2009-03-14 12:30:18

தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு .நற்செய்தி யோவான் 2,13-25. (140309)


தவக்காலத்தின் மூன்றாம் ஞாயிறு .நற்செய்தி யோவான் 2,13-25. (140309)

இயேசு நாதர் வாழ்ந்த காலத்தில் இரண்டு பூதங்கள் மோதிக்கொண்டன என்பது தெரியுமா? . அவை இரண்டும் ஒன்றை ஒன்று முட்டி மோதிக்கொண்டு யார் பெரியவன் எனப் போட்டியிட்டுக்கொண்டிருந்தன . அதில் ஒரு பூதம் வியாபாரத்தலமாகும் . மற்றது திருக்கோயிலாகும் . உலக இச்சைகளுக்கும் ஆன்மீக வாழ்வுக்குமிடையே , மனித இயல்புக்கும் தெய்வீகத்துக்கும் இடையே நடந்த , தொடர்ந்து நடக்கும் யுத்தமாகும் . இது இரண்டு வல்லரசுகளுக்கிடையே நடக்கும் யுத்தமாகும் .



இயேசு அவருடைய தந்தையாகிய கடவுளின் இல்லத்தை அதிகம் நேசித்தார் . சந்தைக்கடை தேவாலயத்துக்குள் நுழைந்ததைக் கண்டதும் அவர் தம் தந்தையின் இல்லத்தின்மீது கொண்டிருந்த ஆர்வம் உடனடியாக தீவிரச் செயல்பாட்டில் இறங்கியது . அவர் நாணயம் மாற்றுவோரை முதலில் குறிவைத்துத் தாக்கத் தொடங்கினார் . அவர்கள் உரோமையர் பணத்தை யூத நாட்டுப் பணமாக மாற்றினார்கள் . அவ்விடத்தை வியாபாரக்கூடமாக மாற்றிவிட்டார்கள் . அதைக்கண்டதும் வருத்தமுற்ற இயேசு தம் சீடர்கள் உதவியின்றித் தாமே அவர்களை விரட்டியடிக்க ஆரம்பித்தார் . அங்கு தாமதிக்க நேரமில்லை . அவர்களோடு பேச்சு வார்த்தைக்கே இடமில்லை . அந்தப்பூதங்கள் இன்றும் நம் காலத்திலும் , உலகோதயச் சிந்தனைகள் ஆசாபாசங்கள் , கிறிஸ்துவின் மதிப்பீடுகளோடு போரிடுவதைக் காண்கிறோம் . சிலர் இயேசு கோவிலில் வியாபாரம் செய்தவர்களை விரட்டியதை தீவிரவாதம் என்றும் வேறு சிலர் தம் கொள்கைகளுக்காக அவர் அவ்வாறு செய்தார் என்றும் சொல்வார்கள் .

நாம் அவர் செய்தவை பற்றி என்ன நினைக்கிறோம்? . கோவிலில் சிறிது பணம் மாற்றுவது தவறா ? .

சந்தைக்கூடமூம் தேவனின் ஆலயமும் ஒன்றோடொன்று போட்டிபோடுவதை நாம் நாளும் நம் வாழ்வில் காண்கிறோம் . நாம் இரண்டுக்கும் சலாம் போடுகிறோம் . நாம் இரண்டையும் வரவேற்கிறோம் . வாழ்க்கையை உதாரணமாக எடுத்துக் கொள்வோம் . வாழ்வை விலைக்கு வாங்கவோ விற்கவோமுடியுமா? . அல்லது வாழ்க்கை விலைமதிப்பே இல்லாததா? . சந்தைக்கூடம் வாழ்வுக்கு விலைபேசும் . தேவாலயமோ அவ்வாறு செய்யமாட்டாது . இன்று உண்மையின் விலை என்ன? . நேர்மையின் விலை என்ன? . பணம் கொடுத்துச் சிற்றின்பத்தை விலைக்கு வாங்கலாமா? . அல்லது சில மதிப்பீடுகளை நாம் அவ்வாறு சந்தைப் பொருளாகக் கருதக்கூடாதா? . பணத்துக்காக நாம் ஒருவரைக் கொலைசெய்யலாமா . நீங்கள் கெட்டிக்காரராக இருந்தால் பிறர் பொருளைத் திருடலாமா? . ஒரு சைக்கிளையோ , ஆட்டையோ , அல்லது பிறருடைய தாரத்தையோ நமதாக்கிக் கொள்ளலாமா? . அல்லது இவையெல்லாம் தீமைகள் என நாம் தந்தையாகிய கடவுளின் இல்லத்தில் கற்றுக்கொண்டபடி விலக்கிவிட வேண்டியவையா? .

மாட்டையும் ஆட்டையும் , வைக்கோலையும் தானியத்தையும் , மற்றும் எத்தனையோ பொருட்களை நாம் சந்தைக்குள் கொண்டுவரலாம் . ஆனால் ஆலயம் என்பது கடவுளோடு பேசுவதற்கும் , அமைதியைக் காண்பதற்கும் உரிய புனிதமான இடமாகும் .

நாம் உலகக் காரியங்களில் திறமைசாலிகளாக இருக்கிறோம் . ஆனால் ஆன்மீகக் காரயங்களில் , கடவுளுக்கு அடுத்தவைகளில் எப்படி இருக்கிறோம்? . வாரத்துக்கு 168 மணிநேரத்தில் ஒருவேளை நாம் 1 மணிநேரத்தையாவது கடவுளோடு ஆலயத்தில் செலவிடுகிறோமா? . மற்ற நேரத்தையெல்லாம் வேலையில் செலவழிக்கலாம் . அது நமது உள்ளமும் புதையலும் எங்கே இருக்கிறது என்பதைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாகும் .



தவக்காலத்தில் நாம் இயேசுவிடம் காணும் ஆர்வத்தின் நெருப்பில் ஒரு சிறிதளவு பொறியையாவது பெற்றுக் கொள்ளவேண்டும் . தவக்காலம் நம் வாழ்க்கை மதிப்பீடுகளை சரிபார்க்கும் காலமாகும் . கோவிலுக்குச் செல்லும் போது நாம் அங்கு சந்தைக் கூடத்தையும் கொண்டு செல்லக்கூடாது . கோவிலுக்குச் செல்வதைக் கடமையாக நினைக்கக் கூடாது . ஏதோ வேகமாக முடித்துவிட்டு வீடு திரும்பி, செய்யவேண்டிய முக்கியமான காரியங்களைக் கவனிக்க வேண்டும் என நினைக்கக் கூடாது . பலருக்குக் கோவிலுக்குப் போவது என்பது பல வேலைகளுக்கு இடையே ஒரு இளைப்பாற்றியைக்கூடத் தராத இடைவேளையாகும்.

நாம் ஆலயத்துக்கு வரும்போது பராக்குக்கும் மாற்றுச் சிந்தனைகளுக்கும் இடம் கொடாது விரட்டியடிக்கவேண்டும் . அந்த நேரம் புனிதமான நேரம் . நாம் நம் தந்தையின் இல்லத்தில் இருக்கிறோம் என்பதை மறக்கக் கூடாது . தனக்குவமை இல்லாத கடவுளின் தாள்களைப் பற்றிக்கொள்ளும் வரம் கேட்போம் .



 








All the contents on this site are copyrighted ©.