2009-03-07 15:37:03

வழிபாட்டு ஆண்டின் 2 ஆம் ஞாயிறு மறையுரை 070309.


 புறாக்களின் சிறகுகள் என்பது ஜான் அப்டைக் என்பவர் எழுதிய கதை . அதில் வரும் கதாநாயகன் டேவிட் என்ற சிறுவன் அவனுடைய கடவுள் பக்தியில் சந்தேகப்படுகிறான் . ஒரு நாள் இரவு அவன் உறங்கச் செல்லும் முன் தன்னுடைய சிக்கலைப் பற்றிச் சிந்திக்கிறான் . திடீரென அவனுக்கு ஒரு சிந்தனை வருகிறது . தன்னுடைய கைகளை மேலே உயர்த்தி இயேசுவை அவனுடைய கைகளைத் தொடுமாறு செபிக்கிறான் .

அவன் மூச்சை அடக்கிக் கொண்டு காத்திருக்கும்போது ஏதோ தனது கைகளைத் தொடுவதாக உணர்கிறான் . ஆனால் அவனுக்கு அது உறுதியாகத் தெரியவில்லை . சில நேரத்துக்குப் பிறகு தன் கைகளை கீழே இறக்கிவிட்டு உறங்கிவிடுகிறான் . அவனது கைகளைத் தொட்டதும் தொடாததும் அவனுக்குத் தெரியவில்லை .

டேவிட் பெற்ற அனுபவங்களை நாமும் சில சமயம் பெற்றிருப்போம் . நம்முடைய கடவுள் பக்தியும் சில சமயங்களில் மிக ஆழமானதாகவும் , வேறு சில சமயங்களில் நம்பிக்கை குறைவாகவும் இருக்கும் . நம் பக்தி குறையும் போது உண்மையாகவே கடவுள் நம்மோடு இருக்கிறார் என்பதையும் , இயேசு இறைமகன்தானா என அறியவும் கடவுளிடமிருந்து ஒரு அடையாளம் கேட்கிறோம் . இதை வேறுவிதமாகக் கூறவேண்டும் என்றால் பேதுருவும் , யாக்கோபுவும் , யோவானும் இன்றைய நற்செய்தியில் பெற்றதுபோல நாமும் ஒரு அடையாளத்தைப் பெற ஆசிக்கிறோம் .



இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது . இயேசுவின் உருமாற்றக் காட்சி போன்ற சிறப்பான அருளை ஏன் பேதுருவும் , யாக்கோபுவும் , யோவானும் பெறவேண்டும் . ஒரு காரணம் இந்நிகழ்ச்சிக்கு சில நாட்களுக்கு முன்னர் இயேசு தம் சீடர்களிடம் அவர் எருசலேத்தில் துன்புற்று இறக்க வேண்டியிருக்கும் எனத் தெரிவித்திருந்தார் . இது பற்றிக் கேள்விப்பட்ட பேதுரு அதிர்ச்சியடைந்து ஆண்டவரே இது உமக்கு நடக்கவே கூடாது என்றார் . அப்போது இயேசு பேதுருவிடம் என்னைவிட்டு அகன்று போ சாத்தானே . நீ எனக்குத் தடையாக இருக்கிறாய் . உன்னுடைய எண்ணங்கள் கடவுளிடமிருந்து வரவில்லை , மாறாக மனித எண்ணங்களே எனக் கடிந்து கொண்டார் . மத்தேயு 16,22-23 .

இந்த அதிர்ச்சி தந்த நிகழ்ச்சிக்குப் பிறகு பேதுருவுக்கும் , யாக்கோபுவுக்கும் , யோவானுக்கும் அவர்களை ஊக்கப்படுத்த ஆன்மீக அருள் தேவைப்பட்டது .

ஒருவேளை அதனால்தான் என்னவோ தவக்காலத்தில் திருச்சபை இந்த வாசகத்தை நமக்கு இந்த ஞாயிறு தந்துள்ளது . கிறிஸ்துவின் பாடுகளையும் , பெரிய வெள்ளிக்கிழமை சிலுவைச் சாவையும் அவர் சந்திப்பதற்கு முன்னர் நமக்கு ஆன்மீக அருளை ஈந்து திருச்சபை உற்சாகப்படுத்த விரும்புகிறது .



இது ஒரு முக்கியமான கருத்தை நமக்குத் தருகிறது . நம்முடைய கடவுள் பக்தியும் மலைபோல உயர்ந்தும் , மடுவாகச் சரிந்தும் அவ்வப்போது மாற்றங்கள் அடைவதை நாம் காண்கிறோம் . அதாவது சில சமயம் நம் பக்தி முயற்சிகள் கொழுந்துவிட்டுத் தீபமாக எரிகின்றன . வேறு சமயங்களில் அணைந்து சாம்பலாகக் கிடக்கின்றன .

எடுத்துக் காட்டாக இன்றைய நற்செய்தியில் நாம் காண்பது என்ன . பேதுருவும் யாக்கோபும் யோவானும் பேரின்பத்தில் மூழ்கிக் கிடக்கிறார்கள் . ஆனால் இன்னும் சில மாதங்களில் அவர்களுடைய இறைப்பற்று அணைந்த தீபமாகக் கிடக்கும் . ஜெத்சமனித் தோட்டத்தில் அது நிகழும் .

மத்தேயு 26, 36-38 ல் நாம் இதைக் காண்கிறோம் .



