2009-02-07 18:49:28

வழிபாட்டு ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு மறையுரை. 080209.


வழிபாட்டு ஆண்டின் ஐந்தாம் ஞாயிறு – 080209 .

இன்றைய வாசகங்கள் – யோபு 7,1-4, 6-7 . 1 கொரிந்.9,16-19 , 22-23 . நற்செய்தி – தூய மாற்கு 1,29-39.



நாடகம் போன்று காணப்படும் ஞாயிறு வழிபாடு இன்றைய வழிபாட்டில் பல உணர்வுகளுக்கு நம்மை இட்டுச் செல்கிறது .

முதல் வாசகத்தில் யோபுவுடைய மனச் சோர்வையும் துயரத்தையும் காண்கிறோம் . யாரால் மனித வாழ்க்கையின் துன்பங்களை உணரமுடியாது . மனித வாழ்க்கை சுவையில்லாத வீணாக நேரத்தைக் கொல்லும் செயலாகப் பார்க்கிறார் யோபு . கடுமையான வெயிலிலிருந்து மரத்து நிழலில் ஓய்வைத் தேடும் ஒரு பணியாளைப் போன்று வாழ்வில் ஓய்வைத் தேடவேண்டியுள்ளது . ஓய்வு நேரமும் நிம்மதி இல்லாததாக இருக்கிறது . துன்பம் தொடர்கதையாக இருக்கிறது. ஒருவேளை நாமும் கூட அவ்வாறு உணர்ந்திருக்கலாம் . இனி என் வாழ்வில் நிம்மதி ஏது என அங்கலாய்த்திருக்கலாம் .

நாம் யோபுவின் கதையை மட்டும் கேட்டுவிட்டு வீடு திரும்பினால் வாழ்வு கசப்பாகத்தான் இருக்கும் . வழிபாடு இன்றைய திருப்பாடலில் வேறு ஒரு உணர்வுக்கு நம்மை அழைத்துச் செல்கிறது .நாம் நம்பிக்கையையும் வசந்தமான காலம் வர இருப்பதையும் காண்கிறோம் . கடவுளுடைய அருளன்பைக் காட்டப்படுகிறோம் . அவர் நைந்துபோன உள்ளங்களைக் குணப்படுத்துவார் எனக் கூறப்படுகிறோம் .

திருத்தூதர் பவுல் கொரிந்தியருக்கு ஊக்கமூட்டுகிறார் . இயேசுவுக்காகவும் நற்செய்தியை அறிவிப்பதற்காகவும் தம்மை ஒரு அடிமையாக்கிக் கொண்டதாகக் கூறுகிறார் .யோபுவைப் போல தம் துன்பங்களை மனச் சோர்வைத் தருவதாக அவர் கருதவில்லை. ஏனென்றால் அவர் ஆழமான நம்பிக்கையோடு தம் பணியை மேற்கொண்டுள்ளார் . அவரது எண்ணங்கள் உயரியவை . நாமும் திருத்தூதர் பவுலின் சிந்தனைகளைக் கொண்டிருந்தால் அவை நம்முடைய வாழ்வின் பளுவைத் தாங்குவதற்குத் தேவையான சக்தியைத் தரக்கூடியவை .



மாலை நேரம் நெருங்கும் போது வரக்கூடிய பயத்தைப் போக்குமாறு இயேசு புரியும் புதுமைகளை நமக்கு தூய மாற்கு நற்செய்தியில் வழங்குகிறார் . இயேசு இருளில் சுடரும் ஒளியாக விளங்குகிறார் . இருள் சூழும்போது நாம் இயேசுவிடம் ஓடிச்சென்று நம்மைத் தாக்கும் துன்பங்களிலிருந்து விடுதலை பெறவும் வரும் இருளை ஒளிமயமாக்கவும் வரம் கேட்கலாம் .

இயேசு தம்முடைய வெற்றியின் இரகசியத்தை இருள் நீங்கி விடியும்போது காட்டுகிறார் . விடிதலுக்கு முன்னர் அவர் அதிகாலையில் செபிக்கச் செல்கிறார் . அவருடைய சக்திக்கு இதுவே ஊற்றாகும் . இதுவே விளக்கமாகும் .

யோபுவின் நாட்கள் மனச் சோர்வில் கடந்த போது , இயேசுவின் பிறரன்புப் பணிகாரணமாக அவருடைய நாட்கள் வளப்பமாக த இருக்கின்றன . துன்பமோ , வேதனை , மனச் சோர்வு போன்றவையோ நம்முடைய அணுகுமுறை காரணமாக நம்மை அழிக்கவோ வளர்க்கவோ செய்யும் சக்தி கொண்டவை . அவை நம்மை அவற்றின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கக்கூடியவை . ஆனால் நாம் ஆண்டவன் அருளால் அவற்றின்மீது வெற்றி கொள்ளமுடியும் .

யோவுவின் இரவு நேரம் மிகத் துயரமாக இருந்ததால் அவர் விடியலுக்காக காத்திருந்தார் . இயேசு இரவு நேரத்தில் தம் தந்தையோடு செபத்தின் வழியாக உறவு கொண்டதால் விடியல் ஒவ்வொரு நாளும் வசந்தமாக நற்பணியாற்ற கோடி வாய்ப்புக்களைக் கொண்டதாக அமைந்தன . இளஞாயிறு எழுந்தபோது இயேசு தனியாகச் செபித்துக் கொண்டிருப்பதைக் கண்டது . நாம் எத்தகைய மனப்பாங்கோடு நம் இரவு நேரங்களையும் விடியலையும் சந்திக்கிறோம் .

நாம் செபத்தில் ஆழ்ந்து சுவைத்திருக்கிறோமா . நாம் ஆழ்ந்து செபிக்கும்போது, கடவுளோடு பேசும்போது எல்லாச் சத்தமும் பராக்குகளும் ஓடி மறைந்து விடுகின்றன. நாம் திரைப்படங்களில் பொழுது போக்குகளில் புத்தகங்களில் நம்மையே மறந்து ஆழ்ந்திருக்கிறோம் . நாம் செபம் செய்யும்போது எப்படி மகிழ்ந்திருக்கிறோம் .

இன்றைய வழிபாட்டின் வழியாக திருச்சபை நம் புத்துணர்ச்சியும் புதுப்பொலிவும் புது வாழ்வும் பெறுவோம் என நம்புகிறது . நாம் இரவில் நிம்மதியாக உறங்கி மறு நாளை செபத்தோடு தொடங்கினால் உறுதியாக நாளெல்லாம் அருளும் மகிழ்ச்சியும் கொண்ட திருநாளாகும் . நம் நடையும் நாட்டியமாகும்







All the contents on this site are copyrighted ©.