2009-03-11 16:20:06

வட அயர்லாந்தில் இருவேறு தாக்குதல்களில் மூன்று பேர் கொல்லப்பட்டிருப்பதற்கு கிறிஸ்தவ சபைத் தலைவர்கள் கண்டனம்


மார்ச்11, 2009. வட அயர்லாந்தில் இருவேறு தாக்குதல்களில் காவல்துறை அதிகாரி உட்பட் மூன்று பேர் கொல்லப்பட்டிருப்பதற்கு அயர்லாந்தின் கத்தோலிக்க மற்றும் பிரிந்த சபை கிறிஸ்தவ சபைகளின் தலைவர்கள் இணைந்து தங்கள் கண்டனத்தைத் தெரிவித்துள்ளனர்.

வட அயர்லாந்தின் ஆன்ட்ரிம்மில் கடந்த சனிக்கிழமை இடம் பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இரண்டு படைவீரர்களும், இத்திங்களன்று இடம் பெற்ற தாக்குதலில் காவல்துறை அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளனர் மற்றும் இரண்டு குடிமக்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர்.

இக்கொடூரமான கொலைகள் ஒட்டுமொத்த சமுதாயத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன என்றுரைக்கும் அயர்லாந்து கிறிஸ்தவ தலைவர்களின் கண்டன அறிக்கை, அனைவரும் மதிக்கப்படக்கூடிய நிலையான மற்றும் அமைதியான சமுதாயம் உருவாக்கப்பட காவல்துறை மற்றும் அரசியல்வாதிகளோடு சேர்ந்து உழைப்பதற்குக் குடிமக்களுக்கு அழைப்புவிடுக்கிறது.

முப்பது ஆண்டுகாலத் துன்பங்களுக்குப் பின்னர் வட அயர்லாந்தைக் கட்டியெழுப்ப எடுக்கப்படும் அமைதிக்கான நடவடிக்கைகளை இவ்வன்முறை நிகழ்வுகள் சீர்குலைப்பதாக இருக்கின்றன என்றும் அவ்வறிக்கை கூறுகிறது.

வட அயர்லாந்தில் கடந்த பத்து ஆண்டுகளில் இத்தகைய சம்பவஙகள் இடம்பெறவில்லை எனக்கூறும் ஊடகங்கள், அங்கே நடைபெறும் அமைதி நடவடிக்கைகளை எதிர்க்கின்ற அதிருப்திகொண்ட குடியரசுவாதிகள் இக்கொலைகளைச் செய்திருக்கலாம் என்ற கருத்துக்களை வெளியிட்டுள்ளன.

கடந்த காலத்து இருண்ட நாட்கள் எங்கே மீண்டும் திரும்புமோ என்ற அச்சம் வட அயர்லாந்தில் பரவியுள்ளது.

 








All the contents on this site are copyrighted ©.