின்றது. இவ்வேளையில் இங்குப் பணியாற்றும் கப்புச்சின் துறவிகளுக்கும் அங்கு அமர்ந்திருந்த அனைவருக்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்து பல பெண்கள் தொடர்ந்து எதிர் நோக்கும் கேடான நிலைகளை, குறிப்பாக பெண்கள் குறித்த ஆண்களின் நடத்தைகளையும் எண்ணப் போக்குகளையும் விளக்கினார்.

விண்ணகப் படைப்பாளர் தான் படைத்த அனைத்தையும் நோக்கினார். ஏதோ ஒன்று இல்லாமல் இருப்பதாகக் கண்டார். ஆண் தனிமையாக இல்லாதிருந்தால் எல்லாமே நன்றாக இருக்கும் என்று உணர்ந்து அவனுக்குத் தகுந்த துணையை உருவாக்குவேன் என்று சொல்லி, அவனின் எலும்பிலிருந்தே பெண்ணை உண்டாக்கினார் என்று விவிலியம் கூறுகிறது. எனவே ஆண் மற்றும் பெண்ணின் சமமாண்பு உறுதி செய்யப்பட்டு பாதுகாக்கப்பட வேண்டும். அவர்கள் இருவருமே மனிதர்தான். ஆணும் பெண்ணும் ஒருவர் மற்றவரை அங்கீகரித்து ஒருவர் மற்றவருக்குத் தன்னையே கொடையாகக் கொடுத்து பொதுநலனுக்காக உழைக்க அழைக்கப்படுகிறார்கள். தொழிட்நுட்ப ஆதிக்கம் மிகுந்துள்ள இக்காலத்தில் இது அதிகம் தேவைப்படுகின்றது. கடும் வறுமை மற்றும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள இடங்களில் மனித மாண்பையும் குடும்பத்தையும் கலாச்சார சமய விழுமியங்களையும் எப்பொழுதும் பாதுகாப்பது பெண்களே. அன்பு சகோதர சகோதரிகளே, இந்நேரத்தில் தெரேசா கோமஸ், மரியா பொனினோ ஆகிய இரு பெண் சாதனையாளர்களைக் குறிப்பிட்டாக வேண்டும். அங்கோலியப் பெண்ணான தெரேசா கோமஸ், சும்பே நகரில் மகிழ்வான திருமண வாழ்வை நடத்தி ஏழு குழந்தைகளுக்குத் தாயாக இருந்து 2004ல் இறந்தவர். இவர் 1975, 76ம் ஆண்டுகளில் எந்த அநீதிகளுக்கும் வளைந்து கொடுக்காமல் வீரத்துவமான கிறிஸ்தவ விசுவாச வாழ்வை வாழ்ந்தவர். இத்தாலிய குழந்தை நல மருத்துவராகிய மரியா பொனினோ, ஆப்ரிக்கக் கண்டத்தில் பல மறைப்பணித்தளங்களில் மிகத் திறமையுடன் தன்னார்வப் பணி செய்து கடும் தொற்று நோய்க் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு 2005ல் லுவாண்டா மருத்துவமனையில் இறந்தார்.

அன்பு அங்கோலியர்களே, மகளிரின் மாண்பு ஆண்களுக்குச் சமமானது என்பதால் பொதுநல வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் செயல்பட அவர்களுக்கு முழு உரிமை இருக்கின்றது என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கக்கூடாது. மேலும் பெண்ணின் தனிமாண்புணர்வானது, அவளுக்கு குடும்பத்தில் கிடைக்கும் பொருளிய மற்றும் ஆன்மீக நலனின் விளைவிலிருந்து பெறப்படுவதாகும். குடும்பத்தின் நிலையான தன்மைக்கும் வளர்ச்சிக்கும் தாயின் இருப்பு முக்கியமானது. எந்தத் தம்பதியரும் தங்களது சொந்தச் சக்தியினால் மட்டும் குழந்தைகளுக்கு அன்பையும் வாழ்வு பற்றிய புரிந்து கொள்ளுதலையும் கொடுக்க முடியாது. இறைவன் தம் மகன் இயேசு வழியாகவும் தூய ஆவியின் கொடையின் மூலமும் ஏற்படுத்திய திருச்சபைக்கு மேலான அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது என்பதைக் கிறிஸ்தவர்கள் அறிந்துள்ளார்கள். எனவேதான் ஒவ்வொரு கிறிஸ்தவக் குடும்பமும் திருச்சபை என்ற பெரிய குடும்பத்தில் வைத்துப் பாதுகாக்கப்படுகின்றது. கானாவூர் திருமண விருந்தில் ஏற்பட்ட குறையைத் தீர்த்த அன்னைமரியாவிடம் உங்களை அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லி இவ்வுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை








All the contents on this site are copyrighted ©.