2009-02-19 11:30:06

வழிபாட்டு ஆண்டின் 7 ஆவது ஞாயிறு , மறையுரை - 22-02-09 .


ஒப்புரவு அருள்சாதனம் நம்மைப் பாவத்திலிருந்து விடுவிக்கிறது என்பது இன்றைய ஞாயிறு சிந்தனையின் மையக்கருத்து ஆகும் .



கடவுளின் கடத்தல்காரர் என்ற ஒரு நூல் சகோதரர் அந்திரேயா என்ற டச்சு மறைபோதகரைப் பற்றிக் கூறுகிறது . இவர் கம்யூனிச நாடுகளுக்கு விவிலியத்தைக் கடத்திக் கொண்டுபோய் தானம் செய்தவர் . தங்கத்தையும் வைரத்தையும் அங்குக் கொண்டு செல்வதைவிட விவிலியத்தை அங்கு கொண்டு சேர்ப்பது மிகவும் சிரமமான வேலையாகும் . அது அளவில் பெரிதாக இருந்ததே காரணம் . சகோதரர் அந்திரேயா சிறிய விவிலியங்களைக் காரில் மறைத்து வைத்து எடுத்துச் செல்வார். அப்படி ஒரே சமயத்தில் 800 விவிலியத்தைக் கொண்டு சென்றிருக்கிறார் .

பைபிளைக் கடத்துவதற்கு முன்னர் சகோதரர் அந்திரேயா டச்சு இராணுவத்தில் பணிசெய்திருக்கிறார் . அதுசமயம் ஒரு குரங்குக் குட்டியை அவர் வளர்த்திருக்கிறார் . அதைத் தூக்கும் பொழுது அந்தக்குரங்குக் குட்டி கத்த ஆரம்பிக்குமாம் . அவர் என்ன காரணம் என்று சோதித்த போது அக்குரங்கின் வயிற்றில் இறுக்கமாக ஒரு கம்பி கட்டப்பட்டிருந்தது . அது சிறு குட்டியாக இருந்தபோது யாரோ அதைக்கட்டியிருக்கிறார்கள் . கம்பியை நீக்காததால் வயிற்றின் சதைக்குள்ளேயே சென்று அது அழுத்திக் கொண்டிருந்தது . உடனே அதற்கு வைத்தியம் செய்து அந்தக் கம்பியை சகோதரர் அந்திரேயா நீக்கியிருக்கிறார் . சிகிச்சை முடிந்த பிறகு அந்தக் குரங்கு நடனக்கூத்தில் இருந்திருக்கிறது . பிரதர் அந்திரேயாவின் தோள்பட்டைக்குத் தாவி அவருக்கு முத்தமழையைப் பொழிந்திருக்கிறது .

கம்பியை நீங்கியதும் குரங்குக்கு விடுதலை பிறந்தது . அதனுடைய துன்பத்துக்குக் காரணமாக இருந்த காரணி நீங்கியது . குரங்குக்கு ஒரே ஆனந்தம் . அக்குரங்கின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை .

இன்றைய நற்செய்தியில், இயேசு “மகனே, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” எனக்கூறிய வார்த்தைகளைக் கேட்ட முடக்கு வாதமுற்றவர் அதைவிட அதிகமாக ஆனந்தக் கூத்தாடியிருக்கவேண்டும் . அவரைச் சிறைப்படுத்தியிருந்த நோயிலிருந்து முடக்குவாதமுற்றவர் விடுவிக்கப்பட்டார் . பாவத்திலிருந்தும் முடக்குவாதத்திலிருந்தும் விடுவிக்கப்பட்ட அவர் குரங்கின் வயிற்றை அழுத்திக்கொண்டிருந்த கம்பியை நீக்கியபோது பெற்ற விடுதலையைப் போன்றே மகிழ்ச்சிப் பெருக்கில் மிதந்தார் . அவர் கடவுளை மகிமைப்படுத்த ஆரம்பித்தார் .



நாம் எல்லோருமே நம்மை துயரப்படுத்தும் வேதனையிலிருந்து விடுவிக்கப்படும்போது விடுதலை பெற்ற மகிழ்ச்சியை அடைகிறோம் . கிறிஸ்தவர்களுக்கும் சரி , பிற சமய நண்பர்களுக்கும் சரி கடவுள் பற்று நம்பிக்கையில் தான் போய்க்கொண்டிருக்கிறது . கடவுளை நாம் யாரும் நேரில் கண்டு பேசியதாகக் கூறமுடியாது .

