2009-03-16 15:29:53

மனம் தேடும் உறவு


மார்ச்16,2009. “எந்த ஒரு சமூகம் தன் குழந்தைகளையும் முதியவர்களையும் பிச்சை எடுக்கவிட்டிருக்கிறதோ, அந்தச் சமூகம் உள்ளுக்குள்ளேயே அழுகிக்கொண்டு இருக்கிற சமூகம்!” என்றார் ஓர் அறிஞர். இதையே சற்று மாற்றி, “எந்த ஒரு சமூகம் தன் குழந்தைகள், முதியவர்கள் மீது அக்கறை காட்டாமல் இருக்கின்றதோ அது, எதிர் காலத்தைப் பாழ்படுத்திக் கொண்டிக்கும் சமூகம்” என்று சொல்லலாம். இம்மாதம் 13ம்தேதி ஜெர்மனியிலும் அமெரிக்க ஐக்கிய நாட்டிலும் அரங்கேறிய துப்பாக்கிக் கலாச்சாரத்தில் 26 உயிர்கள் காவு கொண்ட நிகழ்வு இவ்வாறு நம்மைச் சொல்ல வைத்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை ஜெர்மனியில் திம் கிரெட்ஷ்மெர் என்ற 17 வயது மாணவன் தனது முன்னாள் பள்ளியில் துப்பாக்கியுடன் முகமூடி அணிந்து சென்று ஒன்பது மாணவர்களையும் மூன்று ஆசிரியர்களையும் வெறித்தனமாகச் சுட்ட பின்னர் சாலையில் மூன்று பேரையும் சுட்டுக் கொன்றுவிட்டு பின்னர் ஒரு காரைக் கடத்தித் தப்பிக்க முயன்றான். அவனை விரட்டிப் பிடிக்க முடியாமல் காவல்துறையே அவனைச் சுட்டுக் கொன்றது. அதே நாளில் அமெரிக்க ஐக்கிய நாட்டு அலபாமாவில் 28 வயதான மைக்கிள் மெக்லெண்டன், 10 பேரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்டான். இவன் ஏற்கனவே, அவனது தாய், பின்னர் அவனது பாட்டி, மாமா, இரண்டு சகோதரர்கள் ஆகியோரைத் திட்டமிட்டுக் கொன்றவன்.

மாணவர்களின் இத்தகைய வன்முறைகளுக்கும் நமக்கும் தொடர்பு இல்லை என்று இந்தியா போன்ற வளர்ந்து வரும் நாடுகளில் வாழும் நாம் ஒதுங்கிவிடும் நிலையில் இன்று இல்லை. ஏனெனில் கடந்த வாரத்தில் விருதுநகர் மாவட்டம், குமாரலிங்கபுரத்தில் எட்டாம் வகுப்பு மாணவன் ஒருவன் 150 ரூபாய்க்காக தனது வகுப்பு நண்பனையே அரிவாள்மணையால் கொன்றுள்ளான். அடுத்து, உத்திரப் பிரதேச மாநிலம், காஜியாபாத் மாவட்டம் மெத்னாரா கிராமத்தைச் சேர்ந்த அதர்சிங், மேல்நிலைப்பள்ளி படிக்கும் மாணவன். உடன் படிக்கும் விபன் எனும் மாணவனை நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளான். “தங்கையை கேலி செய்யாதே எனப் பலமுறை எச்சரித்தும் கேட்காததால் விபனைச் சுட்டுக் கொன்றேன்” என அதர் சிங் வாக்குமூலம் அளித்துள்ளதாக காவல்துறை தெரிவித்தது.

இந்தியாவில் இத்தகைய இன்னும் பல அதிர்ச்சி தரும் நிகழ்வுகளை புள்ளி விபரங்களோடு சொல்ல முடியும். இந்த அமெரிக்கப்பாணி வன்முறை இந்தியாவிலும் வந்து விட்டதே என்று அதிர்ச்சியடைய அவசியமே இல்லை. ஏனெனில் வாழ்க்கை, பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என அத்தனையும் அமெரிக்கமயமாகி வரும் போது, வன்முறை மட்டும் விதிவிலக்கா என்ன? அமெரிக்கா அளவுக்கு இங்கே துப்பாக்கிகள் மலிவாகப் பரவவில்லையே தவிர, வன்முறை அதன் தன்மையளவில் மாணவர்களிடையே அண்மைகாலமாகப் பரவித்தான் வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. சென்னைச் சட்டக் கல்லூரியில் நடந்த வன்முறையை யாரும் அவ்வளவு எளிதில் மறந்துவிட முடியாது. நல்வாழ்க்கைக்கான நன்னெறிகளைக் கற்று வளர வேண்டிய பள்ளிப் பருவத்திலே இத்தகைய மூர்க்கத்தனமா? உளவியல் நிபுணர்கள் இவற்றிக்குச் சில காரணங்களை முன்வைக்கிறார்கள். சென்னை இலொயோலா லீபா நிறுவனத்தில் உளவியல் பேராசிரியராகவும் மாணவர் ஆலோசகராகவும் பணியாற்றும் இயேசு சபை அருட்தந்தை இம்மானுவேல் ஆரோக்யம் சொல்கிறார்:

