2009-03-03 14:07:11

இந்தியாவில் வருகிற பொதுத்தேர்தல்களில் ஜனநாயகக் கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்குமாறு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை வலியுறுத்தல்


மார்ச்03,2009. இந்தியாவில் வருகிற ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவுள்ள பொதுத்தேர்தல்களில் சமயச் சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கொள்கைகளைக் கொண்ட வேட்பாளர்களுக்கு ஓட்டளிக்குமாறு இந்திய கத்தோலிக்க ஆயர் பேரவை குடிமக்களைக் கேட்டுள்ளது.

இந்திய ஆயர் பேரவை சார்பில் இவ்வழைப்பை முன்வைத்த அறிக்கையை வெளியிட்ட அப்பேரவையின் செயலர் பேராயர் ஸ்தனிஸ்லாஸ் பெர்னாண்டஸ், எந்தவித குற்றப் புகார்கள் அல்லது குற்றங்களுக்கான பின்னணி இல்லாதவர்களையும், இளையோர், பெண்கள், குறிப்பாக ஏழைகள் மற்றும் ஓரங்கட்டப்பட்டோர் மீது உண்மையான அக்கறை உள்ளவர்களையும் ஊக்குவித்து அவர்களுக்கு வாக்களிக்குமாறு கூறினார்.

சமயச் சார்பற்ற மற்றும் ஜனநாயகக் கொள்கைகளைப் பாதுகாத்து அவைகளுக்காக உழைத்து அவைகளைப் பரப்பும் வேட்பாளர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்குமாறு இந்திய ஆயர்கள் விரும்புகின்றனர் என்றுரைத்த பேராயர் பெர்னாண்டஸ், எவ்வித வகுப்புவாத, இனப்பாகுபாடுகளுக்கு இடம் கொடுக்காமல் இந்திய அரசியல் அமைப்புக்கு உண்மையாகவுள்ள அரசியல் தலைவர்கள் தேவை என்றும் வலியுறுத்தினார்.

கிறிஸ்தவ பிற்படுத்தப்பட்ட சமூகங்கள், தங்கள் சமூகத்தைச் சார்ந்த பிற மதத்தவர் அனுபவிக்கும் சலுகைகளையும் அவர்களைப் போன்ற சமஉரிமைகளையும் பெறுவதற்கு கட்சிகள் ஆவன செய்யவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.

நிலத்தடி நீர்வளம், காடுகள், தாதுக்கனிகள், ஆறுகள் போன்ற இயற்கை வளங்கள் சுரண்டப்படுவதால் ஏற்பட்டுள்ள உலக வெப்பநிலை மாற்றம் உள்ளிட்ட சுற்றுச்சூழல் கேடுகளையும் அவர்கள் சுட்டிக் காட்டியுள்ளனர்.

இந்தியாவின் பொதுத்தேர்தல், வருகிற ஏப்ரல் 16 முதல் மே மாதம் 13 தேதி வரை 5 கட்டங்களாக நடக்கவுள்ளது என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில் 70 கோடி வாக்காளர்கள் இருக்கிறார்கள்.








All the contents on this site are copyrighted ©.