2009-03-22 15:21:50

மார்ச் 23 தவக்காலச் சிந்தனை நற்செய்தி யோவா 4 : 43-54


இரண்டு நாளுக்குப் பிறகு இயேசு அங்கிருந்து கலிலேயாவுக்குச் சென்றார். தம் சொந்த ஊரில் இறைவாக்கினருக்கு மதிப்பு இராது என்று அவரே கூறியிருந்தார். அவர் கலிலேயா வந்தபோது கலிலேயர் அவரை வரவேற்றனர். ஏனெனில் அவர்கள் திருவிழாவுக்குச் சென்றிருந்தபோது எருசலேமில் அவர் செய்தவை அனைத்தையும் கண்டிருந்தனர்.46 கலிலேயாவில் உள்ள கானாவுக்கு இயேசு மீண்டும் சென்றார். அங்கே தான் அவர் தண்ணீரைத் திராட்சை இரசம் ஆக்கியிருந்தார். கப்பர்நாகுமில் அரச அலுவலரின் மகன் ஒருவன் நோயுற்றிருந்தான். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்திருப்பதாகக் கேள்விப்பட்ட அரச அலுவலர் அவரிடம் சென்று, சாகும் தறுவாயிலிருந்த தம் மகனை நலமாக்க வருமாறு வேண்டினார். இயேசு அவரை நோக்கி, ' அடையாளங்களையும் அருஞ்செயல்களையும் கண்டாலன்றி நீங்கள் நம்பவே மாட்டீர்கள். ' என்றார். அரச அலுவலர் இயேசுவிடம், ' ஐயா, என் மகன் இறக்குமுன் வாரும் ' என்றார். இயேசு அவரிடம், ' நீர் புறப்பட்டுப்போம். உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்றார். அவரும் இயேசு தம்மிடம் சொன்ன வார்த்தையை நம்பிப் புறப்பட்டுப் போனார். அவர் போய்க் கொண்டிருக்கும் போதே அவருடைய பணியாளர்கள் அவருக்கு எதிர்கொண்டுவந்து மகன் பிழைத்துக்கொண்டான் என்று கூறினார்கள். ' எத்தனை மணிக்கு நோய் நீங்கியது? ' என்று அவர் அவர்களிடம் வினவ, அவர்கள், ' நேற்றுப் பிற்பகல் ஒருமணிக்கு காய்ச்சல் நீங்கியது ' என்றார்கள். ' உம் மகன் பிழைத்துக் கொள்வான் ' என்று இயேசு அந்நேரத்தில்தான் கூறினார் என்பதை அவன் தந்தை நினைவுகூர்ந்தார். அவரும் அவர் வீட்டார் அனைவரும் இயேசுவை நம்பினர். இயேசு யூதேயாவிலிருந்து கலிலேயாவுக்கு வந்தபிறகு செய்த இரண்டாவது அரும் அடையாளம் இதுவே.

நம்பிக்கைதான் மனித வாழ்க்கைக்கு இன்றியமையாதது. ஒருவருடைய அடிப்படை நம்பிக்கைதான் அவரது ஆளுமைக்கு வடிவம் கொடுக்கின்றன. அடையாளங்களையும் அறிகுறிகளையும் கண்டு நம்பிய மக்களின் உணர்வுகளை இயேசு கடிந்து கொள்கிறார். ஆனால் இந்நற்செய்திப் பகுதியில் அரச அலுவலர் இயேசு சொன்ன வார்த்தையை நம்பி புறப்பட்டுப் போனார். அவரது நம்பிக்கை நலமளித்தது. நம் வாழ்விலும் இந்நம்பிக்கை முக்கிய இடம் பெற வேண்டும்.








All the contents on this site are copyrighted ©.