2009-03-11 16:22:54

கேரளாவில் மிகக் குறைந்த விலை மதுபானங்களை விற்பதற்கான மாநில அரசின் திட்டத்திற்குத் திருச்சபைத் தலைவர்கள் கடும் எதிர்ப்பு


மார்ச்11, 2009. கேரள மாநிலத்தில் மிகக் குறைந்த விலை மதுபானங்களை விற்பதற்கான மாநில அரசின் திட்டத்திற்குத் தங்களது கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர் அம்மாநில கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர்கள்.

கேரள ஆயர் பேரவையின் முக்கிய தலைவர்கள், அம்மாநில முதல்வர் வி.எஸ்.அச்சுதானந்தன் மற்றும் செயல்பாட்டு அமைச்சர் பி.கே.குருதாசனைச் சந்தித்து மதுபான விற்பனை குறித்த அரசின் அணுகுமுறைக்குத் தங்களது கடும் அதிருப்தியைத் தெரிவித்தனர்.

மதுபானம், குடும்பங்களையும் மக்களையும் அழிக்கும் மிகப்பெரிய தீமை என்றுரைத்த, கேரள ஆயர் பேரவையின் மதுபானங்களுக்கெதிரான ஆணையத்தலைவர் ஆயர் செபஸ்தியான் தெக்கேத்தேசெரில், அரசு நடத்தும் மதுபானக் கடைகளில் மலிவுவிலை மதுபானச் சரக்குகளை விற்கத் தொடங்கும் இடதுசாரி அரசின் அண்மைக் கொள்கை கவலை அளிக்கின்றது என்றார்.

கேரள மாநிலத்தில் இந்நிதியாண்டில் மதுபான விற்பனையினால் நாலாயிரம் கோடி ரூபாய் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது கடந்த நிதியாண்டில் 3667 கோடி ரூபாயாக இருந்தது எனக் கூறப்படுகிறது.








All the contents on this site are copyrighted ©.