2009-03-22 15:15:22

கிறிஸ்துவில் இந்தப் புதிய வாழ்வு, மன்னிப்பு, நம்பிக்கை ஆகிய செய்தியை அறிவிக்கவே ஆப்ரிக்காவுக்கு வந்துள்ளேன், திருத்தந்தை


மார்ச்22,2009. “தம் ஒரே மகன் மீது நம்பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும்பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின்மீது அன்பு கூர்ந்தார்”. கடவுளின் வாக்குறுதிகள் நிறைவேறுவதற்காகக் காத்திருக்கும் நமக்கு, இந்நற்செய்தி வார்த்தைகள் மகிழ்வையும் நம்பிக்கையையும் தருகின்றன. இவ்வேளையில் அங்கோலாவின் பல பகுதிகள், இன்னும், போஸ்த்வானா, லெசோத்தோ, மொசாம்பிக், தென்னாப்ரிக்கா சுவாசிலாந்து, ஜிம்பாபுவே ஆகிய நாடுகளிலிருந்து வருகை தந்திருக்கும் அனைத்து விசுவாசிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள் என்று சொல்லி இஞ்ஞாயிறு திருப்பலி வாசகங்களின் அடிப்படையில் மறையுரை ஆற்றினார் திருத்தந்தை. அதன் சுருக்கத்திற்கு இப்பொழுது செவிமடுப்போம்.

தனியாட்களையும் சமூகங்களையும் முழுமனித சமுதாயத்தையும் கட்டி எழுப்புவதற்கான கடவுளின் வார்த்தை புறக்கணிக்கப்படும் பொழுதும், கடவுளின் திருச்சட்டம் கேலிக்கு உள்ளாக்கப்படும் பொழுதும் அழிவும் அநீதியுமே அவற்றின் விளைவாக இருக்க முடியும். அங்கோலாவில் இஞ்ஞாயிறு தேசிய ஒப்புரவுக்கான செபம் மற்றும் தியாக நாளாகக் கடைபிடிக்கப்படுகிறது. உண்மையான ஒப்புரவு, இதயமாற்றம் மற்றும் புதிய வழியிலான சிந்தனையின் கனியாக இருக்க முடியும் என்று நற்செய்தி போதிக்கின்றது. குற்றங்களின் காரணமாக நாம் இறந்தவர்களாய் இருந்த போது கிறிஸ்துவின் அன்பும் இரக்கமும் அவரில் ஒப்புரவையும் புதிய வாழ்வையும் கொண்டு வந்தன. எனவே கிறிஸ்துவின் அன்பு கல்லான இதயங்களை மாற்றக்கூடியது. கடவுள் மட்டுமே அனைத்தையும் புதியனவாக்கவல்லவர்.

கிறிஸ்துவில் இந்தப் புதிய வாழ்வு, மன்னிப்பு, நம்பிக்கை ஆகிய செய்தியை அறிவிக்கவே ஆப்ரிக்காவுக்கு வந்துள்ளேன். மூன்று நாட்களுக்கு முன்னர் யவுந்தேயில், ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மாமன்றத்திற்கான தொகுப்பு ஏட்டினை வெளியிட்டேன். இந்தப் பெரிய கண்டத்தில் ஒவ்வொரு கிறிஸ்தவரும் இறைவனின் இரக்கம்நிறை அன்பின் குணப்படுத்துதலை அனுபவிக்கவும் அவர்கள் உண்மையான ஒப்புரவுக்குச் சான்றுகளாகத் திகழவும் செபிக்குமாறு இன்று உங்களைக் கேட்கிறேன் என்றுரைத்த திருத்தந்தை மேலும் தொடர்ந்தார்............

அன்பு நண்பர்களே, திருத்தந்தை உங்களுக்கும் உங்கள் குழந்தைகளுக்கும் இச்செய்தியையே கொண்டு வந்துள்ளார். உங்கள் அன்பு நாட்டிற்கு நல்லதோர் எதிர்காலத்தைக் கட்டி எழுப்புபவர்களாக நீங்கள் அமைவதற்குத் தேவையான வல்லமையை தூய ஆவியிடமிருந்து பெற்றுள்ளீர்கள். திருமுழுக்கில் நீங்கள் பெற்றுள்ள கிறிஸ்துவின் ஒளி எனும் கொடைக்கு விசுவாசமாகவும் நன்றியுள்ளவர்களாகவும் இருங்கள். உங்கள் நாட்டுக் கலாச்சாரம் மற்றும் மரபுகளில் காணப்படும் ஆழமான மனித விழுமியங்களை உறுதிப்படுத்தவும் தூய்மையாக்கவும் மேம்படுத்தவும் நற்செய்தியால் இயலும் என்பதில் உறுதியாய் இருங்கள். கிறிஸ்துவின் ஒளி எனும் விலைமதிப்பற்ற செல்வத்தைக் கொண்டுவந்த மறைபோதகர்களுக்கும், அதனைத் தலைமுறைகளுக்கும் அறிவிக்க வேண்டுமென்பதற்காகத் தியாகங்கள் பல செய்துள்ள பல கிறிஸ்துவப் பெற்றோர், ஆசிரியர்கள், வேதியர்கள், குருக்கள், துறவிகள் என அனைவருக்கும் நன்றியுள்ளவர்களாக இருங்கள். மீட்பராம் கிறிஸ்துவில் விசுவாசம் வைப்பதன் மூலம் முழு மனிதக் குடும்பமும் அழைக்கப்பட்டுள்ள ஒன்றிப்புக்கு அங்கோலாத் திருச்சபையும் முழு ஆப்ரிக்கத் திருச்சபையும் உலகின்முன் சான்றாக விளங்க வேண்டும் என்பதை பெரும் சவாலாக ஏற்று வாழ வேண்டும்.

