2009-02-16 18:09:12

ஞாயிறு மூவேளை செப உரை , திருத்தந்தை .160209 .


பாவங்களை அறிக்கையிடுவது பரம தந்தையோடு நம்மை இணைக்கிறது என்கிறார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் . சென்ற ஞாயிறு மூவேளை செபத்தின்போது அவர் இவ்வாறு கூறினார் . ஞாயிறு வழிபாட்டின் நற்செய்தியில் தொழுநோய் உற்ற ஒருவர் இயேசுவிடம் வந்து குணம் பெறுவதை திருத்தந்தை எடுத்துரைத்தார் . பாவமே நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்கிறது , நோய்கள் அல்ல எனக் கூறினார் . இயேசு அவருடைய சிலுவைப் பாடுகளின்போது ஒரு தொழுநோயாளரைப்போல இருந்தார் . நம் பாவங்கள் அவர் சுமந்ததால் அவர் அவ்வாறு பாவத்தின் உருவாக , கடவுளிடமிருந்து பிரிக்கப்பட்டவராக ,ஆனார் . இதை அவர் நம்மீது கொண்ட அன்பின் காரணத்தால் செய்தார் . நம் பாவம் கழுவப்பட்ட நிலையில் இறைவனோடு நமக்குள்ள உறவைப் புதுப்பித்தார்.

பாவம் அறிவிக்கப்பட்டு மன்னிப்புப் பெறாதவரை அது நம் ஆன்மாவை சாகடிக்கிறது . அது நம்மைக் கடவுளிடமிருந்து பிரிக்கிறது . ஆனால் நம்மைத் தூய்மைப்படுத்தி அவரோடு ஒப்புரவாக்கக் கடவுள் காத்திருக்கிறார் . நற்செய்தியில் தொழுநோயுற்றவர் குணம் பெற்ற நிகழ்ச்சியைத் திருத்தந்தை சுட்டிக்காட்டி , கத்தோலிக்கத் திருச்சபையில் வழக்கத்தில் உள்ள ஒப்புரவு அருள்சாதனத்தைத் திருத்தந்தை வலியுறுத்தினார் . இந்த ஞாயிறு நண்பகல் செபத்துக்கு 20 , 000 பேர் கடுமையான குளிர் காற்றையும் பொருட்படுத்தாது திருத்தந்தையின் உரையைக் கேட்டு மகிழ்ந்தனர் .

பாவ அறிக்கையிடும் இந்தத் திருச்சபையின் பழக்கத்தில் திருச்சபையின் குருக்களிடம் பாவங்களைத் தெரிவித்து மன்னிப்பு விழையும் போது அர்ச்சிக்கப்பட்ட குருவின் வழியாக சிலுவையில் மரித்து உயிர்த்த இயேசுவே தம் பேரிரக்கத்தால் நம்மைத் தந்தையாகிய கடவுளோடும் நம் சகோதர சகோதரிகளோடும் சமாதானம் செய்து நமக்குத் தம் அன்பையும் , அமைதியையும் மகிழ்ச்சியையும் தருகிறார் எனத் திருத்தந்தை 16 பெனடிக்ட் மூவேளை செப உரை வழங்கினார் .








All the contents on this site are copyrighted ©.