2009-02-09 15:03:08

பெண்களின் பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்படுவது நிறுத்தப்படுவதற்கு பெருமளவிலான முயற்சிகள் தேவைப்படுகின்றன-யூனிசெப்


09பிப்.2009. ஆண்டுதோறும் ஏறத்தாழ முப்பது இலட்சம் சிறுமிகள் மற்றும் பெண்களின் பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்படும் வேளை, இந்நடவடிக்கை நிறுத்தப்படுவதற்கு பெருமளவிலான முயற்சிகள் தேவைப்படுகின்றன என்று யூனிசெப் என்ற ஐ.நா.வின் குழந்தைநல அமைப்பு அழைப்புவிடுத்தது.

பிப்ரவரி ஆறாம்தேதி கடைபிடிக்கப்பட்ட பெண்களின் பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்படுவதற்கெதிரான சர்வதேச தினத்தை முன்னிட்டு செய்தி வெளியிட்ட யூனிசெப் இயக்குனர் ஆன் வெனெமான், இவ்வழைப்பை முன்வைத்தார்.

இன்று உலகில் பிறப்புறுப்புக்கள் முடமாக்கப்பட்ட நிலையில் ஏறத்தாழ ஏழு கோடி சிறுமிகளும் பெண்களும் வாழ்கிறார்கள் என்ற அவர், இந்த ஆபத்தான பழக்கத்தைத் தவிர்ப்பதில் சில சமூகங்கள் உண்மையிலேயே முன்னேறி வருகின்றன என்றாலும் பல சிறுமிகளின் வாழ்வு தொடர்ந்து அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது என்றார்.

பெண்களின் பிறப்புறுப்புக்களை முடமாக்குவது, அதன் வெளிப்பகுதியை முழுவதுமாக அல்லது அதன் ஒருபகுதியை எடுத்துவிடுவது கலாச்சார மற்றும் மருத்துவம் சாராத காரணங்களுக்காக நடத்தப்படுகின்றன என்றும் வெனெமானின் செய்தி கூறுகிறது.

இப்பழக்கம் ஆப்ரிக்காவிலும் மத்திய கிழக்கு நாடுகளிலும் இடம் பெற்று வருகிறது. மத்திய ஆப்ரிக்கக் குடியரசில் 1966ல் இது சட்டப்படி தடை செய்யப்பட்டிருந்தாலும் இன்னும் ஏறத்தாழ 28 விழுக்காட்டுப் பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யப்படுகிறது என்று கூறப்படுகிறது..








All the contents on this site are copyrighted ©.