2009-02-10 16:29:58

ஆஸ்திரேலியாவில் காட்டுத் தீயில் பலியான குடும்பங்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை, ஆன்மீக மற்றும் பிற உதவிகளைச் செய்யும், பேராயர் பிலிப் வில்சன்


10 பிப்.2009. ஆஸ்திரேலியாவின் தென்கிழக்கு பகுதியில் கட்டுகடங்காத அளவில் தொடர்ந்து எரிந்துகொண்டிருக்கும் காட்டுத் தீயில் குறைந்தது 166 பேர் பலியாகி இருக்கும் வேளை, அதில் பலியான குடும்பங்களுக்குக் கத்தோலிக்கத் திருச்சபை, ஆன்மீக மற்றும் பிற உதவிகளைச் செய்யும் என உறுதி அளித்துள்ளார் அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் பிலிப் வில்சன்.

இந்தக் காட்டுத் தீயில் பலியானவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் கத்தோலிக்கப் பங்குத் தளங்கள் செபித்தும் பிற உதவிகளையும் செய்து வருகின்றன என்றுரைத்த பேராயர் வில்சன், வின்சென்ட் தெ பவுல், சென்ட்டாகேர் போன்ற கத்தோலிக்க இடர்துடைப்பு நிறுவனங்கள் ஏற்கனவே தேவையான உதவிகளைச் செய்து வருகின்றன என்றார்.

மேலும், ஆஸ்திரேலிய பிரதமர் கெவின் ரட், ஒரு கோடி ஆஸ்திரேலிய டாலர் பெறுமான அவசர உதவிகளை அறிவித்துள்ளார். அத்துடன் தீயை அணைப்பதற்கும் குப்பைகளை அகற்றுவதற்கும் உதவி செய்வதற்கு இராணுவமும் வரவழைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.

விக்டோரியா மாநிலத்தில் ஏறத்தாழ 850 சதுர மைல்கள் பரப்பளவுள்ள இடங்கள் எரிந்துள்ளன. ஆஸ்திரேலியாவில் கோடை காலத்தில் காட்டுத் தீ பரவுவது வழக்கமாக நடக்கிறது எனினும் ஒவ்வோர் ஆண்டும் இடம் பெறும் ஏறத்தாழ அறுபதாயிரம் தீயில் பாதி அளவு, சந்தேக நபர்களால் திட்டமிட்டு வைக்கப்படுகின்றன என்று கூறப்படுகிறது. எனினும் தற்போதைய காட்டுத் தீ சம்பவம், இதுவரை நடந்ததில் மிகவும் கோரமானது என்றும் சொல்லப்படுகிறது.

இதற்கிடையே, தற்போதைய காட்டுத் தீக்குக் காரணமாக இருந்தவர்களை வன்செயல்கள் புரிந்தவர்கள் என்றும் பெருங்கொலைகளை செய்தவர்கள் என்றும் ஆஸ்திரேலியப் பிரதமர் கெவின் ரட் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இந்தக் காட்டுத் தீயில் பெரும் பகுதி வேண்டுமென்றே வைக்கப்பட்டவை என்று காவல்துறை தெரிவித்துள்ளது.

இந்தக் காட்டுத்தீயிலிருந்து தப்பியவர்கள், புதர் காடுகளின் ஊடாக தீச்சுவாலைகள் கொழுந்து விட்டு எரிந்தன என்றும், விண்ணிலிருந்தது தீ மழை பொழிந்தது போல இருந்தது என்றும் தெரிவித்துள்ளனர். தங்களது வாகனங்களில் இருந்த நிலையிலேயே பலர் பலியாக நேரிட்டுள்ளது என்று செய்திகள் கூறுகின்றன.








All the contents on this site are copyrighted ©.