பின்னர் இயேசு சீடர்களுடன் ஜெத்சமனி என்னும் இடத்துக்கு வந்தார் .அவர் , நான் அங்கேபோய் இறைவனிடம் வேண்டும்வரை இங்கே அமர்ந்திருங்கள் என்று அவர்களிடம் கூறி , பேதுருவையும் ,செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார் . அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார் . அவர் , எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது . நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள் , என்று அவர்களிடம் கூறினார் .

சிறிது நேரம் கழித்து யூதாசோடு ஒரு பெருங்கூட்டம் வாள்களோடும் தடிகளோடும் வந்தது . இன்றைய நற்செய்தியில் பேரின்பத்தில் நாம் கண்ட மூன்று சீடர்களும் அச்சமடைந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள ஓடிவிட்டார்கள் . இன்னும் மோசம் என்னவென்றால் பேதுரு இயேசுவைத் தெரியாது என்றே கூறிவிட்டார் .

இதேபோலத்தான் நம்முடைய இறை நம்பிக்கையும் நிறைவாகவும் குறைவாகவும் இருக்கும் . நாம் மிக ஆழமான அனுபவத்தில் இருக்கும்போது நம் விசுவாசம் மிக உறுதியாக , இன்று நாம் இயேசுவின் சீடர்களில் காண்பது போல ஒளிமயமாக இருக்கும் . ஆழமான அனுபவத்தின்போது நாம் இயேசுவுக்கு அருகில் அவரைத் தொடுவதைப் போன்று உணர்வோம் . நாம் தந்தையாகிய கடவுளுக்கு எவ்வளவு அருகில் இருப்பதாக உணர்வோம் என்றால் அவரது கரம் நம்மை அணைப்பது போலத் தெரியும் . தூய ஆவியானவர் நம்மிடம் பேசுவது போலத் தெரியும் .

மாறாக நாம் மனச் சோர்வில் இருக்கும்போது நம்முடைய விசுவாசம் மங்கலாக இருள்சூழ்ந்து அணையப்போவதுபோலக் காணப்படும் . அப்படித்தான் சீடரகளின் இறைபற்று ஜெத்சமனித் தோட்டத்தில் இருந்தது .

விசுவாசம் குன்றும்போது இயேசுவும் சாத்தான் தன்னை வென்றுவிடுமோ என நினைக்கிறார் . தந்தையாகிய கடவுள் நம்மை அனாதைகளாக விட்டுவிட்டது போலத் தெரியலாம். தூய ஆவியானவரும் வெகு தொலைவில் சென்றுவிட்டது போலத் தெரியும் .

கடவுள் பக்தி வளர்வதும் தேய்வதும் நமது வாழ்வின் அனுபவங்களைப் போன்றதே . மனங்கள் மகிழ்ந்திருக்கும்போது வாழ்வு இனிக்கிறது . காண்பதெல்லாம் அழகின் சிரிப்பு . நாளெல்லாம் திருநாளாக , நடையெல்லாம் நாட்டியமாகிறது , வாயெல்லாம் புன்னகைப் பூக்கள் .



மனங்களில் இருள்மண்டும்போது வாழ்விலும் இருள்மேகங்கள் சூழ்ந்து கொள்கின்றன . வாழ்வு நரகமாகிறது . நமக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் பூதாகரமாகத் தோன்றுகின்றன . எங்கும் எரிமலையின் குமுறல்களும் , இடிமேகங்களும் நம்மைத் தாக்குவது போன்ற உணர்வு நிலைக்கு நாம் தள்ளப்படுகிறோம் . நமக்கு எதிராகச் சதிசெய்யும் மக்கள் அலையலையாக வருவதைக் காண்கிறோம் . நண்பர்களோடும் போருக்குத் தயாராகிறோம் . வாழ்வு கலைந்து போகும் கனவா , கானல்

நீரா என எண்ணத் தோன்றுகிறது .

கடவுள் பக்தியும் இப்படி மாறுபட்ட காட்சிகளைத் தரக்கூடியதே . மகிழ்ச்சியும் சோகமும் , சொர்க்கமும் நரகமும் , இருளும் பகலும் மாறி மாறி வரக்கூடிய புதிராகவே இருக்கும் .

திருத்தூதர் யாக்கோபு இவ்வாறு கூறுகிறார் – சோதனையை மன உறுதியுடன் தாங்குவோர் பேறுபெற்றோர் . ஏனெனில் அவர்கள் தகுதி எண்பிக்கப்படும்போது , தம்மீது அன்பு கொள்வோருக்குக் கடவுள் வாக்களித்த வாழ்வாகிய வெற்றிவாகையினை அவர்கள் பெறுவார்கள் .

யாக்கோபு முதலதிகாரம் வசனம் 12 .



எனவே இன்றைய நற்செய்தி நமக்குத் தரும் பாடம் இதுவே . கடவுள் பற்று என்பது வாழ்வைப் போன்றதே . விசுவாசத்துக்கு மலைபோன்ற அனுபவங்களும் , மடுப்போன்ற தாழ்நிலையும் உண்டு . மலைமீது நிற்கும்போது நாம் கடவுளை நம்புவதும் , அவருக்கு அன்பு செய்வதும் எளிது . ஆனால் நாம் பள்ளத்தாக்கில் நிற்கும்போது கடவுளை நம்புவதும் , அன்பு செய்வதும் கடினமாகத் தோன்றும் .

ஆனால் நாம் சோதனைகள் வரும் போது கடவுளுக்குப் பிரமாணிக்கமாக இருந்தால் , தம்மை அன்பு செய்பவர்களுக்கு அவர் வாக்களித்துள்ள பெருவாழ்வைத் தந்தருள்வார்







All the contents on this site are copyrighted ©.