2009-02-21 15:31:22

எந்த ஒரு மனிதன் மீதும், அவனது பிறப்புமூலம் பற்றிய கூறுகளின் அடிப்படையில் நடத்தப்படும் எவ்வித பாகுபாடான செயல்களும் முழு மனித சமுதாயத்தையே தாக்குவதாகும், திருத்தந்தை


21பிப்.2009. திருப்பீட வாழ்வு கழகம் வத்திக்கானில் நடத்திய இரண்டு நாள் மாநாட்டில் கலந்து கொண்ட ஏறத்தாழ 300 பேரை இன்று சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, எந்த ஒரு மனிதன் மீதும், புற்று நோயை வருவிக்கும் ஆபத்துக்கள் போன்ற அவனது பிறப்புமூலம் பற்றிய கூறுகளின் அடிப்படையில் நடத்தப்படும் எவ்வித பாகுபாடான செயல்களும் முழு மனித சமுதாயத்திற்கெதிராகச் செய்யப்படுவதாக நோக்கப்படும் என்றார்.

மனிதனின் பிறப்புமூலத்தின் புதிய எல்லைகள் மற்றும் யுஜெனிக்கிஸ் என்ற மனித இனத்தை மேம்படுத்தி வளம்பட உயர்த்தும் வழிமுறைகள் பற்றி ஆராய்வது குறித்த மருத்துவஅறிவியலின் ஆபத்துக்கள் பற்றிய இம்மாநாட்டின் மையப் பொருள் பற்றிப் பேசிய திருத்தந்தை, ஒவ்வொரு மனிதனின் மாண்பும் சமத்துவமாக நோக்கப்பட வேண்டும் என்றார். யுஜெனிக்கிஸ் என்பது வம்சாவழியை கட்டுபடுத்துவதன் வழி மனித இனத்தின் தரத்தை மேம்படுத்துவதற்கான முயற்சியாகும்.

மரபணு சார்ந்த நோய்களை இனம் காண்பது மற்றும் அவைகளுக்கான சிகிச்சைகள் குறித்த விஞ்ஞான ஆய்வுகளின் முன்னேற்றம் பற்றியும் பாராட்டிய அதேவேளை, இம்முன்னேற்றம், உடல் அழகு, முழுநிறைவான உடல் அமைப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பாகுபடுத்தப்படுவதற்கு இட்டுச் செல்வது கவலை தருவதாய் உள்ளது என்றும் அவர் கூறினார்.

உயிரியல், உளயியல், கலாச்சாரம் அல்லது ஆரோக்யமான நிலை எதிலும் இடம் பெறும் முன்னேற்றத்தில் மனிதன் பாகுபடுத்தப்பட்ட பொருளாக ஒருபொழுதும் மாறக்கூடாது என்பதை வலியுறுத்தினார் அவர்.

மாறாக, ஊனமுற்றோர் மற்றும் நோயினால் பாதிக்கப்பட்டோர் மீது அன்பும் தோழமையும் காட்டும் கலாச்சாரம் தேவை, இன்னும் ஆரோக்யமான உடல் அமைப்பைத் தேர்ந்தெடுப்பதன் பெயரில் மனித வாழ்வு தெரிவு செய்யப்படுவது அல்லது ஒதுக்கப்படுவது ஆகிய நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டும் என்றும் திருத்தந்தை கூறினார்.

 








All the contents on this site are copyrighted ©.