உலகின் ஒளி ஏற்கனவே இவவுலகிற்கு வந்திருந்தும் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்புகின்றனர். ஏனெனில் அவர்களின் செயல்கள் தீயனவாக இருக்கின்றன. இன்று உலகின் பல பாகங்களில் எவ்வளவு இருள் கவ்வியுள்ளது. அன்பு அங்கோலா நாடு உட்பட ஆப்ரிக்காவைத் தீமையின் மேகம் சூழ்ந்திருக்கின்றது. போரின் தீமைகளையும் இனங்களுக்கிடையேயான போட்டிகளால் இடம் பெறும் கொலைகளையும், மனிதரின் இதயங்களைச் சுரண்டும் பேராசையையும், ஏழைகள் அடிமைப்படுத்தப்படுதலையும், வருங்காலத் தலைமுறைகளின் வளங்கள் திருடப்படுவதையும் நினைத்துப் பார்க்கிறோம். தன்னலத்தின் நயவஞ்சக உணர்வு, இன்று தனிமனிதரை ஆட்கொண்டுள்ளது, குடும்பங்களைப் பிரித்துள்ளது, சுயதியாகத்தையும் பெருந்தன்மையையும் அகற்றி விடுகின்றது. இன்பமே சிறந்தது என்ற கோட்பாட்டிற்குள் தள்ளி போதைப் பொருள் பயன்பாட்டிற்கும் பொறுப்பற்ற பாலியலுக்கும், திருமணப்பந்தத்தைச் சீர்குலைத்து குடும்பங்கள் பிரிவதற்கும் கருக்கலைப்பு மூலம் அப்பாவி மனித உயிர்கள் அழிக்கப்படுவதற்கும் காரணமாக அமைகின்றது. எனினும் கடவுளின் வார்த்தை கட்டவிழ்க்கப்பட்ட வார்த்தையாக இருக்கின்றது. அவர் நமக்குத் தமது கட்டளைகளை சுமையாக இல்லாமல் சுதந்திரத்தின் ஊற்றாகத் தந்துள்ளார். ஞானத்தின் மக்களாகவும் நீதி மற்றும் அமைதியின் போதகர்களாகவும் மாறும் சுதந்திரமாகும் அது. எனவே உங்கள் குடும்பங்களிலும் சமூகஙகளிலும் உண்மையின்படி வாழ்ந்து விசுவாசம், நம்பிக்கை மற்றும் அன்பை ஒளிரச் செய்யுங்கள். இன, மொழி பாகுபாடின்றி ஒருவரையொருவர் அன்பு செய்யுங்கள்.

அங்கோலா மற்றும் ஆப்ரிக்கா முழுவதிலுமுள்ள அன்பு இளையோர் நண்பர்களே, உங்கள் நாட்டின் எதிர்கால நம்பிக்கையும் நல்லதோர் எதிர்காலத்தின் நம்பிக்கையும் நீங்களே. இயேசுவுடனான நட்பில் வளரத் தொடங்குங்கள். தினமும் அவர் வார்த்தைக்கு செவிசாய்த்து அவரது திட்டத்தை நிறைவேற்றும் வழிகளைத் தேடுங்கள். உங்கள் வயதையொத்தவர்களுக்கு நற்செய்தியை அறிவியுங்கள். உங்களது சான்று வாழ்வு திருச்சபைக்குத் தேவைப்படுகின்றது. கடவுளது அழைப்புக்குத் தாராளமாகப் பதில் சொல்லப் பயப்படாதீர்கள்.

அங்கோலா மற்றும் தெற்குப் பகுதி ஆப்ரிக்கா முழுவதிலுமுள்ள இறைமக்களே, நீங்கள் எழுந்து நில்லுங்கள். கடவுளின் வாக்குறுதிகளில் நம்பிக்கை வைத்து நம்பிக்கையோடு எதிர்காலத்தை நோக்குங்கள். உண்மையில் வாழுங்கள். இவ்வாறு நீங்கள் நிலையான ஒப்புரவு, நீதி மற்றும் அமைதியை எதிர்காலத்திற்கு விட்டுச் செல்வீர்கள் என்று சொல்லி இம்மறையுரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.