RealAudioMP3 மாணவப் பருவத்தில் அவர்கள் தூக்கும் துப்பாக்கிகளும் பிற கொலைக் கருவிகளும் சமூக அநீதிக்கு எதிராகக் கலகம் செய்யும் போராட்ட வன்முறையல்ல; மாறாக, ஆடம்பரத்திற்காகவும், அற்பப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகவும் துப்பாக்கி எடுக்கும் தனிநபர் வன்முறை. உண்மையில் இவ்விவகாரத்தில் பிரச்சினை துப்பாக்கியல்ல. ஆனால் விடலைப் பருவத்தின் வன்முறை மனோபாவம்தான் பிரச்சினை. அருட்தந்தை இம்மானுவேல் ஆரோக்யம் மேலும் சொல்கிறார்

RealAudioMP3 16வயது ஜெப் வெய்ஸ், தனது தாத்தாவையும் அவரது காதலியையும் சுட்டுக் கொன்றுவிட்டு தனது உயர்நிலைப் பள்ளி சென்று 5 மாணவர்களையும் ஆசிரியரையும் பள்லிக் காவலையும் கொன்றுவிட்டு தன்னையும் சுட்டுக் கொன்றான். அவனது பின்னணி பற்றிப் பார்க்கும் பொழுது, குடும்ப வறுமை, கல்வி கற்க வாய்ப்பின்மை, போதைப் பொருள் பயன்பாடு என்று காரணங்கள் விரிகின்றன இன்னும், சில மாணவர்கள், மூர்க்கத்தனமும் வன்முறையும்தான் தங்களின் ஆண்தன்மையை முறைப்படி வெளிப்படுத்துவதாக வாக்குமூலத்தில் சொல்லியுள்ளனர். சக மாணவர்கள் தொடர்ந்து கிண்டல் செய்வது, தன்னை யாரும் விரும்பாமல் இருத்தல், தோல்வியைச் சந்தித்தல், சண்டை சச்சரவு நிறைந்த குடும்ப சூழலில் வளர்தல், குடும்ப வன்முறை, உடற்பயிற்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் எப்பொழுதும் தொலைகாட்சி பெட்டியின்முன் இருத்தல் போன்றவையும் முக்கிய காரணங்களாகச் சொல்லப்படுகின்றன. மொத்தத்தில், இன்றைய கல்வி, மொழி, வாழ்க்கை, நுகர்வு பொருட்கள் அத்தனையும் மாணவர்களின் பொறுமையற்ற மனநிலையை உருவாக்குவதோடு, சமூக உணர்வையும் குன்றச் செய்கின்றன. அத்துடன், ஆடம்பர வாழ்க்கை குறித்த நாட்டம், எப்படியும் முன்னேற வேண்டுமென்ற வெறி, சமூக மதிப்பீடுகளை மாற்றச் செய்யும் சுற்றுச்சூழல் எல்லாம் சேர்ந்து விடலைப்பருவத்தினரை சமூகத்திற்கு எதிரான பதட்டமுடைய தனிநபர்களாக மாற்றுகின்றன.

கடந்த ஆண்டு அக்டோபர் 10ம் தேதியன்று வழங்கப்பட்ட, இந்திய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் குறித்த உச்சநீதி மன்றத்தின் கண்டனம் பற்றி வாசித்திருப்போம். "தொலைகாட்சிகளில் ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளின் தரம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. "குடும்பத்தாருடன் அமர்ந்து பார்க்கும்படி ஏதாவது ஒரு நிகழ்ச்சியின் பெயரைச் சொல்ல முடியுமா?" என மத்திய அரசை உச்சநீதி மன்றம் கடுமையாகச் சாடியது. தற்போது அமெரிக்காவில் தயாராகும் ஏராளமான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், பிரான்ஸில் ஒளிபரப்பப்படுவதை எதிர்த்து அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன என்பது ஆச்சரியமாக இருக்கிறது. காரணம் "ஒரு தனிமனிதனுக்கான கட்டுப்பாடுகள் என்பது அடுத்தவரின் சுதந்திரத்தில் தடையிடாத அளவு இருந்து கொள்ளலாம்!" என்ற நியதிகளைக் கொண்டது பிரான்ஸ் நாடு. இந்த பிரான்ஸ் போன்ற நாடுகளின் கலாச்சாரம், பண்பாடு, சமூகக் கோட்பாடுகள் ஆகியவை மேற்கத்திய கலாச்சாரத்திற்கு எவ்விதத்திலும் முரண்பட்டவையல்ல.

