2009-03-17 16:45:42

தீமைகளின் முன்னர் கிறிஸ்தவர்கள் ஒருபொழுதும் மௌனமாக இருக்க முடியாது, திருத்தந்தை


மார்ச்17,2009. நான் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் இந்த ஆப்ரிக்க மண்ணில் முதன்முறையாக உங்கள் அனைவரோடும் இருப்பதில் பேருவகை அடைகின்றேன். இந்த காமரூன் நாட்டிற்கு தன்னை அழைத்த அரசுத்தலைவருக்கும் ஆயர் பேரவைத் தலைவருக்கும் எனது நன்றி உரித்தாகுக. இவ்வேளையில் அரசு, பொதுமக்கள் மற்றும் தூதரகப் பிரதிநிதிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள். ஆப்ரிக்காவின் பல நாடுகளைப் போன்று இந்த காமரூன் நாடும் விரைவில் அதன் ஐம்பதாவது சுதந்திர தின விழாவைக் கொண்டாடவிருக்கின்றது. இதற்கு நல்வாழ்த்துச் சொல்லும் மற்றவரோடு நானும் இணைந்து என் நல்வாழ்த்துக்களையும் தெரிவிக்கிறேன். இஙகு பிற கிறிஸ்தவ சபையினரும் பிற சமயத்தவரும் வருகை தந்திருப்பது இந்நாட்டில் பல்வேறு சமய மரபு மக்கள் மத்தியில் நிலவும் நல்லிணக்கத்தையும் நன்மனத்தையும் வெளிப்படுத்துவதற்கான தெளிவான அடையாளமாக இருக்கின்றது என்று காமரூன் விமானநிலைய வரவேற்பில் பேசினார் திருத்தந்தை. அவர் மேலும் தொடர்ந்தார்........

எனது சகோதர சகோதரிகளை விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்காக ஒரு மேய்ப்பராக இங்கு வந்துள்ளேன். இது புனித பேதுருவின் வழிவந்தவர்களின் கடமையாகும். பெந்தக்கோஸ்து பெருவிழாவின் போது எருசலேமில் புனித பேதுரு பெருங்கூட்டத்தினருக்குப் போதித்த போது அக்கூட்டத்தில் ஆப்ரிக்காவிலிருந்தும் மக்கள் இருந்தனர். கிறிஸ்தவத்தின் முதல் நூற்றாண்டுகளில் சிப்ரியான், மோனிக்கா, அகுஸ்தின், அத்தனாசியுஸ் போன்ற இக்கண்டத்தைச் சேர்ந்த மாபெரும் புனிதர்களின் சாட்சியம் திருச்சபை வரலாற்றில் ஆப்ரிக்காவுக்கு குறிப்பிடத்தக்க இடத்தைக் கொடுத்தது. ஏன், இன்று வரையிலும் ஆப்ரிக்கா முழுவதிலும் மறைபோதகர்களும் மறைசாட்சிகளும் அலைஅலையாய்த் தொடர்ந்து கிறிஸ்தவுக்குச் சாட்சிகளாய் இருந்து வருகின்றனர். இன்று திருச்சபை ஏறத்தாழ 15 கோடி உறுப்பினர்களால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. இவ்வேளையில் பேதுருவின் வழிவந்தவர் கிறிஸ்துவில் வாழ்வுதரும் விசுவாசத்தை உங்களோடு சேர்ந்து சிறப்பிப்பது எவ்வளவு பொருத்தமாக உள்ளது.

இந்த யவுந்தேயில் 1995ம் ஆண்டு திருத்தந்தை 2ம் ஜான் பவுல், ஆப்ரிக்காவுக்கான முதல் சிறப்பு ஆயர் மன்றத்தின் கனியான, “ஆப்ரிக்காவில் திருச்சபை” என்ற ஏட்டை வெளியிட்டார். வத்திக்கானில் வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களுக்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்பை வெளியிட நான் வந்துள்ளேன். “ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான பணியில் ஆப்ரிக்காவில் திருச்சபை: நீங்கள் உலகின் உப்பாக இருக்கிறீர்கள், நீங்கள் உலகின் ஒளியாக இருக்கிறீர்கள் ” என்ற தலைப்பில் பேரவைத் தந்தையர்கள் விவாதிக்கவிருக்கிறார்கள். புதிய மில்லேனேயத்தில் ஆப்ரிக்க மக்களுக்கும் உலகினருக்கும் நம்பிக்கையைக் கொண்டு வருவதற்கான திருச்சபையின் மீண்டும் அர்ப்பணிப்பதற்கு, இக்கண்டத்தின் ஆயர்களுக்கும் குருக்களுக்கும் துறவிகளுக்கும் பொதுநிலை விசுவாசிகளுக்கும் இது இறையருளின் நேரமாக இருக்கின்றது.

