2009-02-24 18:38:58

விவிலியத்தேடல் – சாம்பல் புதன் . 25-02-09 .


மாலை நேரம் . வேதநாயகர் அலங்காரக் கைத்தடியை எடுத்துக்கொண்டு உலாவி வரப் புறப்பட்டார் .வயல்காட்டு வழியே சென்றார் . வயலில் நெல்மணிகள் பொன்மணிகளாக பூமியில் படுத்துக்கிடந்தன . அங்கே பணியாற்றிக் கொண்டிருந்த பணியாளை நோக்கி அறுவடை எப்போது எனக் கேட்டார் . இன்னும் நாலு நாள் ஆகுமென்றார் பண்ணையாள் . அங்கிருந்த தோட்டத்தில் மல்லிகை மொட்டுக்களைப் பறித்துக் கொண்டிருந்தாள் சிறுமி . என்ன பாப்பா மொட்டுக்களைப் பறிக்கிறே எனக் கேட்டார் . அப்பத்தாங்க கட்டுவதற்கு எளிதாக இருக்கும் என்றாள் சிறுமி . வழியில் தச்சர்கள் ஒரு மரத்தைப் பார்த்துக்கொண்டிருந்தனர் . ஒருவர் அங்கிருந்த மரம் இன்னும் வைரம் பாயவில்லை , இன்னும் கொஞ்சக் காலம் ஆகவேண்டும் எனப் பேசிக்கொண்டிருந்தனர் .வீட்டிற்கு வந்தபோது வேதநாயகரிடம் வேலையாள் , ஐயா, அண்ணன் மகன் தவறிவிட்டான் .ஒரு நாள் லீவு வேணும் என்றார் .ஐயோ , யாரப்பா அது எனக் கேட்டார் . சின்னப்பய்யங்க , 5 ஆவது படித்துக்கொண்டிருந்தான் .பாவம் சரி , போப்பா , என்றார் . அருகே வந்த மனைவியிடம் பாவம் , சின்னப்பனின் மகன் இறந்துவிட்டானாமே . இதுக்கு மட்டும் காலம் இல்ல போலிருக்கு என்றார் .

நெல் அறுக்க ஓர் காலம் மலர் கொய்ய ஓர் காலம்

நெடிய பாரக் கல்லறுக்க ஓர் காலம் மரமறுக்க ஓர் காலக் கணிதம் உண்டு

வல்ல அரக்கன் அனைய நமன் நினைத்தபோதெல்லாம் வாழ்நாள் என்னும் புல்லறுக்க வருவன் எனில் நெஞ்சமே மற்று இனியான் புகல்வது என்னே . மரணம் பற்றிய தியானம் கடவுளைப்பற்றி எண்ண வைக்கிறது .



இன்றைய முதல் வாசகம் யோவேல் இறைவாக்கினர் .பழைய ஏற்பாட்டுக்காலத்தில் சாம்பல் பல்வேறு சமயச் சடங்குகளில் பயன்படுத்தப்பட்டது . 2வது சாமுவேல் ஆகமம் 13,19 இல் கற்பழிக்கப்பட்ட ஒரு பெண் தலையில் சாம்பலைப் போட்டுக்கொண்டு துக்கம் கொண்டாடுகிறார் . இறைவாக்கினர் எரேமியா 6,26 ல் துக்கம் கொண்டாட மக்கள் சாம்பலில் புரண்டிருக்கிறார்கள் . யோபு ஆகமத்தில் தங்கள் உடலில் சாம்பலைத் தடவி பாவங்களுக்காக வருத்தம் தெரிவித்திருக்கின்றனர் . இதுபற்றி இயேசு கூறுவதை மத்தேயு நற்செய்தி 11, 21 ல் காண்கிறோம் .இயேசு வல்ல செயல்கள் பல நிகழ்த்திய நகரங்கள் மனம் மாறவில்லை . எனவே அவர் அவற்றைக் கண்டிக்கத் தொடங்கினார் . – உங்களிடையே செய்யப்பட்ட வல்ல செயல்கள் தீர், சீதோன் நகரங்களில் செய்யப்பட்டிருந்தால் அங்குள்ள மக்கள் முன்பே சாக்கு உடை உடுத்திச் சாம்பல் பூசி மனம் மாறியிருப்பர் .



இன்று சாம்பல் புதன் வழிபாட்டைக் கொண்டாடுகிறோம் . ஒவ்வொரு ஆண்டும் நாம் சாம்பல் புதனன்று நமது நெற்றியில் சாம்பலைத் தடவிக்கொள்கிறோம் . இரண்டு காரணங்களுக்காக நாம் இவ்வாறு செய்கிறோம் .

சாம்பல் நம் மன வருத்தத்துக்கு அடையாளம் . அது நாம் நம்முடைய பாவங்களுக்காக மனம் வருந்தி தவக்காலத்தில் நாம் பாவங்களுக்காகப் பரிகாரம் செய்வோம் என்பதைக் காட்டுகிறது . சாம்பலை நெற்றியில் குருவானவர் தடவும்போது பாவத்திலிருந்து அகன்று நற்செய்திக்குப் பிரமாணிக்கமாக இருங்கள் எனக் கூறுகிறார் .

