2009-03-09 15:28:18

அன்புள்ள மகளிருக்கு


மார்ச் 09,2009. அன்புள்ள மகளிரே, ஆருயிர் அன்னையாய், அன்புச் சகோதரியாய், உயிரில் பாதி மனைவியாய், இன்ப துன்பத்தில் கைகொடுக்கும் நண்பிகளாய், ஆருயிர் சகோதரிகளாய் வாழும் உங்களில் பலருக்கு இஞ்ஞாயிறன்று ஏராளமான நல்வாழ்த்துக்களும் பரிசுகளும் கிடைத்திருக்கும். தமிழகச் சிறைகளில் பெண் கைதிகளுக்குப் பிரியாணி சாப்பாடு கிடைத்தது. தமிழக மெகா நிறுவனம் ஒன்று 18 சாதனைப் பெண்களுக்கு விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இப்படி பெண்கள் ஆண்களுக்கு நிகராக ஏறத்தாழ எல்லாத் துறைகளிலும் இக்காலத்தில் கோலோச்சுகிறார்களே, அப்படியிருக்க பெண் விடுதலை பற்றி இன்னும் முழங்க வேண்டுமா? என்ற கேள்விகளும் நம்மிடம் கேட்கப்படுகின்றன. ஆனாலும் பெண்களின் இம்முன்னேற்றம் எந்தளவுக்கு இருக்கின்றது என்பது இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்ட உலக மகளிர் தினத்தை முன்னிட்டு ஐக்கிய நாடுகள் மன்றத்தின் பொதுச் செயலர் பான் கி மூன் ஆற்றிய உரையிலிருந்து தெரிந்து கொள்ளலாம். RealAudioMP3 “சில நாடுகளில் மூன்று பெண்களுக்கு ஒருவர் வீதம் அடிக்கப்படுகின்றனர், வியாபாரம் செய்யப்படுவோரில் எண்பது விழுக்காட்டுக்கு அதிகமானோர் பெண்கள், ஏறத்தாழ 13 கோடிப் பெண்களுக்கு பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்பட்டுள்ளன, ஐந்து பெண்களுக்கு ஒருவர் வீதம் பாலியல் வன்புணர்ச்சியில் வலுவந்தமாக உட்படுத்தப்படுகின்றனர் அல்லது வாழ்வு முழுவதும் உரிமை மீறல்களை எதிர் கொள்கின்றனர். பெண்களுக்கு எதிரான வன்முறை மனித சமுதாயத்திற்கெதிரான குற்றம், நமது கலாச்சாரத்தின் அடிதளத்தின் மீதான தாக்குதல், எனவே எந்தச் சமூகம் பெண்களுக்கெதிரான இத்தகைய அமைப்பு முறைகளை உருவாக்கியதோ அந்தச் சமூகம்தான் அவற்றைக் களைய வேண்டும் என்றார்.

வளர்ந்த நாடு என்று சொல்லப்படும் கானடாவில் 16.4 விழுக்காட்டுக் குழந்தைகள் வறுமையில் வாடுகின்றனர். இவர்களில் பாதிப் பேர் சிறுமிகள். உலகிலுள்ள பெண் கைதிகளில் எண்பது விழுக்காட்டினர் குழந்தைப் பருவத்தில் பாலியல் ரீதியான தொல்லைக்கு ஆளானவர்கள். ஆஸ்திரேலியா, கானடா, இஸ்ரேல், தென்னாப்ரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடு போன்ற வளர்ந்த நாடுகளில் கொலை செய்யப்பட்ட பெண்களில் 40 முதல் 70 விழுக்காட்டினர் தங்களின் கணவர் அல்லது ஜோடிகளால் கொலை செய்யப்பட்டுள்ளனர். இலத்தீன் அமெரிக்காவிலிருந்து ஒரு இலட்சம் பெண்களும், ஆப்ரிக்காவிலிருந்து ஐம்பதாயிரம் பெண்களும் ஒவ்வோர் ஆண்டும் விபசாரத்திற்காகக் கடத்தப்படுகின்றனர். இந்தியாவில் பெண்கள் மீதான பாலியல் அத்துமீறல்கள் அனைத்தும் மிக நெருங்கிய உறவினர்களால் நடப்பது 40%, பெண்கள் மீதான வன்முறைகளில் ஏதோ ஒன்றில் நெருங்கிய உறவினர்களால் அது நிகழ்வதென்பது 94% என ஆய்வுகள் கூறுகின்றன. இவ்வாறு அதிர்ச்சி தரும் பல புள்ளி விபரங்களை மனித உரிமை அமைப்புகள் அவ்வப்போது வெளியிட்டு வருகின்றன. ஹேமா தேஷ்பாண்டே எனும் சமூகசேவகியும் "எனக்கு எல்லா நாளுமே பெண்கள் தினம் தான்... ஒவ்வொருநாளும் நான் போராடவேண்டி உள்ளது, சவால்களை சந்திக்கவேண்டி இருக்கிறது" என்கின்றார்.

