2009-02-23 15:52:22

திருத்தந்தை தனக்காகச் செபிக்குமாறு அனைவருக்கும் அழைப்பு


23பிப்.2009. திருத்தந்தை 16ம் பெனடிக்ட், உரோமை ஆயர் என்ற முறையில் தனது பணியை வெற்றிகரமாக நிறைவேற்றுவதற்குத் தனக்காகச் செபிக்குமாறு அனைவருக்கும் ஞாயிறன்று அழைப்பு விடுத்தார்.

புனித பேதுருவின் தலைமைப்பீடத் திருவிழா சிறப்பிக்கப்பட்ட இஞ்ஞாயிறன்று புனித பேதுரு பசிலிக்கா வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விசுவாசிகளுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவரும் தனக்காகச் செபிக்குமாறு கேட்டுக் கொண்டார்.

இறைமக்கள் அனைவருக்கும் சிறப்புப் பணியாற்ற அழைக்கப்பட்டுள்ள உரோமை ஆயரின் அதிகாரத்தை புனித பேதுருவின் தலைமைப்பீடம் குறித்து நிற்கின்றது என்ற அவர், புனிதர்கள் பேதுருவும் பவுலும் மறைசாட்சிகளாகக் கொல்லப்பட்ட பின்னர், உடனடியாக கத்தோலிக்கச் சமூகத்தில் உரோமைத் திருச்சபையின் தலைமைத்துவம் அங்கீகரிக்கப்பட்டது என்று விளக்கினார்.

அகிலத் திருச்சபையில், குறிப்பிட்ட திருச்சபைகள் சரியான இடத்தை வகிக்கின்றன, மற்றும் அவைகள், தங்கள் மரபுகளைக் கைவிடாது, அதேசமயம் அகிலத் திருச்சபையின்மீது அதிகாரம் கொண்ட புனித பேதுருவின் தலைமை பீடத்தை எந்த வழியிலும் எதிர்க்காமல் அதனை ஏற்கின்றன என்ற உண்மையையும் கோடிட்டு காட்டினார் திருத்தந்தை.

இந்தப் பேதுருவின் தலைமை பீடம் நியாயமான வேறுபாடுகளை பாதுகாக்கின்றது, அதேவேளை இந்த வேறுபாடுகள் ஒற்றுமைக்குத் தடங்கலாய் இருக்காது மாறாக அதற்கு உதவும் இருக்கும் என்பதற்கு உறுதியளிக்கின்றது என்றும் அவர் கூறினார்.

இயேசு முடக்குவாதமுற்றவர்க்கு குணமளித்த இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகம் பற்றிய சிந்தனைகளையும் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை, இயேசு நோயாளிகளைக் குணமாக்கும் வல்லமையை மட்டுமல்ல, பாவங்களை மன்னிக்கும் சக்தியையும் கொண்டுள்ளார் என்றார்.

உடல்நோய் குணமாவது இயேசுவின் மன்னிப்பின் பயனாக அமையும் ஆன்மீகக் குணப்படுத்தலின் அடையாளமும் ஆகும் என்றும் அவர் கூறினார்.

உண்மையில், பாவம் ஆன்மாவை முடக்கிப் போடும் ஒருவித முடக்குவாதமாகும், இறைவனின் இரக்கம்நிறை அன்பின் சக்தி மட்டுமே நம்மை இவற்றிலிருந்து விடுவிக்க முடியும், அதன் மூலம் நாம் மீண்டும் நன்மைத்தனத்தின் பாதையைத் தேர்ந்து கொள்ள முடியும் என்றும் அவர் கூறினார்.

இறுதியில் வருகிற புதனன்று, தபக்காலம் தொடங்குவது பற்றியும் குறிப்பிட்ட திருத்தந்தை., இத்தபக்காலத்தில் பக்திநிறைந்த இதயத்துடன் நுழையுமாறும் விசுவாசிகளுக்கு அழைப்பு விடுத்தார். உரோம் புனித சபினா பசிலிக்காவில் விபூதிப் புதன் திருவழிப்பாட்டை நிகழ்த்துவார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

 








All the contents on this site are copyrighted ©.