அடுத்து சாம்பல் நாம் ஒரு நாள் இறப்போம் என்பதற்கு அறிகுறியாகும் . இதை நாம் புரிந்து கொள்ள கடவுள் ஆதம் , ஏவாளுக்குச் சொல்லியதை நாம் நினைவுக்குக் கொண்டுவருதல் வேண்டும் . இதை நாம் விவிலியத்தின் தொடக்க நூலில் 3, 17 , 19 வசனங்களில் காண்கிறோம் . நான் கட்டளையிட்டு விலக்கிய மரத்திலிருந்து நீ உண்டதால் உன் பொருட்டு நிலம் சபிக்கப்பட்டுள்ளது . உன் வாழ் நாளெல்லாம் வருந்தி அதன் பயனை உழைத்து நீ உண்பாய் . நீ மண்ணிலிருந்து உருவாக்கப்பட்டதால் அதற்குத் திரும்பும் வரை நெற்றி வியர்வை நிலத்தில் விழ உழைத்து உன் உணவை உண்பாய் . நீ மண்ணாய் இருக்கிறாய் . மண்ணுக்கே திரும்புவாய் , என்றார் .



இறைப்பற்றுள்ளவர்கள் செய்யக்கூடிய மூன்று சமயத்தைச் சார்ந்த செயல்கள் தானம் செய்தல் , செபம் செய்தல் , தவமிருத்தல் . இம்மூன்றையும் இன்றைய நற்செய்தியில் இயேசு வலியுறுத்துகிறார் .

தர்மம் செய்வது பற்றி இயேசு இவ்வாறு கூறுகிறார் . தானம் செய்யும்போது உனது இடது கை செய்வது உனது வலது கைக்குத் தெரியவேண்டாம் . உங்கள் தர்மம் இரகசியமாக இருக்கவேண்டும் . இதைக் காணும் உங்கள் கடவுள் தந்தை இரகசியாக உங்களுக்குக் கைம்மாறு அளிப்பார் . அதே போல தனித்திருந்து விளம்பரப்படுத்தாது செபிக்குமாறு இயேசு அறிவுறுத்துகிறார் . அப்போது உங்கள் தந்தையாகிய கடவுள் நீங்கள் கேட்பதை அருள்வார் என்கிறார் . நீங்கள் நோன்பிருப்பதை பிறருக்கு அறிவிக்க வேண்டாம் . மறைவாக நீங்கள் செய்யும் தவமுயற்சிக்குத் தக்க கைம்மாற்றை கடவுள் அருள்வார் என இயேசு கூறுகிறார் .

எனவே இத்தவக்காலத்தில் ஏழைகளுக்கென்று நாம் நம் ஒரு தொகையைச் சேமித்து வைத்து அவர்களுக்கு வழங்கலாம் . நம் செபிப்பதை அதிகப்படுத்தியும் ஆழப்படுத்தியும் , உணவைக்குறைத்து நோன்பிருந்தும் நம் பாவங்களுக்காக மனம் வருந்தி மன்னிப்பு விழைந்து மன மாற்றம் பெற கடவுள் அருளை வேண்டுவோம் . நாம் என்ன செய்கிறோம் என்பதைவிட ஏன் செய்கிறோம் என்பதை நாம் உணரவேண்டும் . நம் குற்றங்களுக்காக மனஸ்தாபப்படுவதோடு , நம் பாவங்களில் சிலுவையில் ஏற்றிய இயேசுவிடம் மன்னிப்பு விழைந்து நாம் அவருடைய உயிர்த்தெழுதலை மகிழ்ச்சியோடு கொண்டாட இது வழிவகுக்கும் .

மகாபாரத்தில் நாம் அருச்சுணரும் அவர் சகோதரர்களும் வில்வித்தை கற்ற பிறகு போட்டிக்குச் செல்வதைப்பார்க்கிறோம் . துரோணாச்சாரியார் கம்பம் ஒன்றின் உச்சியில் மீன் ஒன்றைத் தொங்கவிட்டு அதைக் குறிபார்த்து அம்பை எய்யுமாறு கூறினார் . அம்பைவிடும் முன் ஒவ்வொருவரிடமும் துரோணர் அவர்கள் கம்பத்தின் உச்சியில் காண்பது என் என வினவினார் . அருச்சுணனின் சகோதரர்கள் மீனின் தலை , உடல் , வால் என மீனை முழுவதுமாக வருணித்தனர் . அருச்சுணன் ஒருவர்தான் தான் மீனை அல்ல அதன் விழியை மட்டுமே காண்பதாகக் கூறினார் . அம்பை விடுமாறு துரோணர் கூற அருச்சுணரின் அம்பு மீனை வீழ்த்தியது . அதே போல நாம் நிலையில்லாத வாழ்வில் நிஜமாக வரக்கூடிய நிலைவாழ்வை நெஞ்சில் நிறுத்தி நம் வாழ்க்கைப் படகைச் செலுத்துமாறு தவக்காலம் அழைப்பு விடுக்கிறது . கண்டதே காட்சி , கொண்டதே கோலம் என்று வாழ்வதைத் தவிர்த்து மறுவாழ்வுக்குச் சீட்டை பதிவு செய்ய வழிசெய்வோம் .








All the contents on this site are copyrighted ©.