2009-02-14 15:28:29

நைஜூரியத் திருச்சபை அந்நாட்டு இசுலாமியருடன் நடத்தும் உரையாடல் பல இனமக்கள் அமைதியுடன் வாழ உதவுகின்றது, திருத்தந்தை


14பிப்.2009. நைஜூரிய நாட்டு ஆயர்களை, அவர்களின் அட் லிமினா சந்திப்பை முன்னிட்டு இனறு திருப்பீடத்தில் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை, குருத்துவத்திற்கு இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பது, அவர்களுக்குப் பயிற்சி அளிப்பது, பிற சமயத்தவருடன், குறிப்பாக இசுலாமியருடன் உரையாடல், மற்றும் குடும்பம், திருமணவாழ்வைப் பாதுகாத்தலின் அவசியம் போன்ற சில முக்கிய விடயங்களை வலியுறுத்தினார்.

ஞானத்தோடும் தெளிவான சிந்தையோடும் குருத்துவத்திற்கு இளைஞர்களைத் தேர்ந்தெடுப்பது நாட்டின் ஆன்மீக நலவாழ்வுக்கு மிகவும் இன்றியமையாதது என்றுரைத்த அவர், திருவழிபாடுகளும் பொதுநிலையினருக்கான மேய்ப்புப்பணிகளும் சிறப்பாக நடைபெற குருத்துவ மாணவர்களுக்கு நற்பயிற்சி அளிக்கப்பட வேண்டும் என்றார்.

ஆப்ரிக்காவுக்கென நடைபெறவுள்ள சிறப்பு ஆயர் மன்றம் இனப்பதட்டநிலைகள் பற்றியும் விவாதிக்கும் என்றும் கூறிய அவர், இன மோதல்கள் எங்கு நடந்தாலும், ஏன் திருச்சபைக்குள்ளே இடம் பெற்றாலும் அவற்றை எதிர்த்துப் போராடவும் ஊக்கமளித்தார்.

நைஜூரிய ஆயர்கள் இசுலாமியருடன் நல்லிணக்கத்துடன் வாழ்வதற்கு எடுத்துவரும் முயற்சிகளைப் பாராட்டிய திருத்தந்தை, பொறுமை, விடாஉறுதி, மதிப்பு, நட்பு, ஒத்துழைப்பு தேவைப்படும் பிறசமயத்தவருடனான உரையாடல் மூலம் திருச்சபை மனிதகுல ஒன்றிப்புக்கும், கடவுளடனான ஐக்கியத்திற்கும் தெளிவான கருவியாகவும் அடையாளமாகவும் அமையும் என்றும் கூறினார்.

உலக நோக்கிலிருந்து விடுபடுதல், செபம், இறைத்திட்டத்திற்குப் பணிதல் ஒளிவுமறைவற்ற நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் ஆயர்கள் கிறிஸ்துவின் அடையாளங்களாக மாற முடியும் என்றும் அவர் எடுத்துரைத்தார்.








All the contents on this site are copyrighted ©.