2009-02-28 13:48:08

ஆயர் வில்லியம்சன் யூதப்படுகொலைகள் பற்றிய தனது தவறான விமர்சனத்திற்குத் தெரிவித்துள்ள வருத்தம் போதுமானதாக இல்லை, திருப்பீடம்


28பிப்.2009. கத்தோலிக்கத் திருச்சபையிலிருந்து முன்னர் புறம்பாக்கப்பட்ட பிரிட்டன் ஆயர் ரிச்சர்ட் வில்லியம்சன் யூதப்படுகொலைகள் பற்றிய தனது தவறான விமர்சனத்திற்குத் தெரிவித்துள்ள வருத்தமானது போதுமானதாக இல்லை என்று திருப்பீடம் தெரிவித்தது.

ப்ரெஞ்ச் பேராயர் மார்செல் லெப்பெப்ரே ஏற்படுத்திய புனித பத்தாம் பத்திநாதர் கழகத்தின் முன்னாள் உறுப்பினராகிய ஆயர் ரிச்சர்ட் வில்லியம்சன், கத்தோலிக்கத் திருச்சபையில் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டதற்குச் சில வாரங்களுக்கு முன்னர் ஸ்வீடன் தொலைக்காட்சி ஒன்றிற்க்கு அளித்த பேட்டியில், இரண்டாம் உலகப் போரின் போது நாத்சி வதைப்போர் முகாம்களில் 60 இலட்சம் யூதர்கள் விஷவாயுவினால் கொல்லப்பட்டார்கள் என்பதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதையொட்டி கத்தோலிக்க–யூத மதங்களின் உறவுகளில் சலசலப்பு தொடங்கியதையடுத்து, இவ்வியாழனன்று அறிக்கை வெளியிட்ட ஆயர் வில்லியம்சன், தான் கூறிய கருத்துக்கள் 20 ஆண்டுகளுக்கு முன்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில் இருந்தன, இந்த எனது கருத்துக்கள் திருச்சபையையும் அநீதியான வதைப்போர் முகாம்களில் தப்பிப் பிழைத்தவர்கள் மற்றும் அவற்றில் பலியானவர்களின் உறவுகளையும் இவ்வளவு தூரம் பாதிக்கும் என்று தெரிந்திருந்தால் இவ்வாறு கூறியிருக்க மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த திருப்பீட பேச்சாளர் அருட்திரு பெதரிக்கோ லொம்பார்தி, ஆயரின் இவ்வறிக்கை, இவ்விவகாரத்தில் திருப்பீடம் முன்வைத்துள்ள வரையறைகளை மதிப்பது போல் தெரியவில்லை என்று கூறினார்.








All the contents on this site are copyrighted ©.