2009-02-11 18:06:20

திருத்தந்தையின் மறைபோதகம் . 110209 .


இன்றைய மறைபோதகம் முந்நாள் திருத்தந்தை 6 ஆம் பவுல் அரங்கத்தில் இருந்தது . வந்திருந்தோரை வாழ்த்தி வரவேற்றார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட் .

கீழைத்திருச்சபையிலும் மேலைத் திருச்சபையிலும் உள்ள ஞானிகள் பற்றி முன்னர் போன்று மறையுரை வழங்க இருப்பதாகத் திருத்தந்தை தெரிவித்தார் . கி.பி.575 இல் பிறந்தவர் ஜான் கிளைமாக்கஸ் . கிளைமாக்கஸ் என்றால் ஏணி என்று பொருள் . அவர் சீனாய் மலைக்கு அருகில் வாழ்ந்தவர். உலகைத் துறந்து அன்பில் நிறைவுள்ள வாழ்க்கை வாழ்வது பற்றி மிகச் சிறந்த குறிப்பு ஒன்றை எழுதியுள்ளார் . மூன்று படிகளில் இந்தப் பயணம் தொடர்வதாகக் கூறுகிறார் . முதலாவது உலகப் பற்றுக்களிலிருந்து விடுபட்டு நற்செய்தி காட்டும் புண்ணிய நிலையை அடைந்து செபத்தில் கடவுளோடு ஆழமான உறவு கொள்வதாகும் . இரண்டாவது நிலையில் நம்மைச் சோதிக்கும் ஆசாபாச வலைகளிலிருந்து ஆன்மா மீள்வதாகும் . அதற்கு மாறாக நல்ல புண்ணியங்களில் வளரவேண்டும் . தன்னையே மறுக்கும்போது, ஆசாபாசங்கள் கடவுளுடைய அருள் வாழ்வுக்கு நம்மை இட்டுச் செல்லும் . மூன்றாவது நிலையில் நாம் நம் உள்ளத்தைச் சோதனயிட்டு நம்முடைய எண்ணங்களை ஆராய்ந்து உள்ளத்தின் உணர்ச்சிகளை அறிதல் வேண்டும் . இது நம் உள்ளத்தில் அமைதியைத் தரும் . இதற்குப் பிறகு நாம் கடவுளைப் பற்றிய மறை உண்மைகளை ஆராய வழிபிறக்கும் . ஏணியின் இறுதியில் விசுவாசம் , நம்பிக்கை , அன்பு ஆகியவை உள்ளன . மனிதக் காதலைப் போல இறைவனோடு நம் ஆன்மா இரண்டறக் கலந்து ஒன்றுபடவேண்டும் . நம்முடைய திருமுழுக்கு வழியாக நாம் கிறிஸ்துவின் இறப்பு , உயிர்ப்பில் பங்கு பெறவேண்டும் என்றும் , நாம் தொடர்ந்து மனமாற்றம் பெற்று தூய ஆவியானவரின் உதவியால் தூய்மையடைய வேண்டும் என்றும் ஜான் கிளைமாக்கஸ் கூறுகிறார்.

வந்திருந்த அனைவருக்கும் வாழ்த்துக்கூறி தமது அப்போஸ்தலிக்க ஆசியை வழங்கினார் திருத்தந்தை 16 ஆம் பெனடிக்ட்.








All the contents on this site are copyrighted ©.