இல்லினாய்ஸ் பல்கலைக்கழகத்தின் மருத்துவரும், உளவியல் நிபுணருமான ஜீன் பெக்மேன் என்பவர், சராசரியாக வாரத்திற்கு 28 மணி நேரம் ஆய்வு செய்து புள்ளிவிபரங்களை வெளியிட்டார். அதன்படி வன்முறைகளைத் தொடர்ந்து பார்ப்பதால் சிறாரின் மனப்பக்குவம் 8 வயதை நெருங்கி விடும்போது ஒரு வாலிபரின் மனோநிலையை எட்டுகிறது. 12 வயதை நெருங்கும் வேளையில் ஒரு சிறுவன் அல்லது ஒரு சிறுமி 8,000 கொலைகளை கண்களால் பார்த்து விடுகின்றனர். 18 வயதை நெருங்குகையில் இந்த எண்ணிக்கை இரண்டு இலட்சமாக உயருகிறது. ஒரு வருடத்தில் ஒரு சிறார் பார்க்கும் விளம்பரங்களில் 30 நொடி அளவுள்ள விளம்பரங்களின் எண்ணிக்கை மட்டும் இருபதாயிரம். சிறார் தொலைக்காட்சியில் பார்க்கும் வன்முறையும் குரோதங்களும் இயல்பான நிகழ்வை விட ஐந்து மடங்கு கொடூரமாக்கி காட்டப்படுகின்றன. திரைப்படம் மற்றும் சின்னத்திரை தொடர்கள் ஒரு குடும்பத்தினுள் பிணைந்துள்ள உறவுகளுக்குள் சீரழிவை ஏற்படுத்த வல்லவை. வீடியோகேம் போன்ற விளையாட்டுக்கள், டி.வி.டி ப்ளேயர்கள், குழந்தைகளுக்கு இன்னும் அதிக பாதிப்புகளை ஏற்படுத்த வல்லவை என்றாலும் தொலைக்காட்சிகளில் வீணடிக்கப்படும் நேரங்கள் அதிகம்.

ஓர் ஆன்மீகவாதி சொன்னார் - உருப்படியாகச் செய்வதற்கு எவ்வளவோ இருக்க, பகல் நேரங்களில்கூட தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைப் பார்த்துக்கொண்டு ஜனத்தொகையில் ஒரு பெரும் பகுதி உட்கார்ந்திருந்தால், அந்த நாடு அழுகிக்கொண்டு இருக்கிறது என்று அர்த்தம். தவறான திசையில் வெகு தொலைவுக்குப் போய் விட்டால், விருப்பப்பட்டால்கூட நம்மால் சரிசெய்ய முடியாத அளவு எல்லாம் சிடுக்காகி இருக்கும். வாழ்க்கை எல்லா சமயங்களிலும் நம்மைப் பொறுத்துக் கொள்ளாது. அது மன்னிக்க மறுத்துவிடும் நேரங்களும் உண்டு என்பதை மறக்காதீர்கள்! என்று.

வீட்டிலும் பள்ளியிலும் கட்டுப்பாடு இல்லாத மாணவர்கள்தான் வன்முறை எண்ணம் கொண்டவர்களாகத் தலையெடுக்கின்றனர். திருத்தந்தையும் எல்லாவகையான வன்முறைகள் ஒவிய வேண்டுமென அடிக்கடி குரல் கொடுக்கிறார். இஞ்ஞாயிறன்றுகூட, திருத்தந்தை RealAudioMP3

எனவே பிள்ளைகளின் வன்முறையைத் தவிர்ப்பதில் பெற்றோருக்கு முக்கிய பங்கு உண்டு. நம் எதிர்கால தூண்களை நினைத்தால் இப்போதே கவலை கவ்வுகிறது. மனஇறுக்கம் நிறைந்த, சண்டையிடும், அன்பற்ற குடும்பச் சூழலே பிள்ளைகளைக், குடிப்பழக்கத்திற்கும் போதைப் பொருளுக்கும் வயதுக்கு மிஞ்சிய தவறான பழக்கவழக்கங்களுக்கும் கொலைச் செயல்களுக்கும் அடிமையாக்குகின்றன. எனவே பிள்ளைகள் முன்பாக சண்டையிடும் பெற்றோரே, குடிப்பழக்கமுள்ள தந்தையரே, வேலை வேலை என்று பிள்ளைகள் வளர்ச்சியில் கவனம் செலுத்தாத பெற்றோரே நீங்கள் எடுக்கும் தீர்மானங்கள் என்ன? தன்னுடைய கருத்தை ஏற்காதவனை சகிப்பில்லாமல் அடிக்கும் தந்தையை பார்க்கும் பிள்ளை மனதில் வன்முறை வளராமல், மனிதநேயமா வளரும்? செயலின்றி சொல்லாரம் மட்டும் வாழ்க்கைக்கு வளம் சேர்க்காது, புண்பட்ட மனம் தேடும் உறவுக்கு பஞ்சாமிர்தமாகாது.

 








All the contents on this site are copyrighted ©.