நெதர்லாந்தையும் இந்தியாவையும் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர்கள் குழு ஒன்று இந்தியாவின் தமிழகத்திலும் குஜராத்திலும் 200 தலித் பெண் பஞ்சாயத்து தலைவர்களிடம் ஓர் ஆய்வு நடத்தி சான்றுகளுடன் கடந்த மாதத்தில் ஓர் நீண்ட அறிக்கை ஒன்றை தயாரித்துள்ளது. இக்குழுவில் ஒருவரான இயேசு சபை அருட்தந்தை அலாய்சியஸ் இருதயம் சொல்கிறார்: RealAudioMP3

உலகில் உள்நாட்டுப் போர் நடைபெறும் சில இடங்களில் பெண்களும் சிறுமிகளும் படைவீரர்களின் போகப் பொருட்களாகப் பயன்படுத்தப்படுகின்றனர். காங்கோ ஜனநாயக குடியரசில் நான்கு படைவீரர்கள் ஒரு பெண்ணை துப்பாக்கி முனையில் கற்பழித்திருக்கின்றனர் என்று அந்நாட்டு மருத்துவமனைகளைப் பார்வையிட்ட பான் கி மூனே கூறியிருக்கிறார். இதனால் இந்தப் பெண்கள் உடல் ரீதியாக மட்டுமல்ல மன ரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ளனர் என்கின்றார். இலங்கையில் நடப்பது நமக்குத் தெரியாததல்ல. பெண்கள் கற்பழிக்கப்பட்டு பிறப்புறுப்புக்களில் குண்டுகள் வைத்து வெடிக்கப்படுகின்றன. பாலூட்டும் கொங்கைகள் அறுக்கப்பட்டு வெகுமதியாக அனுப்பப்படுகின்றனவாம்.

இஞ்ஞாயிறன்று மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உலக மகளிருக்கு வாழ்த்து சொல்லி அவர்களுக்காகத் தான் செபிப்பதாகக் கூறினார். அத்துடன், அவர்களின் மாண்பு மதிக்கப்பட்டு அவர்கள் தங்கள் நல்ல பண்புகளுடன் ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும் என்றார்.