இந்த நம்பிக்கையின் அடிப்படையில் கத்தோலிக்கத் திருச்சபையில் பாவமன்னிப்பு என்ற அருள் சாதன வழிபாடு உள்ளது . அதன்படி மனது பொருந்தி குற்றம் செய்தவர் அதனை இரகசியக் காப்பீடு உத்தரவாதமுள்ள பாவ அறிக்கை என்ற சடங்கு வழியாக பாவத்தைக் குருவானவரிடம் கூறி மன்னிப்புப் பெறமுடியும் . பாவம் புரிந்தவர் மன்னிப்புப் பெறவேண்டும் என்பது கத்தோலிக்க மறையின் கண்டிப்பான ஒழுங்கு . கத்தோலிக்கர் அவர்களது பாவத்தை அறிக்கையிட்டு மன்னிப்புப் பெற்றுக்கொள்வார்கள் . அவ்வாறு பாவமன்னிப்புப் பெறுபவர் அடையும் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை . திருச்சபையால் அர்ச்சிக்கப்பட்ட ஒரு குருவானவர் இயேசுவின் பிரதிநிதியாக, “உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன”, எனக் கூறும்போது கடவுளே பாவங்களை மன்னித்துவிட்டார் என்பது கத்தோலிக்கரின் நம்பிக்கை . அந்த நம்பிக்கையால் வருவது விடுதலை உணர்வு.

ஆனால் ஒருவர் பாவத்தை அறிக்கையிடுவது என்பது நாம் நினைப்பது போல எளிதானதல்ல . நம் குற்றங்களை நாம் முதலில் மனதார ஏற்றுக்கொள்ள வேண்டும் . தன் நெஞ்சு அறிவதை நாம் மறைக்கக் கூடாது . ஒரு குருவிடம் மனம் திறந்து பேசி தாழ்ச்சியோடு நம் பாவத்தைக் அறிக்கையிட வேண்டும் . அதாவது நமக்குமட்டுமே தெரிந்த அந்தரங்க இரகசியங்களை வேறு ஒருவரிடம் இறைவன்மீது கொண்டுள்ள நம்பிக்கை காரணமாக தெரிவிக்கிறோம் . இந்தச் சம்பிரதாய வழிபாடு மனக்காயங்களை நீக்கி புது வாழ்வைத் தொடங்க வழிவகுக்கிறது .

ஒரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம் . குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு ஆல்ககால் அனாநிமஸ் என்ற ஒரு அமைப்பு உள்ளது . அது குடிப்பழக்கம் உள்ளவர்களை காப்பாற்றுகிறது .அது ஒரு மறுவாழ்வைக் கொடுக்கிறது . அந்த அமைப்பின் முதல் ஐந்து படிகளைப் பார்ப்போம் .

முதலாவதாக ஏற்றுக்கொள்ளவேண்டியது – குடிப்பழக்கத்திலிருந்து நான் என் சக்தியால் மீளமுடியாது . என் வாழ்க்கையும் எனது கட்டுப்பாட்டில் கிடையாது .



இரண்டாவதாக நமக்கு அப்பால் உள்ள ஒரு சக்தியால் நம்மைக் குணப்படுத்த முடியும் .



மூன்றவதாக நான் என் வாழ்வை கடவுளிடம் ஒப்படைக்க முடிவெடுத்துள்ளேன் . அவரால் எல்லாம் முடியும் .



நான்காவதாக நான் என் வாழ்க்கையை நன்கு ஆராய்ந்து குற்றத்தை ஏற்றுக் கொள்கிறேன் .



ஐந்தாவதாக நான் என் குற்றங்களை மனதார ஏற்றுக்கொண்டு அவற்றை கடவுளிடமும் , மற்று ஒருவரிடமும் மறைக்காது முழுவதையும் அறிவிக்கிறேன் .



இந்த இறுதி முடிவுதான் மிகவும் முக்கியமானது . இந்த முடிவை எடுக்கத் தயங்குபவர்கள் இதனைச் செய்யமுடியாமல் சிரமப்படுவார்கள் . கடவுளோடு தனியாகப் பேசுவதைவிட வேறொரு மனிதரிடம் நம் தவறுகளைக் கூறுவது எளிதானதல்ல . வேறொரு ஒருவரிடம் நாம் நேர்மையாக உண்மையைக் கூறும்போது ஒருவர் தன்னிடமும் , கடவுளிடமும் நேர்மையாக உள்ளார் என்பதை அது உறுதிசெய்கிறது .



