2009-03-14 14:20:49

திருத்தந்தை உரோமிலுள்ள யூதர்களின் தொழுகைக் கூடத்திற்குச் செல்லவிருக்கிறார்


மார்ச்14,2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், வருகிற இலையுதிர் காலத்தில் உரோமிலுள்ள யூதர்களின் தொழுகைக் கூடத்திற்குச் செல்வார் என்று திருப்பீடப் பேச்சாளர் இயேசு சபை அருட்தந்தை பெதெரிக்கோ லொம்பார்தி அறிவித்தார்.

வத்திக்கானுக்கும் யூதர்களுக்கும் இடையேயான உறவுகளை மேம்படுத்தும் நோக்கத்தில் மேற்கொள்ளப்படும் இத்தொழுகைக் கூடத்திற்கானப் பயணம் இடம் பெறும் தேதி இன்னும் குறிக்கப்படவில்லை என்றும் கூறினார் அருட்தந்தை லொம்பார்தி.

வத்திக்கானுக்கும் யூதர்களுக்கும் இடையேயான உறவுகளின் வரலாற்றில் இந்தத் தொழுகைக் கூடத்திற்குச் செல்லும் இரண்டாவது திருத்தந்தையாக, திருத்தந்தை 16ம் பெனடிக்டின் பயணம் அமையவுள்ளது. 1986ல் திருத்தந்தை 2ம் ஜான் பவுல் முதன்முறையாக அங்குச் சென்றார். அது ஒரு புதிய சகாப்தத்தைத் திறந்ததாக இருந்தது என்று திருப்பீடப் பேச்சாளர் அறிவித்தார்.

திருத்தந்தை 16ம் பெனடிக்ட், 2005ல் ஜெர்மனியின் கொலோனிலும் 2008ல் அமெரிக்க ஐக்கிய நாட்டு நியுயார்க்கிலும் இருக்கின்ற யூதத் தொழுகைக் கூடங்களுக்குச் சென்றார் என்பதும் கவனிக்கத்தக்கது.

மேலும், வருகிற மே மாதம் 11 முதல் 15 வரை திருத்தந்தை 16ம் பெனடிக்ட் புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொள்ளவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.








All the contents on this site are copyrighted ©.