2009-03-16 15:17:12

குருக்களுக்கான சிறப்பு ஆண்டை அறிவிக்கத் திருத்தந்தை திட்டம்


மார்ச் 16,2009. திருச்சபை எனும் முழு அங்கமே மறைப்பணி ஆற்ற வேண்டிய கடமையைத் தன்னுள் கொண்டுள்ளதால் திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரும் உலகெங்கும் சென்று நற்செய்தி அறிவிக்க வேண்டிய கடமையை உணர்ந்தவர்களாய் செயல்பட வேண்டும் என திருத்தந்தை 16ம் பெனடிக்ட் அழைப்புவிடுத்தார்.

குருக்களுக்கானத் திருப்பேராயத்தின் ஆண்டு நிறையமர்வுக் கூட்டத்தில் பங்குபெற்றவர்களை இன்று காலை திருப்பீடத்தில் சந்தித்த பாப்பிறை, குருக்களின் முழுநிறைவான ஆன்மீகத் தேட்டத்தை மனதிற்கொண்டதாய் வரும் ஜூன் 19 முதல் 2010 ஜூன் 19 வரை சர்வதேச குருக்கள் ஆண்டை அறிவிக்கவுள்ளதையும் எடுத்தியம்பினார்.

குருக்களின் மிகப்பெரும் எடுத்துக்காட்டாய் விளங்கிய புனித ஜான் மரிய வியான்னி இறந்ததன் 150ம் ஆண்டையொட்டி இக்குருக்கள் ஆண்டு சிறப்பிக்கப்படுவதாகவும் கூறினார்.

திருச்சபையிலும் நவீன உலகிலும் தங்கள் பணிகளை நிறைவேற்ற மறைமாவட்டத் தலைவர்களோடும் துறவு அமைப்புகளின் அதிகாரிகளோடும் ஒன்றிணைந்து உழைக்க வேம்டியதன் அவசியத்தையும் குருக்களிடம் வலியுறுத்தினார் திருத்தந்தை.

திருச்சபையின் படிப்பினைகளுக்கு விசுவாசமாக இருப்பதுடன் தாழ்ச்சியுடனும் நம்பிக்கைக்கு உரியவர்களாகவும் நடந்து கொள்ள வேண்டுமெனவும் குருக்களின் பண்புகளை மேலும் வரையறுத்தார் திருத்தந்தை.








All the contents on this site are copyrighted ©.