குடிப்பழக்கம் உள்ளவர்களின் மறுவாழ்வு அமைப்பு மேலும் என்ன கூறுகிறதென்றால் தொடக்கத்தில் கடவுள் மீது நம்பிக்கையில்லாதவர்கள், நலம் பெற்றதும் கடவுளின் அருளைப் புரி்ந்து கொள்கிறார்கள் . கடவுளை உறுதியாகப் பற்றிக்கொண்டால்தான் நாம் நம் மனக்கவலையை மாற்ற முடியும். தொடக்கத்தில் கடவுள் பற்றுக் கொண்டிருந்தவர்கள் இன்னும் ஆழமாகக் கடவுளுடைய அருளை உணர்ந்து கொள்கிறார்கள் என குடிப்பழக்க மறுவாழ்வு அமைப்புக் கூறுகிறது .



இதிலிருந்து நாம் தெரிந்துகொள்வது என்னவென்றால் நாம் நம் குற்றத்தை கடவுளிடம் அறிக்கையிட்டு , நம் குற்றத்தை ஒப்புக்கொண்டு , மற்று ஒருவரிடமும் நம் குற்றத்தை அறிக்கையிட்டு மன்னிப்பு விழையும்போது விடுதலை உணர்வைப் பெறுகிறோம் . கடவுள் அருகில் இருப்பதையும் உணர்ந்து கொள்கிறோம் . உளவியல் மருத்துவர்களிடமும் , மனநல மருத்துவர்களிடமும் நாம் நம் உள்ளுணர்வுகளையும், மனத்தை அரித்துக் கொண்டிருப்பவைகளையும் வெளியிட்டால்தானே ஆலோசனை தரமுடியும் . உடல் நலமருத்துவமும் அப்படித்தான் . நோய்நாடி , அதன் காரணம் தெரிந்த பிறகே அதைத் தணிக்கும் மருத்துவம் செய்யமுடியும் . இரகசியங்களே நம் கல்லறைகள் என்பதை மறக்கவேண்டாம் . எவர் ஒருவர் மனத்தில் உள்ளவற்றை மூடி மறைக்கிறாரோ அவர் நோய்களின் பிறப்பிடமும் இருப்பிடமுமாகிறார் .



நமக்குத் தேவையான மன்னிப்பை இயேசுவிடம் கூறிப் பெற்றுக்கொள்ளுமாறு இன்றைய நற்செய்தி அழைக்கிறது . இயேசுவிடம் சென்று பாவமன்னிப்பு என்னும் ஒப்புரவு அருள்சாதனத்தில் நமக்காகக் காத்திருக்கும் இயேசுவிடம் நம் பாவங்களை மன்னிக்குமாறு அறிக்கையிட அழைக்கிறது . இயேசு முடக்குவாத முற்றவரிடம், “மகனே , உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன”, எனக்கூறிய அதே நலம் பயக்கும் பாசமிகு வார்த்தைகளைக் கேட்டு நெஞ்சில் நிம்மதியும் , நீங்காத மகிழ்ச்சியும் பெற அழைப்பு விடுக்கிறது .



நாமும் மனம் மாறியவர்களாக செபிப்போமா ?.

இரக்கமுள்ள தந்தயாகிய இறைவா, ஊதாரி மைந்தனைப் போல நானும் உம்மிடம் திரும்பி வந்துள்ளேன். நான் உமக்கு எதிராகக் குற்றங்கள் புரிந்துள்ளேன் . நான் உம்முடைய மகன் என்று அழைக்கப்பட அருகதையற்றவன்.



உலகின் மீட்பராகிய இயேசுவே நீர் சிலுவையில் தொங்கியபோது பாவமன்னிப்பு விழைந்த கள்வனுக்கு வானக வாழ்வில் இடமளித்தீரே, உமது இறையரசில் என்னையும் நினைவு கூர்ந்தருளும் .



அன்பின் ஊற்றாகிய தூய ஆவியானவரே , நம்பிக்கையோடு நான் உம்மிடம் கேட்கிறேன் . என் உள்ளத்தைத் தூய்மையாக்கியருளும் . ஒளியின் குழந்தையாக நடந்திட அருள்தாரும் . ஆமென் .








All the contents on this site are copyrighted ©.