2009-03-21 14:06:56

இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உழைக்க ஐ.நா.பொதுச் செயலர் வலியுறுத்தல்


மார்ச்21,2009. இனவேறுபாடு உலகில் இன்னும் பரவலாகக் காணப்படும் வேளை, இந்த இனப்பாகுபாட்டை ஒழிப்பதற்கான போராட்டத்தில் அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து உழைக்குமாறு வலியுறுத்தியுள்ளார் ஐ.நா.பொதுச் செயலர் பான் கி மூன்.

சர்வதேச இனவேறுபாடு ஒழிப்பு தினம் மார்ச் 21, இன்று கடைபிடிக்கப்பட்டதை முன்னிட்டு செய்தி வெளியிட்ட பான் கி மூன், எல்லா மனிதரும் மாண்பிலும் உரிமைகளிலும் சுதந்திரமாகவும் சமமாகவும் பிறக்கின்றார்கள் என்று சர்வதேச மனித உரிமைகள் சாசனத்தின் முதல் எண் கூறுகிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

தென்னாப்ரிக்காவில் நிறவெறி பாகுபாட்டுகோட்பாடு இரத்து செய்யப்பட்ட பின்னர், பல நாடுகளில் இனவேறுபாடு சட்டங்களும் நடைமுறைகளும் நிறுத்தப்பட்டன என்றுரைக்கும் அச்செய்தி, சர்வதேச இனப்பாகுபாட்டு ஒழிப்பு ஒப்பந்தத்தின் மூலம் இனவேறுபாட்டிற்கெதிரான உலகளாவிய நடவடிக்கைகளும் இடம் பெற்றஉ வருகின்றன என்று கூறுகிறது.

1960ம் ஆண்டு, மார்ச் 21 ம் தேதி, தென்னாப்ரிக்காவின் ஷார்ப்வில்லே நகரில் நிறவெறி பாகுபாட்டு கோட்பாடுக்கு எதிராக அமைதியான ஊர்வலம் மேற்கொண்டவர்களில் 69 பேர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதையும் பான் நினைவுபடுத்தியுள்ளார்.

இதன் நினைவாக 1966ம் ஆண்டு, சர்வதேச இனவேறுபாடு ஒழிப்பு தினம் கடைபிடிக்கப்படுவதற்கு ஐ.நா.பொது அவை தீர்மானித்தது.








All the contents on this site are copyrighted ©.