RealAudioMP3 அன்பர்களே, இவ்வுலக மகளிர் தினம் உருவானது எவ்வாறு? 1789 ஆம் ஆண்டு ஜூன் 14 ஆம் நாள், சுதந்திரத்துவம், சமத்துவம், பிரநிதிநித்துவம் என்ற கோரிக்கைகளை முன்வைத்து பிரெஞ்சுப் புரட்சியின் போது பாரிஸில் உள்ள பெண்கள் போர்க்கொடி உயர்த்தியதால்தான் இப்படியொரு மகளிர் தினம் கருவானது. இதன் பயனாக பிரான்சில் அரசன் லூயிஸ் பிளாங்க், பெண்களை அரசவை ஆலோசனைக் குழுக்களில் இடம்பெறச் செய்யவும் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கவும் ஒப்புதல் தந்தான். அந்த நாள் 1848 ஆம் ஆண்டு மார்ச் எட்டு ஆகும். அமெரிக்க ஐக்கிய நாட்டில் நியூயார்க் நகரில் நெசவாலைகளில் பணிபுரிந்த மகளிர் திரண்டு தங்கள் ஊதிய உயர்வு, எட்டுமணி நேர வேலை முதலியவற்றை வலியுறுத்திக் கிளர்ந்தெழுந்து போராடத் தொடங்கிய நாளும் 1857 ஆம் ஆண்டு மார்ச் 8ம் நாள்தான். எனவே சர்வதேச மகளிர் தினம் என்று ஒருநாள் வருவதற்குக் காரணமே இந்த உழைக்கும் பெண் வர்க்கம் தான்.

அன்று தொடங்கிய போராட்டம் இன்றும் பல விதங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது. காலத்தின் தேவைக்கேற்ப மகளிர் தங்களின் சவால்களை முன்வைத்துப் போராடி வருகின்றனர். 1913-14-களில் முதல் உலகப் போரின் போது இரஷ்ய மகளிர் அமைப்பினர் போருக்கு தங்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் விதமாக பேரணிகளை நடத்தினார்கள். இதே ஆண்டில் மார்ச் 8 ஆம் தேதியில் பெண்கள் நாள் கடைப்பிடிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் நிறுவனமும் 1975ல் இத்தினத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்தது. இன்று இந்த நாள் பல நாடுகளில் பொது விடுமுறை நாளாகும். தொடர்ந்து உயிரிழப்புகளையும் உரிமை மீறல்களையும் சந்தித்து வரும் ஆப்கானிஸ்தானில் இந்நாளில் 15 ஆயிரத்துக்கு மேற்பட்ட பெண்கள் அமைதிக்காகக் குரல் கொடுத்தனர் என்று ஐ.நா.அதிகாரி சூசன் ரைஸ் விளக்குகிறார். RealAudioMP3

பெண் அடிமைத்தனம் என்பது சமூகத்தில் இன்னும் வேரூன்றி இருக்கிற விடயம். அது நகரங்களில் மெல்லமெல்ல குறைந்து வருகிறது. ஆனாலும் சென்னை மீனாட்சி கல்லூரியில் தமிழ் பேராசிரியராகப் பணியாற்றும் பெண்விடுதலை பேச்சாளர் திருமதி பத்மாவதி விவேகானந்தன் சொல்கிறார் : பெண்விடுதலை இல்லையென்றால் ஆண் விடுதலை இல்லை. பெண்களுக்குக் கட்டுபாடுகள் விதிப்பதாக நினைத்து ஆண்கள் அவர்களுக்கான கட்டுபாடுகள் விதிக்கிறார்கள் என்று.

அன்புள்ள மகளிரே, உங்கள் இனம் போரிடுவதை அங்கீகரிக்காத சூழலில், பிரான்சை இங்கிலாந்து கைபற்றியபோது, ஆண் வேடமிட்டு போரிட்டு வென்றார் புனிதை ஜோன் ஆஃப் ஆர்க். சங்ககாலம் தொடங்கி பெண்கள் போரிட்டு ஆட்சியில் அதிகாரத்தைக் கைப்பற்றிய தகவல்கள் உண்டு. சிவகங்கைச் சீமையின் அரசியாக இருந்த வேலுநாச்சியார் போர்க்கலைகள் நன்கறிந்தவர். ஏழுமொழிகள் பயின்றவர், ஆங்கில அரசை எதிர்த்தவர். சித்தூர்ராணி ராணிமங்கம்மாள், ஜான்சிராணி போன்றோர் மன்னர் ஆட்சிகாலத்திலேயே அரசியல், போர் இரண்டிலும் வல்லவர்களாகியிருந்தனர். ராஜராஜ சோழன் அரசவையின் சாணக்கியராயிருந்தவர் அவரது சகோதரி குந்தவைதான். இவ்வாறு போராடி வெற்றியெனும் சிகரத்தை அடைந்த பெண்களின் பட்டியல் ஏராளம். ஏராளம்.

