2009-03-07 14:20:16

கொலம்பியா குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு கொள்கையில் சீர்திருத்தம் செய்யப்பட ஆயர்கள் அழைப்பு


மார்ச்07,2009. தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில் 40 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வரும் உள்நாட்டுச் சண்டை முடிவுக்கு வரவும் கேடு வருவிக்கும் போதைப் பொருள் வியாபாரம் நிறுத்தப்படவும் அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத் தலைவர் பராக் ஒபாமாவை கேட்டுள்ளனர் கொலம்பியத் திருச்சபை தலைவர்கள்.

கொலம்பியாவின் உள்நாட்டுச் சண்டை மிக அதிகமான மனிதாபிமான பெருந்துயரை, குறிப்பாக புலம் பெயர்ந்த குடும்பங்களில் ஏற்படுத்தியுள்ளது என்றுரைத்த கொலம்பிய ஆயர் பேரவையின் காரித்தாஸ் அமைப்பின் தலைவர் ஆயர் ஹெக்டர் ஹெனாவோ கவிரியா, குடிமக்களையும் உள்ளடக்கிய பேச்சுவார்த்தை மூலம் உள்நாட்டுச் சண்டைக்குத் தீர்வு காணப்பட வேண்டும் என்றார்.

போதைப் பொருள் வியாபாரத்துக்கு எதிரான அமெரிக்க ஐக்கிய நாட்டு மற்றும் கொலம்பிய கொள்கையை மீண்டும் செயல்படுத்துமாறும் கொலம்பியத் திருச்சபை தலைவர்கள் இணைந்து ஒபாமாவுக்கு எழுதியுள்ள கடிதம் வலியுறுத்துகிறது.

கொலம்பியா குறித்த அமெரிக்க ஐக்கிய நாட்டு கொள்கையில் சீர்திருத்தம் செய்யப்படுமாறும் ஆயர்கள் அழைப்பு விடுத்தனர்.

ஆப்ரிக்க நாடான சூடானுக்கு அடுத்தபடியாக அதிகமான புலம் பெயர்ந்த மக்களைக் கொண்டுள்ள நாடு கொலம்பியாவாகும். மேலும், கொக்கெய்யின் போதைப் பொருளுக்கு முக்கிய கலவைப் பொருளாக இருக்கும் கோக்கோ பெருமளவி்ல் தயாரிக்கப்படும் இலத்தீன் அமெரிக்க நாடுகளில் முதலிடம் வகிப்பதும் இந்நாடாகும்.








All the contents on this site are copyrighted ©.