2009-02-25 14:50:24

வாழ்வில் நன்மை செய்யவும், தீமையின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகப் போராடவும் கிறிஸ்தவ விழுமியங்கள் செயல்படுத்தப்படவும் பிரேசில் நாட்டு மக்களுக்கு திருத்தந்தை அழைப்பு


25பிப்.2009. மனித வாழ்வில் நன்மை செய்யவும், தீமையின் ஒவ்வொரு வடிவத்திற்கு எதிராகப் போராடவும் கிறிஸ்தவ விழுமியங்கள் செயல்படுத்தப்படவும் இத்தவக்காலத்தில் முயற்சிக்குமாறு பிரேசில் நாட்டு மக்களுக்கு அழைப்பு விடுத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

பிரேசில் தலத்திருச்சபை இப்புதனன்று அபாரெசிதா மரியா திருத்தலத்தில் தொடங்கியுள்ள அத்திருச்சபையின் சகோதரத்துவ நடவடிக்கையை முன்னிட்டு அத்தலத்திருச்சபைக்குச் செய்தி அனுப்பிய திருத்தந்தை, தவக்காலம் நீதியின் காலம், ஏனெனில் ஒரு நீதியான சமூகம் ஓர் அமைதியான சமூகத்திலிருந்து பிறக்கின்றது என்றார்.

சமுதாயம் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சனைகளை ஒவ்வோர் ஆண்டும் தவக்காலத்தில் வெளிச்சத்துக்குக் கொண்டு வந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் பிரேசில் தலத்திருச்சபையின் இத்தவக்கால நடவடிக்கைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், உண்மையான அமைதி, நீதியின் கனி, எனினும் மனிதனின் நீதி எப்பொழுதும் உடையக்கூடியதாகவும் நிறைவற்றதாகவும் இருக்கின்றது என்று பாப்பிறை 2ம்ஜான் பவுல் 2002ம் ஆண்டு அமைதி தினச் செய்தியில் கூறியதைக் கோடிட்டுக் காட்டினார்.

சிதைந்த மனித உறவுகளால் ஏற்பட்ட காயங்களை மன்னிப்பின் மூலம் குணப்படுத்தி அவ்வுறவை மீண்டும் உருவாக்குவதில் இந்த மனித நீதி முழுமை அடைகின்றது என்றும் அச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார் அவர்.

அமைதி நீதியின் கனி என்ற தலைப்பிலான இவ்வாண்டு தவக்கால நடவடிக்கைப் பற்றிப் பேசிய திருத்தந்தை, நீதிக்கான செயல்பாடுகளைச் சோர்ந்துவிடாமல் துணிந்து நடத்த இத்தவக்காலம் அழைப்பு விடுக்கின்றது என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

இப்புதன் மாலை உரோம் புனித சபினா பசிலிக்காவில் திருநீற்றுப் புதன் திருப்பலியை நிகழ்த்துகிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இன்றைய வழக்கமான புதன் பொது மறைபோதகம் இடம் பெறவில்லை.








All the contents on this site are copyrighted ©.