2009-03-22 15:13:20

அங்கோலாவின் லுவாண்டாவில் திருத்தந்தை


மார்ச்22,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இச்செவ்வாயன்று தொடங்கிய 11வது வெளிநாட்டுத் திருப்பயணம் மற்றும் ஆப்ரிக்காவுக்கான இந்த முதல் திருப்பயணத்தில் காமரூன் தலைநகர் யவுந்தேயில் பயணத்திட்டங்களை முடித்து இவ்வெள்ளியன்று அங்கோலா தலைநகர் லுவாண்டா சென்றார். அந்நாட்டில் போர்த்துக்கீசிய மறைபோதகர்களால் கத்தோலிக்க விசுவாசம் வித்திடப்பட்டு 500 ஆண்டுகளைக் கடந்துள்ளதை நினைவுபடுத்தினார். தீய ஆவிகளின் சக்திகளால் அந்நாட்டினர் ஆட்கொள்ளப்படாதிருக்கக் கேட்டுக் கொண்டார். இச்சனிக்கிழமை உள்ளூர் நேரம் மாலை 4.30 மணிக்கு, அதாவது இந்திய நேரம் இரவு 9 மணிக்கு லுவாண்டா கால்பந்தாட்ட விளையாட்டரங்கத்திற்கு இளையோரைச் சந்திக்கச் சென்றார். திருப்பீடத் தூதரகத்திலிருந்து ஐந்து கிலோ மீட்டரில் இருக்கின்ற தோஸ் கோக்கெய்ரோஸ் எனப்படும் அவ்வரங்கம் சென்று குண்டு துளைக்காத கண்ணாடியால் பொருத்தப்பட்ட காரில் அவர் அங்கு வலம் வந்த போது இளையோரின் ஆரவாரம் வானை முட்டியது என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் இளையோரின் உயிர்துடிப்பான வாழ்வை இது எடுத்துச் சொல்வதாக இருந்தது.

நான்கு மணி நேரத்திற்கு முன்னரே இளையோர் முண்டியடித்துக் கொண்டு அங்கு நுழைய முயன்றதில் 20 வயது ஓர் இளைஞனும் ஓர் இளைஞியும் உயிரிழந்தனர். 18 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். திருத்தந்தை இச்செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்ததாக திருப்பீடப் பேச்சாளர் அருட்திரு பெதரிக்கோ லொம்பார்தி கூறினார். திருப்பீடச் செயலர் கர்தினால் தர்ச்சீசியோ பெர்த்தோனே மருத்துவமனை சென்று காயமடைந்தவர்களைப் பார்வையிட்டு ஆறுதலும் கூறினார். 2004ம் ஆண்டில் கட்டப்பட்ட இவ்வரங்கத்தில் முப்பதாயிரம் பேருக்கு மேல் அமரமுடியும். ஆடிப்பாடிக் கொண்டு ஆவலோடு அவ்விடத்தை நிறைத்திருந்த இளையோருக்குத் தனது உரையையும் வழங்கினார் திருத்தந்தை.

இந்நிகழ்வில் முதலில் இரண்டு இளையோர் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினர். இதோ நான் அனைத்தையும் புதியதாக்குகிறேன் என்ற திருவெளிப்பாட்டுப் பகுதியை மையமாக வைத்து நடைபெற்ற இச்சந்திப்பை முடித்து இளையோரின் அன்பு மழையில் நனைந்து அவர்களை ஆசீர்வதித்து அவ்விடம் விட்டு திருப்பீடத் தூதரகத்திற்குப் புறப்பட்டார் திருத்தந்தை. அவர் அங்கிருந்து சென்றாலும் இளையோரின் ஆரவாரம் எங்கும் கேட்டுக் கொண்டே இருந்தது. இத்துடன் திருத்தந்தையின் சனிக்கிழமை நிகழ்வுகள் முற்றுப்பெற்றன.

ஏழு நாட்கள் கொண்ட இத்திருப்பயணத்தின் ஆறாவது நாளான இஞ்ஞாயிறன்று உள்ளூர் நேரம் காலை 9 மணிக்கு, அதாவது இந்திய நேரம் மதியம் 1.30 மணிக்கு லுவாண்டா திருப்பீடத் தூதரகத்திலிருந்து 14 கிலோ மீட்டரில் இருக்கின்ற சிமென்கோலா வளாகம் சென்றார் திருத்தந்தை. சிமெண்ட் தொழிற்சாலைக்கு முன்புறமிருக்கின்ற இவ்வளாகத்தில் இரண்டு இலட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வெண்மை நிறத்தாலான ஆடை அணிந்து அமர்ந்திருந்தது கண்கொள்ளாக் காட்சியாக இருந்தது. திறந்த காரில் கைகளை உயர்த்தி ஆசீர்வதித்துக் கொண்டே அங்கு வந்த பாப்பிறையைக் கண்டதும் விசுவாசிகளின் கரவொலியைக் கேட்க வேண்டுமே. ஆப்ரிக்க மக்களின் உடல் அமைப்பே ஒரு நளினத்துடன் இருப்பதாகவே எண்ணத் தோன்றுகிறது. சும்மா நிற்கும் போதே இலேசாக உடலை ஒருவித ரிதத்துடன் ஆட்டிக் கொண்டே நிற்கின்றனர். இங்கு இம்பிசா எனப்படும், அங்கோலா, சா தொமே, போஸ்த்வானா, லெசோத்தோ, மொசாம்பிக், தென்னாப்ரிக்கா சுவாசிலாந்து, ஜிம்பாபுவே ஆகிய தெற்குப் பகுதி ஆப்ரிக்க நாடுகளின் ஆயர்களோடு சேர்ந்து திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை.

