2009-03-19 14:53:49

திருத்தந்தை : புனித வளனின் தந்தைமையும் அர்ப்பணமும் அனைத்து கிறிஸ்தவர்களுக்கும் எடுத்துக்காட்டு


மார்ச் 19,2009. புனித வளனின் வாழ்வு அனைத்து கிறிஸ்தவர்களுக்கும், அவர்கள் குருக்களாகவோ துறவிகளாகவோ அல்லது பொதுநிலை விசுவாசிகளாகவோ யாராக இருந்தாலும் அனைவருக்கும் எடுத்துக்காட்டு. புனித வளன், உயிரியல் ரீதியாக இயேசுவின் தந்தை இல்லை. எனினும் அவர் தனது தந்தைமையை முழுமையாகவும், நிறைவாகவும் செயல்படுத்த அவரால் முடிந்தது. தந்தையாக இருப்பது என்றால், எல்லாவற்றிக்கும் மேலாக வாழ்க்கை மற்றும் வளர்ச்சியின் சேவையில் இருப்பது. இந்த ஓர் அர்த்தத்தில் புனித வளன் மிகுந்த பக்திக்கு சான்றாக இருந்தார். இந்த ஒரு கருத்துருவாக்கத்தின் அடிப்படையில் திருத்தந்தை 16ம் பெனடிக்ட் மறையுரை ஆற்றினார்.

இதில் கலந்து கொண்ட பிற கிறிஸ்தவ சபைகளின் பிரதிநிதிகளுக்கு மதிப்பும் சகோதரத்துவமும் நிறைந்த வாழ்த்துச் சொன்ன திருத்தந்தை, கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான தாகத்தின் பெரும் சவால் பற்றியும் பேசினார். இந்தத் தாகமானது, முதலில் நாம் கிறிஸ்துவிடம் மனந்திரும்ப இட்டுச் செல்கின்றது மற்றும் அவர்பால் அதிகமதிகமாய் நம்மை ஈர்க்கின்றது. நாம் ஒரே தந்தையின் குழந்தைகள், நாம் ஒருவருக்கொருவர் சகோதர சகோதரிகள் என்பதை அவரில் ஏற்கவும் அழைக்கப்படுகிறோம் என்றார். அங்கு குழுமியிருந்த அனைவருக்கும், காமரூன் திருச்சபையின் அனைத்து பிரதிநிதிகளுக்கும் புனித வளனைச் சுட்டிக் காட்டி நாம் அவரைப் பின்பற்றுவதற்கு ஆன்மீகத் தந்தைமையின் நல்லதோர் எடுத்துக்காட்டாக இருக்கிறார். இது குருக்களுக்கும் உண்மையாகும். இப்புனிதர் கிறிஸ்துவுக்காக அடக்குமுறைகளையும் நாடு கடந்த வாழ்வையும் ஏழ்மையையும் அனுபவித்தார். இவருககுத் தமது சொந்த ஊரைவிட்டு வெகு தொலைவில் வாழ்க்கையை அமைக்க வேண்டியிருந்தது. அவருக்கிருந்த ஒரே சன்மானம் கிறிஸ்துவோடு இருக்க முடிந்ததே. எல்லாவற்றையும் அவர் செய்யத் தயாராக இருந்தது உங்கள் ஆண்டவர் கிறிஸ்துவுக்காகவே வேலை செய்யுங்கள் என்ற புனித பவுலின்,. வார்த்தைகளை விளக்குகின்றது. பயனற்ற ஊழியராக இல்லாமல் விசுவாசமும் ஞானமுமுள்ள ஊழியராக இருப்பதே முக்கியமானது. இவ்விரண்டும் ஒன்றாக இணைந்தது ஏதோ எதிர்பாராத விதமாக அல்ல. பிரமாணிக்கமின்றி புரிந்து கொள்வதும் ஞானமின்றி பிரமாணிக்கமாக இருப்பதும் போதுமானதாக இல்லை என்று இது பரிந்துரைக்கிறது. இன்னொன்றை உள்ளடக்காத ஒரு பண்பினால் மட்டும் கடவுள் நம்மிடம் கொடுத்த பொறுப்பை முழுமையாகச் செய்ய இயலாது.

