2009-03-10 18:05:35

ஊதாரி மைந்தன் உவமை . லூக்கா 15 , 11 – 32 .

 


இயேசுவினுடைய பல்வேறு திறமைகளில் அவர் மிகச் சிறந்த கருத்துக் கதை கூறுவதில் வல்லவர் . அவர் கூறிய உவமைகளில் மிகச் சிறந்தது எனக் கூறுவது அவ்வளவு எளிதானதல்ல . இன்றைய கதை மிகச் சிறந்தவற்றில் ஒன்றாகக் கருதப்படும் . இது ஊதாரிப் பிள்ளை கதை என அழைக்கப்படுகிறது .

இதில் கதா நாயகன் கரிசனை மிக்க ஒரு தந்தை . அவர் கடவுளின் அன்பினைப் பிரதிபலிக்கிறார் . மிக நல்லவர் . தன்னுடைய வெவ்வேறு வாழ்க்கைத் தத்துவங்களைக் கொண்ட இரு மகன்களையும் அவர் பாசத்தோடு அணைத்துச் செல்கிறார் . இளைய மகனிடம் அவர் மிகவும் தாராள குணத்தைக் காட்டுகிறார் . அவன் விருப்பப்படி நடக்க அனுமதி வழங்குகிறார் . அவனுடைய குற்றங்களை சுலபமாக மன்னிக்கிறார் . அவன் திரும்பி வந்தபோது வாரி அணைத்து முத்தமிடுகிறார் . கால்களுக்குக் காலணியும், கை விரலுக்கு மோதிரமும் தருகிறார் . மோதிரம் தம் மகன் என முழுமையாக ஏற்றுக்கொள்வதற்கு அடையாளம் . தன் இளைய மகனை முழுமையாக மன்னிக்கிறார் .



மூத்த மகனிடம் தயாளகுணத்தைக் காட்டுகிறார் . அவனிடம் பொறுமையாக இருக்கிறார் . அவனுக்கு ஆறுதலாக இருக்கிறார் . இளையவன் ஊதாரியாகவும் மூத்தவன் மன நலத்தில் குறைந்தவனாகவும் இருப்பினும் தந்தை இருவரையும் புரிந்து கொள்கிறார் . இருவருக்கும் துணையாக இருப்பதைக் காண்கிறோம் .



இந்தக் கதையிலிருந்து பல கருத்துக்களை நாம் பெறமுடியும் . நாம் தந்தையின் மன்னிக்கும் குணத்தையும் , இரக்கக் குணத்தையும் கண்டு , நம் கடவுள் தந்தையிடம் நம்பிக்கையோடு அணுகுமாறு இக்கதை நமக்குத் தெரிவிக்கிறது .



ஒருவேளை நாம் இளைய மகனைப் போல வீட்டில் திருப்தியில்லாமல் , நம் விருப்பப்படி வாழ நினைக்கலாம் . பொறுப்பில்லாது நடந்து கொள்ளலாம் . அவன் தீயவன் அல்லன் . அவனுக்குச் சுற்றித் திரிய விருப்பம் . உலகத்தைச் சுற்றிப்பார்க்க ஆசை . ஆனால் அவனுடைய தந்தையை மிக மோசமாக அவமானப்படுத்துவதைப் பார்க்கிறோம் . தன்னுடைய சொத்தைப் பிரித்துக் கொடுக்கும்படி கேட்கிறான் . அன்றைய வழக்கப்படி தந்தை ஒருவர் இறந்த பிறகே சொத்தைப் பிரித்துக் கொள்வது வழக்கம் . தன்னுடை சொத்தைப் பிரித்துத் தருமாறு கேட்பது தன் தந்தையை இறந்து விடுமாறு கூறுவதற்குச் சமம் . இப்படிப்பட்ட கொடுமையான இழிவுக்கு உள்ளானாலும் தந்தை தம் மகனுக்குப் பணத்தைக் கொடுக்கிறார் .



இவ்வாறு தந்தையை அவமானப்படுத்தும் இளையவனைப் போல நாமும் சில சமயம் நடந்திருக்கலாம் . நம்மைப் பற்றியே சிந்தித்துக் கொண்டு , நம்மைக் கெட்டிக்காரர்கள், சமாதானப்பிரியர்கள் என எண்ணிக்கொண்டு கடவுளிடமும் மற்றவர்களிடமும் உணர்வே இல்லாது நடந்து கொண்டிருக்கலாம் . நாம் அவமானப்படுத்துவோர் சிலுவையில் தொங்கிய இயேசுவைப் போன்று அமைதியாகத் துன்புற்றுக் கொண்டிருக்கலாம் . நம்முடைய சுய நலத்தை விடுத்து பிறரைப் பற்றியும் நாம் நினைவில் கொள்ளவேண்டும் .



