2009-02-18 16:09:46

திருத்தந்தை : எவரும் நற்செய்தியை தனக்குமட்டும் என வைத்திருப்பதில்லை, இது எல்லாருக்குமான கொடை


18பிப்.2009. கடந்தசில வாரங்களாக உரோம் நகரில் தொடர்ந்து பெய்து கொண்டிருந்த மழை, மூன்று நாட்களாக நின்றிருக்க, இப்புதன் பொது மறைபோதகம், வத்திக்கான் தூய பேதுரு சதுக்கத்தில் நடைபெறுவதாய் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இச்செவ்வாய் இரவு மீண்டும் மழை இடி மின்னலோடு துவங்கியது. புதன் காலை பயணிகள், பொது மறைபோதகம் எங்கு இடம் பெறும் என்று குழம்பியிருந்த நிலையில், காலை ஆறரை மணிக்கெல்லாம் மழை நின்று எட்டு மணிக்கெல்லாம் சூரியன் பிரகாசமாக வலம் வரத் தொடங்கினான். இரவு மழை பெய்ததால் குளிரும் சற்றுக் குறைந்திருக்க, சூரிய ஒளியும் நிறைந்திருக்க, ஏற்கனவே திட்டமிட்டபடி தூய பேதுரு பசிலிக்கா வளாகத்திலேயே திருத்தந்தை 16ம் பெனடிக்ட்டின் பொது மறைபோதகமும் நடைபெற்றது. அவர் தனது மறைபோதகத்தை ஆரம்பிக்கு முன்னர், இவ்வாண்டில் முதன்முறையாக இச்சதுக்கத்தில் கூடியுள்ளோம், இன்று குளிராக இருந்தாலும் மழையோ பனிப்பொழிவோ இல்லை, எனவே அதற்கு நன்றி சொல்வோம் என்று சொல்லி பின்னர், ஏறத்தாழ கி.பி.672 ம் ஆண்டு முதல் 735ம் ஆண்டுவரை வாழ்ந்த வணக்கத்துக்குரிய ஆங்கிலேயத் துறவி பீட் பற்றி விளக்கினார். ஏறத்தாழ 20,000 பேர் கலந்து கொண்ட இப்புதன் பொது மறைபோதகத்தில், கீழை மற்றும் மேற்கத்திய நாடுகளின் ஆதிகாலக் கிறிஸ்தவ எழுத்தாளர்கள் குறித்த மறைபோதனைகளின் வரிசையில் இன்று வணக்கத்துக்குரிய புனித பீட் பற்றி நோக்குவோம் என ஆங்கிலத்தில் உரையைத் தொடங்கினார்.

RealAudioMP3 இங்கிலாந்தின் வேர்மவுத் துறவு இல்லத்தில் துறவியாக இருந்த இவர், அவர்காலத்தின் மிகப்பெரும் கற்றறிந்தோருள் ஒருவராக இருந்தார். மிகப்பெரும் எழுத்தாளராக இருந்த இவர், புனிதத்துவத்தோடு அறிவிலும் சிறந்து விளங்கினார். கிறிஸ்து மற்றும் திருச்சபை குறித்த மறையுண்மையை மையமாகக் கொண்டு பழைய மற்றும் புதிய ஏற்பாடுகளின் ஐக்கியத்துவத்தின் முக்கியத்துவத்தை வெளிப்படுத்துவதாய் புனித பீடின் விவிலிய விளக்கவுரைகள் இருந்தன.

இவர் அதிகம் அதிகமாக அவரின் வரலாறு குறித்த எழுத்துக்கள் மூலமே அறியப்பட்டார். அதில் அவர், திருத்தூதர்கள் பணி நூலில் நாம் அறிவதிலிருந்து தொடங்கி திருச்சபைத் தந்தையர்கள், திருச்சபையின் பொதுச்சங்கங்கள் வழியாக வரலாற்றை எடுத்துவந்து அவர் காலம் வரையுள்ள திருச்சபையின் வரலாற்றை விவரித்துள்ளார். திருச்சபையின் மறைப்பணி விரிவடைந்ததையும் ஆங்கிலேயரிடையே அது வளர்ந்த விதத்தையும் திருச்சபை குறித்து அவர் எழுதிய வரலாறு எடுத்துரைக்கின்றது. திருச்சபை ஆசிரியர்களும் குருக்களும் துறவியரும் திருச்சபையின் பணிகளில் உதவும்வண்ணம் தங்கள் அழைப்பை முழுமையாக வாழ்வதற்கு புனித பீடின் வளம்நிறை திருச்சபை, திருவழிபாட்டு மற்றும் வரலாற்று கண்ணோட்டம் வழியான எழுத்துக்கள் உதவுகின்றன. அவரின் மிகப்பெரும் கற்றறிவாளர் நிலையும் அவர் வாழ்வின் புனிதத்துவமும் அவருக்கு வணக்கத்துக்குரியவர் என்ற பட்டத்தைப் பெற்றுத் தந்தன. அதேவேளை அவரின் எழுத்துக்கள் மிகவேகமாக மக்கலிடையே பரவியது. கிறிஸ்தவ ஐரோப்பாவைக் கட்டி எழுப்புவதில் மிகப்பெரிய அளவில் பாதிப்பை உண்டாக்குபவராக அவரை மாற்றியது.

இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார். RealAudioMP3

 








All the contents on this site are copyrighted ©.