2009-02-11 18:02:51

எங்கே நிம்மதி - கடவுளின் பார்வை - 11-02-09.


அந்தப் பெண் தன் வீட்டுக்குப் பின்புறம் கயிற்றில் துணிகளை உலர்த்திக்கொண்டிருந்தாள் . அங்கு ஒரு தோட்டம் இருந்தது . அடுத்த வீட்டுச் சிறுவன் மெதுவாக வேலியைத் தாண்டி உள்ளே வந்தான் . அவன் சுற்று முற்றும் பார்த்துவிட்டு, யாரும் அவனைப் பார்க்கவில்லை என உறுதிசெய்து கொண்டபிறகு அங்கிருந்த மாமரத்திலிருந்து சில மாங்கனிகளைப் பறித்துக் கொண்டு ஓடினான் . அடுத்த நாள் அச்சிறுவனை வழியில் சந்தித்த அந்தப் பெண் நேற்று நீ எங்கள் வீட்டு மாமரத்திலிருந்து கனிகளைத் திருடியதை நானும் வேறு ஒருவரும் பார்த்தோம் என்றார் . சிறுவன் திகைத்துப்போய் நின்றபோது , அந்தப் பெண் தொடர்ந்தாள் – நீ ஒரு இடத்தை மறந்துவிட்டு மற்ற எல்லாத் திக்கிலும் பார்த்தாய் என்றார் . அது எந்தப் பக்கம் எனக் கேட்டான் சிறுவன் . நீ மேலே பார்க்கவில்லை என்றார் அந்தப் பெண் . அங்கிருந்து கடவுள் பார்க்கிறார் என்றார் .



கிரேக்கர்களும் உரோமர்களும் கடவுள் பக்தியுடன் வாழ்ந்தவர்கள் . கிரேக்கர்கள் கடவுளைத் தேயோஸ் என்று அழைத்தார்கள் . அதற்கு அர்த்தம் அனைத்தையும் பார்க்கிறவர் என்பதாகும் . ஒரே பார்வையில் உலகு முழுவதையும் பார்க்கும் கண்களை உடையவர் கடவுள் என அவர்கள் கடவுளின் வல்லமை பற்றிய கொள்கையைக் கொண்டிருந்தார்கள் .



லின்னேயஸ் என்ற விஞ்ஞானி தம் ஆராய்ச்சிக்கூடத்தில், தூய்மையாக வாழவேண்டும் . ஏனெனில் அனைத்தையும் கடவுள் பார்க்கிறார் என எழுதி வைத்திருந்தார் . பீடியாஸ் என்ற சிற்பி தாம் வடிக்கும் ஒரு கடவுள் சிலை பீடத்தின் மேலே மிக உயரத்தில் வைக்கப்படவுள்ளது எனத் தெரிந்திருந்தும்– அதை எங்கிருந்தாலும் கடவுள் பார்ப்பார் என்ற அச்சத்தோடு மிக அழகாக வடித்தெடுத்தார் .



யூதர் குல ராபியிடம் மன்னன் டிரேஜன் என்பவன் கடவுள் எங்குமிருக்கிறார் என்றால் நம்மால் ஏன் அவரைக் காணமுடியவில்லை என்ற கேள்வியை எழுப்பினான் . நான் கடவுளைப் பார்க்கவேண்டும் என மன்னன் டிரேஜன் கூறினான் . கடவுள் எங்கும் உள்ளார் என்பது உண்மையே . ஆனால் அவரைப் பார்க்கமுடியாது . மனிதக் கண்களால் கடவுளின் மகிமையைப் பார்க்கமுடியாது என்றார் ராபி . மன்னன் வற்புறுத்தினான் . மன்னரை அழைத்துக் கொண்டு கடவுளின் படைப்புப் பொருள் ஒன்றைப் பார்ப்போம் எனக்கூறி ராபி நண்பகல் வேளையில் மன்னரை வெளியே கூட்டிச் சென்றார். தம் ஒளியையெல்லாம் கொட்டிக்கொண்டு சுடர்விட்டு ஜொலித்த சூரியனைப் பார்க்குமாறு கூறினார் . கண்கள் கூச்செறிகின்றன . என்னால் அதைப் பார்க்கமுடியவில்லை என்றான் மன்னன் டிரேஜன் . கடவுள் படைத்த சூரிய ஒளியையே நீர் காணமுடியவில்லை என்றால் கடவுளைக் கண்கூடாகப் பார்த்தீரென்றால் நீவிர் அழிந்து விடமாட்டீரா எனக் கேட்டார் .

