2009-02-26 11:53:42

புனித பவுலைப் பின்பற்றி இத்தவக்காலத்தில் கத்தோலிக்கர்கள் செபம், தானம், நோன்பு ஆகிய நற்பண்புகளில் வாழ திருத்தந்தை அழைப்பு


26பிப்.2009. கத்தோலிக்கர்கள் புனித பவுலைப் பின்பற்றி இத்தவக்காலத்தில் செபம் தானம் நோன்பு ஆகிய நற்பண்புகளில் வாழுமாறு அழைப்புவிடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

இவ்விபூதிப் புதன் மாலை உரோம் புனித ஆன்செல்ம் பசிலிக்காவிலிருந்து புனித சபினா பசிலிக்காவிற்கு கர்தினால்கள், ஆயர்கள் மற்றும் பொதுநிலையினருடன் தவப்பவனிச் சென்று திருப்பலி நிகழ்த்திய திருத்தந்தை, விசுவாசிகளின் நெற்றிகளில் திருநீறைப் பூசுமுன்னர் மறையுரையாற்றிய போது இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

இந்த சாம்பல் புதன் திருவழிபாடு மனமாற்றத்தின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது என்று விளக்கிய திருத்தந்தை, நம் ஆண்டவர் மனம் மாறுகிறவர்களின் பாவங்களை மறக்கிறார் மற்றும் மன்னிக்கிறார் என்று இன்றைய திருவழிபாட்டின் முன்னுரைப் பாடல் கூறுகிறது என்றார்.

மனமாற வேண்டுமென்ற கடவுளின் அழைப்புக்கு மக்கள் செவிமடுத்தால், அவர் தமது இரக்கத்தை வெற்றி பெறச் செய்து அவரது நண்பர்களை எண்ணற்ற சலுகைகளால் நிரப்புவார் என்றும் திருத்தந்தை கூறினார்.

இந்த ஆண்டு பிறஇனத்தாரின் திருத்தூதராகிய புனித பவுலுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது பற்றிக் குறிப்பிட்ட திருத்தந்தை, தவக்காலத்தில் வாழப்படுகின்ற பாஸ்கா மறைபொருளின் இறைஅருள் வல்லமையை அசாதாரண விதத்தில் அனுபவித்தவர் புனித பவுல் என்றும் கூறினார்.

ஆண்டவரின் திருத்தூதர் என்று தன்னை அழைத்துக் கொண்ட புனித பவுலின் போதனையும், ஏன் அவரது மறைப்பணி வாழ்வு முழுவதுமே, அவரின் அடிப்படையான இறையருள் அனுபவத்தால் உந்தி தள்ளப்பட்ட ஓர் உள்ளார்ந்த சக்தியால் கொண்டு செலுத்தப்பட்டதாகும் என்றும் திருத்தந்தை கூறினார்.

தன்னில் இடம்பெற்ற ஒவ்வொன்றும் இறையருளின் வேலை என்பதை ஏற்றுக்கொண்ட புனித பவுல் இத்தவக்காலத்தை நாம் எவ்வாறு வாழ வேண்டுமென்று காட்டுகிறார் என்ற அவர், திருமுழுக்குப் பெற்ற ஒவ்வொருவரிலும் கிறிஸ்து ஆட்சி செய்ய வேண்டுமானால் அவர்கள் அவரது போதனைகளைப் பிரமாணிக்கத்துடன் பின்பற்ற வேண்டும் என்றார்.

நன்மைக்கும் தீமைக்கும் இடையேயான நமது போராட்டத்தில் தொடர்ந்து எதிர் நீச்சல் போட்டுப் பயணம் செய்ய செபம், தானம், நோன்பு ஆகியவை நமக்கு உதவியாக இருக்கும் என்பதையும் அவர் கோடிட்டுக் காட்டினார்.








All the contents on this site are copyrighted ©.