2009-03-09 15:03:20

உரோம் நகரம், வாழ்வு, விடுதலை, ஒழுக்கரீதி, கலாச்சாரம், வளர்ச்சி, மாண்புக்கான மதிப்பு, விசுவாச வாழ்வு போன்ற பாதையில் தொடர்ந்து நடைபோட திருத்தந்தை


மார்ச்09,2009. வாழ்வு, விடுதலை, ஒழுக்கரீதி, கலாச்சாரம், வளர்ச்சி, மாண்புக்கான மதிப்பு, விசுவாச வாழ்வு போன்றவைகளின் கலங்கரை விளக்காக இருக்கும் உரோம் நகரம் அதே பாதையில் தொடர்ந்து நடைபோட அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

உரோம் நகர மேயர் மற்றும் மாநகராட்சி அதிகாரிகளை இன்று முற்பகலில் அந்நகரின் காம்பிதோலியோ நகர் மன்றத்தில் சந்தித்த திருத்தந்தை, இந்நகர் மற்றும் மக்களின் வளர்ச்சிக்காக எடுக்கப்பட்டு வரும் ஒவ்வொரு நடவடிக்கையிலும் தலத்திருச்சபையின் ஒத்துழைப்பும் ஊக்கமும் எப்போதும் இருக்கும் என உறுதியளித்தார்.

உலகின் பல பகுதிகளிலிருந்து மாணவர்கள் வந்து பயிலும் உரோம் நகரில் பாகுபாடற்ற நிலைகள் மற்றும் சகிப்புத்தன்மைகள் இடம்பெற வேண்டியதன் அவசியத்தையும் அவர் வலியுறுத்தினார்.

சமூகத்தின் வன்முறைகளுக்கான முக்கிய காரணம் ஆன்மீக பலமின்மையே என்பதையும் குறிப்பிட்ட திருத்தந்தை, திருச்சபையானது தன் பங்குத்தளங்கள் மூலம் புதிய தலைமுறைகளின் மதிப்பீடுகளுக்காக ஆற்றி வரும் கல்விப்பணியையும் சுட்டிக்காட்டினார்.

இன்றைய உலக பொருளாதார வீழ்ச்சியால் உரோம் நகரிலும் ஏழைகளின் துன்பங்கள் அதிகரித்துள்ளதையும் குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதையும் எடுத்தியம்பி, அதற்கான நடவடிக்கைகளுக்கும் அவர் அழைப்புவிடுத்தார்.

உரோம் நகர் மன்றத்தில் உரை நிகழ்த்திய பின்னர் வெளியே கூடியிருந்த மக்களுக்கும் தனது செய்தியை வழங்கிய திருத்தந்தை, அதற்கு அருகேயுள்ள தோர் தெ ஸ்பெக்கியோ கன்னியர் துறவு மடம் சென்று அவர்களுக்கும் உரை நிகழ்த்தினார்.

 








All the contents on this site are copyrighted ©.