குருத்துவத்தில் அன்புச் சகோதரரே, உங்களது மேய்ப்புப்பணி பல தியாகங்களைக் கேட்கிறது. எனினும் இது மிகுந்த மகிழ்ச்சியின் ஊற்றாகவும் இருக்கின்றது. உங்களது ஆயர்களில் நம்பிக்கை வைத்து, அனைத்துக் குருக்களுடனும் சகோதரத்துவத்தில் ஒன்றிணைந்து, உங்களிடம் ஒப்படைக்கப்பட்ட இறைமக்களால் ஆதரவளிக்கப்படும் பொழுது, மரியாவையும் குழந்தை இயேசுவையும் கவனிப்பதற்கு வளனை அழைத்து போல உங்களையும் அழைத்த ஆண்டவருக்கு விசுவாசமாகப் பதில் சொல்ல முடியும். அன்புக் குருக்களே, உங்களது ஆயர் முன்னிலையிலும் முழு சமூகத்தின் முன்பாகவும் கடவுளுக்கு நீங்கள் கொடுத்த வாக்குறுதிக்கு எப்பொழுதும் பிரமாணிக்கமாக இருங்கள். அர்ப்பணிக்கப்பட்ட வாழ்வுக்கும் பொதுநிலை வாழ்வுக்கும் அழைக்கப்பட்ட அனைவருக்கும் இது பொருந்தும். எதையும் கொண்டிருக்காமல் அன்பு செய்வது இயலக்கூடியதே என்று வளன் நமக்குப் போதிக்கிறார். புனித வளனின் வாழ்வைத் தியானிப்பதன் மூலம் இறையருளால், அனைவரும் தங்களின் உணர்வுரீதியான காயங்களைக் குணப்படுத்த முடியும். மரியா வழியாக வளன் மீட்பளிக்கும் பணியில் நுழைந்தது போல இறைவன் தமக்கு நெருக்கமாக இருப்பவர்களில் தொடங்கிய திட்டத்தைத் தழுவிக் கொண்டால் இவ்வாறு குணமடைய இயலும். திருச்சபை இயக்கங்களைச் சேர்ந்த அன்பு சகோதர சகோதரிகளே, உங்களைச் சுற்றியுள்ளவர்கள் மீது கவனவாக இருங்கள். உங்களின் இரக்கச் செயல்களால், இளையோருக்கு மனித மற்றும் கிறிஸ்தவக் கல்வியால், பெண்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களால் ஏழைகளுக்கு கடவுளின் அன்பு முகத்தைக் காட்டுவீர்களாக. இருபால் துறவிகளின் ஆன்மீகப் பணிகள் திருச்சபையின் வாழ்வுக்கு முக்கியமானது மற்றும் தவிர்க்க இயலாதது. கிறிஸ்துவைப் பின்பற்றுவதற்கான அழைப்பு இறைமக்கள் அனைவருக்குமான ஒரு கொடை. கற்பு ஏழ்மை பணிவு என்ற உங்களது வார்த்தைப்பாடுகளுக்கு பிரமாணிக்கமாக இருப்பதன் மூலம் நீங்கள் திருச்சபை வாழ்வின் கிளைகளாக இருக்கிறீர்கள். எல்லா நேரங்களிலும், குறிப்பாக உங்களது வார்த்தைப்பாட்டு வாழ்வு சோதிக்கப்படும் பொழுது உங்களது வார்த்தைப்பாடுகளின் மதிப்பையும் பொருளையும் புனித வளன் நினைவுபடுத்துகிறார். இவ்வாழ்வு கிறிஸ்துவைத் தீவிரமாகப் பின்பற்றுவதாகும். எனவே நீங்கள் வாழும் முறையானது உங்களை எது தூண்டுகிறது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. உங்களது செயல்கள் உங்களது ஆழமான தனித்துவத்தை மூடக்கூடாது. நீங்கள் செல்லுமிடமெல்லாம் உண்மையான சாட்சிகளாய்க் கடவுளுக்கு அர்ப்பணமான வாழ்வை முழுமையாய் வாழப் பயப்படாதீர்கள்.

புனித வளனின் மனைவியான கன்னிமரி திருத்தூதர்களின் அரசி. இந்த ஒரு பெயரிலே மரியா காமரூனின் பாதுகாவலியாகப் போற்றப்படுகிறாள். அவளிடம் உங்களை அர்ப்பணிக்கிறேன் என்று சொல்லி தனது உரையை நிறைவு செய்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.