2009-03-16 15:21:04

ஆப்ரிக்காவுக்கான தனது முதல் மேய்ப்புப்பணி திருப்பயணத்தில், ஆப்ரிக்காவின் அரசியான அன்னைமரியா துணை நிற்க செபிக்குமாறு திருத்தந்தை அழைப்பு


மார்ச் 16,2009. காமரூன் மற்றும் அங்கோலா நாடுகளுக்கு இச்செவ்வாயன்று தான் மேற்கொள்ளும் திருப்பயணத்தில் கிறிஸ்துவையும் அவரது நற்செய்தியையும் தன்னோடு எடுத்துச் செல்வதாக இஞ்ஞாயிறன்று அறிவித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். RealAudioMP3

வத்திக்கான் தூய பேது பசிலிக்கா சதுக்கத்தில் ஞாயிறு நண்பகலில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இம்மாதம் 17 முதல் 23 வரை இடம் பெறவுள்ள ஆப்ரிக்காவுக்கான தனது முதல் மேய்ப்புப்பணி திருப்பயணத்தில், அன்னையும், ஆப்ரிக்காவின் அரசியுமான மரியா துணை நிற்க அவரிடம் செபிக்குமாறும் விசுவாசிகளைக் கேட்டுக்கொண்டார்.

வத்திக்கானில் வருகிற அக்டோபரில் நடைபெறவுள்ள ஆப்ரிக்காவுக்கான இரண்டாவது சிறப்பு ஆயர் மன்றத்தில் விவாதிக்கப்படும் விவகாரங்களுக்கான வழிமுறைகள் அடங்கிய தொகுப்பை காமரூன் தலைநகர் யவுந்தேயில் வெளியிடவிருப்பதாகவும் கூறிய அவர், பின்னர் அங்கோலா தலைநகர் லுவாண்டாவுக்கும் செல்லவிருப்பதாகத் தெரிவித்தார். RealAudioMP3

நீண்ட காலமாக உள்நாட்டுச் சண்டை இடம் பெற்று தற்சமயம் அமைதி ஏற்பட்டுள்ள அங்கோலா நாடு, நீதியில் மீண்டும் நாட்டைக் கட்டி எழுப்புவதற்கு அழைக்கப்படுகின்றது என்றும் திருத்தந்தை கூறினார்.

இத்திருப்பயணத்தின் மூலம், ஆப்ரிக்கக் கண்டம் முழுவதின் ஆயிரக்கணக்கான வேறுபாடுகளுடனும் அதன் ஆழமான சமயத் தன்மையுடனும் அதன் தொண்மையான கலாச்சாரங்கள், அதன் வளர்ச்சி, ஒப்புரவு ஆகிய கடினமான பாதைகளுடனும், அதன் கடும் பிரச்சனைகள், வேதனையான காயங்கள், இன்னும், அதன் அளப்பரிய வாய்ப்புகள் மற்றும் நம்பிக்கைகளுடனும் அக்கண்டத்தை அரவணைக்கவிருப்பதாகவும் தெரிவித்தார் திருத்தந்தை.

ஆப்ரிக்கக் கத்தோலிக்கரை விசுவாசத்தில் உறுதிப்படுத்தவும், கிறிஸ்தவர்களை அவர்களின் கிறிஸ்தவ ஒன்றிப்புக்கான அர்ப்பணத்தில் ஊக்குவிக்கவும், நம் ஆண்டவர் தமது திருச்சபையிடம் ஒப்படைத்த அமைதியை அறிவிக்கவும் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.

கிறிஸ்துவையும் அவரது உன்னத அன்பின் மறைபொருளான திருச்சிலுவையையும் தவிர வேறு எதுவும் அக்கண்டத்தின் மக்களுக்குக் கொடுப்பதற்கும் பரிந்துரைக்கவும் தன்னிடம் இல்லை என்பதை அறிந்திருப்பதாகவும் தெரிவித்த திருத்தந்தை, இந்த இறையன்பானது அனைத்து மனித எதிர்ப்புக்களையும் தோற்கடிக்கின்றது, இறுதியில் அது பகைவரை மன்னித்து அன்புகூரச் செய்கின்றது என்றார்.

இதுவே இவ்வுலகை மாற்றச் சக்தி வாய்ந்த நற்செய்தியின் திருவருள், இவ்வருளே ஆப்ரிக்காவைப் புதுப்பிக்கும், ஏனெனில் இது அமைதி மற்றும் ஆழமான, தீவிரமான ஒப்புரவின் வல்லமை மிக்க சக்தியை மீண்டும் உற்பத்தி செய்கின்றது என்றார் அவர்.

திருச்சபை, பொருளாதார, சமூக மற்றும் அரசியல் கூறுகளைக் கொண்டிருக்கவில்லை என்றும், நற்செய்தி அனைத்து இதயங்களையும் தொட்டு அவற்றை மாற்றி மக்களைப் புதுப்பிக்கவல்லது என்பதில் உறுதி கொண்ட திருச்சபை கிறிஸ்துவை அறிவிக்கிறது என்றும் திருத்தந்தை கூறினார்.

மார்ச் 19ம் தேதி நிகழும் அகிலத் திருச்சபையின் பாதுகாவலரும் தனது பாதுகாவலருமாகிய புனித வளனின் விழாவையும் இத்திருப்பயணத்தில் சிறப்பிக்கவுள்ளதாகவும் குறிப்பிட்ட அவர், இத்திருப்பயணத்தையும் அனைத்து ஆப்ரிக்க மக்களையும் இறைவனிடம் ஒப்படைப்பதாகவும் கூறினார்.

பசி, நோய், அநீதிகள், சகோதரத்துவச் சண்டைகள், வன்முறைகள் ஆகியவற்றுக்குப் பலியாகுவோரைச் சிறப்பாக நினைப்பதாகவும், மறைபோதகர்கள், குருக்கள், துறவிகள் தன்னார்வப் பணியாளர்கள் என யாரையும் விட்டுவைக்காமல் வயதுவந்தோரையும் சிறாரையும் இவை தொடர்ந்து பாதித்து வருகின்றன எனவும் மூவேளை செப உரையில் கூறினார் திருத்தந்தை. RealAudioMP3

காமரூன் நாட்டுத் தலைநகர் யவுந்தேவுக்கு இச்செவ்வாயன்று செல்லும் திருத்தந்தை, 20ம் தேதி அங்கோலா சென்று 23ம் தேதி உரோம் திரும்புவார்.








All the contents on this site are copyrighted ©.