2009-02-07 12:57:47

இலங்கை நிலைமை பற்றிய இலயோலா கல்லூரியின் கருத்துக் கணிப்பு




07பிப்.2009. இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வாக தனி ஈழமே என்று தமிழகத்தில் 68 விழுக்காட்டினர் ஆதரவு தெரிவித்துள்ளனர் என்று லயோலா கல்லூரி நடத்திய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, லயோலா கல்லூரியின் 'மக்கள் ஆய்வகம்' நடத்திய ஈழத் தமிழர்கள் விடயத்தில் தமிழக மக்களின் மனநிலை பற்றிய ஆய்வில் முன்வைக்கபப்ட்ட பல்வேறு கேள்விகளுக்கு விடையளித்த மக்களில் 68 விழுக்காட்டினர் தனி ஈழத்திற்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் தற்போது நடந்துவரும் போரில், விடுதலைப் புலிகளைச் சாக்காக வைத்து தமிழினத்தையே இலங்கை அரசு அழித்து வருகிறது என்று 86.5 விழுக்காட்டினரும், ராஜபக்சே அரசு தனது அரசியல் ஆதாயத்திற்காக இலங்கை மக்கள் மீது தேவையற்ற ஒரு போரைத் திணித்துள்ளது என்று 10.5 விழுக்காட்டினரும், தமிழர்களை மீட்க இலங்கை அரசு போர் நடத்துகிறது என்று 2 விழுக்காட்டினரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

இலங்கையில் நடைபெறும் போர் குறித்த செய்திகளைக் கண்ணுறும்போது மத்திய - மாநில அரசுகள் மீது கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக 85 விழுக்காட்டினர் தெரிவித்துள்ளனர்.

44.5 விழுக்காட்டினர் மத்திய-மாநில அரசுகள் மீதும், 25.5 விழுக்காட்டினர் ராஜபக்சே அரசின் மீதும், 12 விழுக்காட்டினர் பன்னாட்டுச் சமூகங்கள் மீதும், 3 விழுக்காட்டினர் விடுதலைப் புலிகள் மீதும் கோபமே மிகப் பிரதான உணர்வாக வெளிப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இலங்கைத் தமிழர் பிரச்சனைக்கு தீர்வாக, உடனடியாகப் போர் நிறுத்தம் செய்து அரசியல் தீர்வு காணப் பேச்சு வார்த்தையைத் தொடங்குவது என 90 விழுக்காட்டினர் கருத்து தெரிவித்துள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.