2009-02-18 14:43:10

விவிலிய அறிவைக் கொண்டிருப்பது, கிறிஸ்தவ வாழ்வின் தனிப்பட்ட அடையாளம், இறையியலார்


18பிப்.2009. விவிலிய அறிவைக் கொண்டிருப்பது, கிறிஸ்தவ வாழ்வில் மிகவும் தேவையான மற்றும் நேர்த்தியான ஆன்மீக ஆயுதம் மட்டுமல்ல, அது கிறிஸ்தவ வாழ்வின் தனிப்பட்ட அடையாளமாகவும் அவ்வாழ்வைத் தனித்துக் காட்டுவதாகவும் இருக்கின்றது என்று இந்திய ஆயர்கள் கூட்டத்தில் கூறினார் அருட்திரு லூசியன் லெக்ரான்.

“இறைவார்த்தை-அனைத்து மக்களின் வாழ்க்கையின் ஊற்று” என்ற தலைப்பில் மைசூரில் இப்புதன்கிழமை நிறைவடைந்த இந்திய ஆயர்களின் கூட்டத்தில் உரையாற்றிய குரு லெகிரான், இறைவார்த்தை பற்றிய அதிகம் அறிவானது, குருக்கள் உட்பட இந்திய கத்தோலிக்கரை ஆன்மீகத்தில் உறுதிப்படுத்தும் என்றார்.

இந்திய திருச்சபையை ஓர் ஆழமான விவிலிய ஆன்மீகம் வழிநடத்தாவிட்டால் திருச்சபை அமைப்புகள் இறந்த மண்டை ஓடுகளாக இருக்கும் என்றும் எச்சரித்தார் அருட்திரு லெக்ரான்.

இந்திய இலத்தீன் ரீதி ஆயர்களுக்கென எட்டு நாள்கள் நடைபெற்ற இக்கூட்டத்தில், இறைவார்த்தை பற்றிய உலக ஆயர் மன்றத்தில் கலந்து கொண்டவர்களும், அந்த ஆயர் மன்றம் பற்றிய தங்களது அனுபவ அறிக்கையை சமர்ப்பித்தனர்.

இந்தியாவின் 160 மறைமாவட்டங்களில் 128 இலத்தீன் ரீதி மறைமாவட்டங்களாகும். மற்ற மறைமாவட்டங்கள் சீரோ மலபார் மற்றும் சீரோ மலங்கரா ரீதிகளைச் சேர்ந்தவை.

பாரிஸ் மறைபோதக சபையைச் சேர்ந்த இறையியலார் அருட்திரு லூசியன் லெக்ரான், பெங்களூர் புனித பீட்டர் பாப்பிறை குருத்துவ கல்லூரியில் பல ஆண்டுகளாக விவிலியம் கற்பித்தவர்.








All the contents on this site are copyrighted ©.