2009-02-24 15:16:35

இன்றைய உலகின் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள், மக்கள் தங்கள் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்குத் தடையாக உள்ளன, திருப்பீட அதிகாரி


24பிப்.2009. இன்றைய உலகின் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடிகள் எங்ஙனம் மனிதர்கள் தங்கள் மனித உரிமைகளை முழுமையாக அனுபவிப்பதற்குத் தடையாக உள்ளன என்பது குறித்து ஐ.நா.வின் மனித உரிமைகள் குறித்த பத்தாவது அவையில் உரையாற்றினார் திருப்பீட அதிகாரி ஒருவர்.

ஜெனீவாவிலுள்ள ஐ.நா.அலுவலங்களுக்கான திருப்பீடத்தின் நிரந்தரப் பார்வையாளர் பேராயர் சில்வானோ தொமாசி வழங்கிய உரையில் இன்றைய நிதி நெருக்கடி எவ்வளவு தூரம் வேலைவாய்ப்புக்களையும் உணவு, நீர், நலஆதரவு போன்றவைகளுக்கான உரிமைகளையும் பாதித்து நம்பிக்கை இழப்புக்களின்வழி அமைதிக்கு ஊறுவிளைவித்துள்ளது என்பதை விவரித்தார்.

ஏற்கனவே 2008ம் ஆண்டில் 13 கோடிப் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டிருக்க, இந்த ஆண்டில் மேலும் 5 கோடியே 30 இலட்சம் பேர் வறுமைக்கோட்டிற்குக் கீழ் தள்ளப்படும் அபாயம் குறித்தும் எடுத்துரைத்த அவர், 2015ம் ஆண்டிற்குள் வறுமையை ஒழிக்கும் திட்டம் வெற்றியடைவதற்கான வாய்ப்புக் குறைவுகளையும் சுட்டிக்காட்டினார்.

குடிபெயர்தல்கள், வெளிநாட்டுப் பணியாளர்கள் போன்றவர்களில் இந்நிதி நெருக்கடி ஏற்படுத்தியுள்ள தாக்கம் மற்றும் குழந்தைகளின் கல்வி மற்றும் வருங்காலத்தில் ஏற்படுத்தவுள்ள தாக்கம் போன்றவைகளையும் குறிப்பிட்டு இதற்கு நீதியான தீர்வு காணப்பட வேண்டியதன் அவசியத்தையும் சுட்டிக்காட்டியுள்ளார் பேராயர் தொமாசி.








All the contents on this site are copyrighted ©.