ஒருவேளை நாம் மூத்த சகோதரனைப் போல நடந்து கொண்டிருக்கலாம் . மன்னிப்பு வழங்க மறுக்கலாம் . யாரோடும் பழகாது ஒதுங்கி வாழ்ந்து கொண்டிருக்கலாம் . மற்றவர்கள் நம்மை விரும்பாமல் உதாசீனப்படுத்தியும் , வாழ்க்கையில் விரக்தியோடும் , பிறரோடு உறவுகொள்ள அஞ்சிக் கொண்டும் நாம் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கலாம் . ஒருவேளை நாமும் அவனைப் போன்று நம் வேலையில் அதிக ஆர்வம் காட்டி பணத்தை மிச்சப்படுத்திக் கொண்டு இருக்கலாம் . நாம் நம் தலைவர்களுக்கு எதிராகத் தீர்ப்பிட்டு பொதுவாக யாரையும் நம்பாமலும் வாழ்ந்து கொண்டிருக்கலாம் . நம்மிடம் பழக விரும்புகின்றவர்கள் நம்மிடமிருந்து ஏதாவது பயனடைய நினைக்கிறார்கள் என எண்ணி அவர்களைப் பற்றித் தவறான அபிப்பிராயம் கொண்டிருக்கலாம் . நாம் பிறரோடு மனம் திறந்து பேசி ,உறவுகளை வலுப்படுத்தி அவர்கள் நம்மை பாசத்தோடு நமக்காகவே அன்பு செய்கிறார்கள் என்ற நம்பிக்கையோடு , கடவுள் தந்தை இதைவிட மேலாக அன்பு செய்கிறார் என்பதை உணரவேண்டும் . மன்னிப்பு வழங்க நாம் தயாராக இருக்கவேண்டும் . நம்முடைய கோபம் , வெறுப்பு , நம்முடைய பழிவாங்கும் எண்ணங்கள் இவை நம் அமைதியையும் உடல் நலம் , மன நலத்தையும் பாதிக்கும் . லூக்கா நற்செய்தியில் இயேசு கூறுகிறார் . உங்கள் பகைவரிடம் அன்பு கூறுங்கள் . உங்களை வெறுப்போருக்கு நன்மை செய்யுங்கள் . உங்களைச் சபிப்போருக்கு ஆசி கூறுங்கள்,என்கிறார் இயேசு .( 6 ,27-28 ) . நமக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாம் மன்னிக்கிறோமா ? . கடவுள் நம்மிடம் காட்டும் அதே இரக்கத்தையும் மன்னிப்பையும் நாமும் காட்டுகிறோமா? .



நாம் நம்மை ஊதாரிகளாகவோ , மன நலத்தில் குறைபாடு உள்ளவர்களாகவோ , ஒதுக்கப்பட்டவர்களாகவோ நினைக்கத் தேவையில்லை . நம்முடைய பாவங்கள் இயேசுவைச் சிலுவையில் கொன்று போட்டாலும் –( நீண்ட நாள் அவர் கல்லறையில் இல்லை ) – அவர் நம்மை தம் வீட்டுக்கு வருமாறு பாசத்தோடு அழைக்கிறார் என இக்கதை கூறுகிறது . நாம் பன்றிக் கூடத்தைவிட மிக அழகான உலகில் வாழ்கிறோம் என்பதை மறக்கக் கூடாது . நம் தந்தையாகிய கடவுள் நமக்கு உயர்தர ஆடை உடுத்தி , கைக்கு மோதிரம் அணிவித்து , அறுசுவை உணவு சமைத்து, குடும்பத்தோடும் , சுற்றத்தோடும் நம்மை விருந்துக்கு அழைக்கிறார் . நாம் கடவுள் தந்தையின் வீட்டுக்குத் திரும்புவோமா ? . வாழ்க்கைப் பயணத்தைத் தொடரும் நாம் மன்னிப்பு வழங்கி , இன்னா செய்வோருக்கும் நல்லது செய்து , பிறரை மகிழச் செய்து நாமும் மகிழ்ந்திருப்போமா? .








All the contents on this site are copyrighted ©.