மிகுந்த துன்பங்களுக்கு மத்தியிலும் கிறிஸ்தவச் செய்தி எப்பொழுதும் நம்பிக்கையைக் கொண்டு வருகிறது. புனித ஜோஸ்பின் பக்கித்தாவின் வாழ்க்கை இதற்கு நல்ல எடுத்துக்காட்டு. துன்பங்கள் அல்லது வன்முறை, பசி அல்லது வறுமை, ஊழல் அல்லது அதிகாரத் துர்ப்பிரயோகம் ஆகியவற்றின் முன்னர் கிறிஸ்தவர் ஒருபொழுதும் மௌனமாக இருக்க முடியாது. மீட்பளிக்கும் நற்சய்தி உரக்கவும் தெளிவாகவும் அறிவிக்கப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. உலகின் பிற பாகங்களைப் போன்று இங்கு ஆப்ரிக்காவிலும் எண்ணற்ற ஆண்களும் பெண்களும் நம்பிக்கை மற்றும் ஆறுதல் நிறைந்த வார்த்தையைக் கேட்பதற்காக ஏங்குகிறார்கள். உள்நாட்டு மோதல்கள், ஆயிரக்கணக்கானவர்களை வீடின்றியும், கைவிடப்பட்ட நிலையிலும், அநாதைகளாகவும் விதவைகளாகவும் ஆக்கியுள்ளன. கடந்த காலத்தில் இக்கண்டத்தின் பல மனிதர்கள் வேரோடு பெயர்க்கப்பட்டு வெளிநாடுகளில் வேலை செய்வதற்காக அடிமைகளாக விற்கப்பட்டனர். இன்று மனித வியாபாரம் புதுவடிவ அடிமைத்தனமாக மாறி வருகிறது. இதில் பெண்களும் சிறாரும் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றனர். உலகளாவிய உணவு பற்றாக்குறை, பொருளாதார நெருக்கடி, தொந்தரவு கொடுக்கும் வெப்பநிலை மாற்றம் ஆகியவை ஆப்ரிக்காவையும் தாக்கி இன்னும் அதிகமான மக்கள் பசி, வறுமை மற்றும் நோய்க்கு ஆளாகியுள்ளனர். ஒப்புரவுக்கும் நீதிக்கும் அமைதிக்கும் ஏங்குகின்றனர். இவற்றைத்தான் திருச்சபை அளிக்கிறது. புதிய வடிவ பொருளாதார அல்லது அரசியல் அடக்குமுறைகளை அல்ல, மாறாக கடவுளின் குழந்தைகளின் மகிமைமிகு விடுதலையை அளிக்கின்றது.

நான்கில் ஒருபகுதியினர் கத்தோலிக்கராய் இருக்கும் காமரூனில் திருச்சபை, குணமளிக்கும் மற்றும் ஒப்புரவுப் பணியைச் செய்கின்றது. மத்திய ஆப்ரிக்காவில் பலரின் நம்பிக்கையாக இருக்கின்றது காமரூன். இப்பகுதியில் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து ஆயிரக்கணக்கான அகதிகள் இந்நாட்டில் வரவேற்கப்படுகின்றனர். இது வாழ்வின் பூமி. இங்கு அரசு கருவில் வளரும் குழந்தைகளின் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்கின்றது. இது அமைதியின் பூமி. பக்காசி தீபகற்ப பிரச்சனையை காமரூனும் நைஜீரியாவும் உரையாடல் மூலம் தீர்த்துள்ளன. இது இளையோரின் பூமி. இந்நாடு உயிர்த்துடிப்புள்ள இளையோரால் ஆசீர்வதிக்கப்பட்டுள்ளது. 200க்கும் மேற்பட்ட பல்வேறு இனக் குழுக்கள் நல்லிணக்கத்தோடு வாழும் பூமி. இதற்காக இறைவனைப் புகழ்ந்து அவருக்கு நன்றி கூறுவோம்.

இங்குள்ள மற்றும் ஆப்ரிக்கா முழுவதிலுமுள்ள திருச்சபை புனிதத்துவத்திலும் ஒப்புரவு, நீதி மற்றும் அமைதிக்கான சேவையிலும் தொடர்ந்து வளரட்டும். ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றம் நல்ல பலனைத் தரட்டும். உங்களுக்காகச் செபிக்கின்றேன். இறைவன் காமரூனை ஆசீர்வதிக்கட்டும். இறைவன் ஆப்ரிக்காவை ஆசீர்வதிக்கட்டும் என்று காமரூன் நாட்டுக்கானத் தனது முதல் உரையை நிறைவு செய்தார்.








All the contents on this site are copyrighted ©.