எனவே பெண்டிரே, உங்களின் முன்னேற்றம், துணிச்சல், தன்னம்பிக்கை என்கின்ற இரண்டு விடயங்களில் தங்கியிருக்கின்றது. இந்த இரண்டு விடயங்களுமில்லாத நீங்கள் மட்டுமல்ல மனிதர்கள் யாருமே முன்னேற முடியாது. அதேசமயம் சமூக மாற்றம் என்பது vம் ஒவ்வொருவரின் விழிப்புணர்விலும், தெளிந்த நிலைப்பாட்டிலுமே தங்கியுள்ளது. ஒரு குளத்தில் நுளம்புகளும் நோய்க் கிருமிகளும் உருவாகிக் கொண்டிருக்கின்றV என்றால் அதன் சுற்றாடல்தான் காரணம். அதே மாதிரி சமூகத்தில் பிரச்சினைகளை உருவாக்கும் கிருமிகள் பெருகுவதற்கும் சூழல்தான் காரணம். அந்தச் சூழலாக நாம் இருக்காமல் அந்தkd கிருமிகளை ஒழிக்கும் சூழலாக மாற வேண்டும்

ஒரு பெண்ணை அடக்கி வைக்க ஆசைப்படும் எந்த ஆணும் தைரியசாலி அல்ல, ஆனால் அவன் மாபெரும் கோழையே. மனிதத்தின் சரிபாதியை அவமதிப்பது நம்மையே அவமதிப்பதாகும். ஆதலால் இன்று பெண்ணினம் ஆணினத்திடம் கேட்பது என்னவெனில், பெண்கள் உழைக்கும் கருவிகள் அல்ல, அவர்கள் உயிருள்ள மனிதர்கள். பெண்ணிடமும் மனிதம் இருக்கின்றது! இந்த மனிதத்தை இனம் கண்டு கௌரவிக்குமாறு அன்புக்கரம் நீட்டுகின்றது. ஆழமான புரிந்துணர்வுடன் ஆணினம் இந்த அன்புக்கரத்தைப் பற்றிக் கொள்ளும்போதுதான் ஆண்-பெண் சமத்துவம் சாத்தியமாகும். ஐ.நா.பொதுச் செயலர் மூன் கூறியதை இதற்கு சான்றாக முன்வைக்கிறோம்.

தென்னாப்ரிக்காவில் ஒரு பழங்குடி இன வயதான தலைவர் ஒருவர், பயிற்சி பாசறைக்குச் சென்று திரும்பியவுடன் அந்தக் குடும்பமே நடுங்கிக் கொண்டிருந்ததாம். ஏனெனில் அந்தப் பழங்குடி இனத்தில் ஆணுக்கு, அதுவும் இனத் தலைவர்க்கு அவ்வளவு மதிப்பு மரியாதை உண்டு. ஆனால் அவர் முதலில் மகன்களிடம் சொன்னாராம், இன்றிலிருந்து நீங்களும் மனைவியரின் வீட்டு வேலையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். நானும் எனது பஙகுக்கு எனது சாப்பாட்டுத் தட்டுகளை கழுவுவேன் என்று.

ஆம். மாற்றம் எங்கிருந்தும் வரலாம் நன்மனதிருந்தால். அன்புள்ள மகளிரே, திருத்தந்தை கூறியது போல அன்னை தெரேசா போன்ற பெண் புனிதர்களின் வாழ்வை பின்பற்றி நடங்கள். ஒரு பெண் மகிழ்வாக இருந்தால்தான் அவளைச் சுற்றியுள்ளவர்களும் மகிழ்வுடன் இருக்க முடியும்.








All the contents on this site are copyrighted ©.