விவிலியத்தில் ஹாகார் என்ற எகிப்தியப் பெண் தம் குழந்தையைத் தூக்கிக்கொண்டு ஆபிராகாமின் மனைவி சாராளிடமிருந்து தப்பி ஓடினார் . அவர் அனைத்தையும் காணும் கடவுளிடம் அபயக்குரல் எழுப்பினார் .கடவுளும் அவர் குரலுக்குச் செவி மடுத்தார் .



கடவுளின் கண்கள் நாம் புரியும் தீமைகளை உளவு பார்க்கும் கண்கள் என்று நாம் எண்ணிவிடக்கூடாது . அவருடைய பார்வை கருணை நிறைந்தது . நம்முடைய துயரங்களையும் , ஏக்கங்களையும் , எதிர்பார்ப்புக்களையும் , தோல்விகளையும் நன்கு அறியும் கடவுள் கழிவிரக்கம் மிக்க பார்வை கொண்டவர் .

கடவுள் நாம் புரியும் குற்றங்களையே எப்பொழுதும் பார்க்கிறார் . நம்முடைய நல்ல காரியங்களை எப்போதாகிலும்தான் காண்கிறார் என நாம் ஏன் கருதவேண்டும் . கடவுள் துப்பறியும் காவலர் அல்லர் . கடவுள் உலகின் மீது எவ்வளவு அன்பு கூர்ந்தார் என்றால் தம் ஒரே மகன் இயேசுவையே உலகின் மீட்புக்காக நம்முள் ஒருவராக மனித உருவில் வாழ , வாழும் முறையைக் காட்ட, வழிகாட்டும் தெய்வமாக அனுப்பி வைத்தார். வாழ்க்கையின் நெடுவழிப்பாதையில் காயப்பட்ட நமக்கு நல்ல சமாரித்தனாக மருத்துவம் செய்வதற்கு , குணமளிப்பதற்கு காவல் தெய்வமாக இயேசு வந்தார் .



தீமைகள் புரியும் மனித இதயம் கடவுளையும் அதே பார்வையிலேயே நோட்டமிடுகிறது. கடவுள் நம்மைப் பார்க்கும்போது - உள்ளொன்று வைத்து வெளியே வேறு வேடம் போட்டுக் கொண்டு திரியும் நம் கபட நாடகத்தை அல்ல , நம்முடைய உண்மையான வாழ்க்கையை , நம் உள்ளத்தில் மறைந்திருக்கும் அனைத்தையும் அவர் நன்கு காண்கிறார். நம்முடைய முகமூடிகளை நீக்கிவிட்டு நாம் போடும் கபட நாடகங்களை சபையில் அரங்கேற்றம் செய்ய நம்மில் எத்தனை பேர் சம்மதம் கொடுப்போம் . கடவுளுக்கு எல்லாம் தெரியும் .



நம் குற்றங்களை ஒருவர் மறைக்காது கூறுவதை ஒளிந்திருந்து நாம் கேட்டால் நம் மனம் தாங்குமா . கடவுளின் பார்வை உள்ளத்தின் ஆழத்தில் உறைந்து கிடக்கும் உணர்வுகளையும் உய்த்துணரும் பார்வை . அவர் அனைத்தையும் அறிவார் .



கடவுள் நம் கடந்த காலத்தை நன்கு அறிவார் . நம் வந்திருக்கும் வழித்தடத்தையும் , நம் காலடிகள் விட்டுவந்த சுவடுகளையும் நன்கு அறிவார். இருப்பினும் நம்மீது அளவில்லாத , நிபந்தனையில்லாத அன்பு காட்டுபவர் கடவுள் . இதுதான் கடவுளின் உண்மைப் பார்வை . பாசமிகு பார்வை . பாசமிகு தந்தையின் கனிவுமிக்க பார்வை . தாயன்போடு நம்மை அணைத்துக் கொள்ளும் பார்வை . இவரை நாம் நாளும் வணங்கித் தொழுது ஏற்றினால் நம் வாழ்வில் நிம்மதிக்கு ஏது குறை .



தனக்கு உவமை இல்லாதான் தாள் சேர்ந்தார்க்கு அல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது .

தன் நெஞ்சறிவது பொய்யற்க , பொய்த்தபின் தன் நெஞ்சே

தன்னைச் சுடும் என்பவை குறளமுதங்கள் .








All the contents on this site are copyrighted ©.