சீஸ்ட் எனப்படும் தென்பிராந்திய ஆப்ரிக்க ஆயர் பேரவைத் தலைவர் முதலில் திருத்தந்தையை வரவேற்றுப் பேசினார். இச்சனிக்கிழமை கூட்ட நெரிசலில் சிக்கி இறந்த இரண்டு இளையோருக்குத் தமது அனுதாபங்களையும் செபங்களையும் தெரிவித்தார்.

தவக்காலத்தின் நான்காம் ஞாயிறு திருப்பலியை நிகழ்த்திய திருத்தந்தை, அத்திருப்பலி வாசகங்களை மையமாக வைத்து மறையரையாற்றினார்.

1500 கள் முதல் போர்த்துக்கீசியரின் காலனி நாடாக இருந்த அங்கோலா 1975, நவம்பரில்தான் சுதந்திரமடைந்தது. எனவே இந்நாட்டின் அதிகாரப்பூர்வ மொழி போர்த்துக்கீசியமாகும். இத்திருப்பலியில் போர்த்துக்கீசியம், சோக்வே, நனெக்கா, காங்கெலா, இபின்தா சோங்கோ ஆகிய மொழிகளில் விசுவாசிகள் மன்றாட்டு செபிக்கப்பட்டது. 60 சதுர மீட்டரைக் கொண்ட கூடாரம் போன்ற இத்திருப்பலி மேடையை 50 ஆயிரம் டன் இரும்பு கொண்டு அமைத்துள்ளனர். 20 ஹெக்டேர் அளவான இந்த வளாகத்தில் விசுவாசிகள் திருத்தந்தையின் வார்த்தைகளைக் கேட்பதற்காக 11 ஒலிபெருக்கிகளும் அமைக்கப்பட்டிருந்தன. இத்திருப்பலியின் இறுதியில் மூவேளை செப உரையும் வழங்கினார் திருத்தந்தை.

இறுதியில் அனைவருக்கும் தம் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இத்திருப்பலியானது நேரிடையாக உலக நாடுகளுக்கு ஒளிபரப்பப்பட்டது. வன்முறையும் மோதல்களும் நிறுத்தப்பட வேண்டும் என்ற அவரின் வேண்டுகோள் உலகினரை இன்றும் எட்டியிருக்கின்றது. திருப்பலி முடிந்து அவர் விசுவாசிகள் பக்கம் வந்ததும் அனைவரும் அவரது கரத்தைப் பற்றுவதற்கு நெருக்கியடித்துக் கொண்டு வந்தனர். திருத்தந்தையின் கைகளை பிடித்து அவர்கள் ஆவலோடு பேசினர். அவரும் மலர்ந்த முகத்துடன் அவர்களைப் பார்த்தார். இந்த ஒரு பூரிப்பில் அவ்விடம் விட்டு காரில் ஏறித் திருப்பீட தூதரகம் சென்றார். அங்கு மதிய உணவு அருந்தினார். அன்பர்களே இத்திங்களன்று பிரியாவிடை பெற்று உரோமைக்குப் புறப்படுவார் திருத்தந்தை. திங்கள் உள்ளூர் நேரம் மாலை 6 மணிக்கு உரோம் வந்து சேருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆப்ரிக்காவின் மேற்குக்கரையில் அமைந்துள்ள தென் பகுதி நாடான அங்கோலா எண்ணெய்யும் வைரக் கனிமமும் நிறைந்த வளமான நாடு. ஆனால் அதன் ஏறத்தாழ 30 வருட உள்நாட்டுப் போரின் பாதிப்புக்களிலிருந்து மீண்டு நாட்டை கட்டி எழுப்ப முயற்சித்து வருகிறது. திருத்தந்தையின் இப்பயணத்திற்காக புதிய சாலைகள் அமைத்தல், புதிய மரங்களை நடுதல், புதிய நடைபாதைகள் அமைத்தல், ஆலயப் புதுப்பித்தல் என இலட்சக்கணக்கில் செலவு செய்துள்ளது அங்கோலா. ஏறத்தாழ 55 விழக்காட்டுக் கத்தோலிக்கரைக் கொண்டிருக்கும் இந்நாட்டின் நல்ல முயற்சிகளை இறைவன் ஆசீர்வதிக்குமாறு நாமும் பிரார்த்திப்போம்.








All the contents on this site are copyrighted ©.