2009-02-07 13:00:16

இரண்டாம் உலகப்போரின் போது இடம் பெற்ற யூதப்படுகொலைகளை நிராகரிப்பவர் யாராயிருந்தாலும் அவர் கண்டிக்கப்பட வேண்டியவர், கர்தினால் ஈகன்


07பிப்.2009. இரண்டாம் உலகப்போரின் போது இடம் பெற்ற யூதப்படுகொலைகளை நிராகரிப்பவர் யாராயிருந்தாலும் அவர் கண்டிக்கப்பட வேண்டியவர் என்று நியுயார்க் கர்தினால் எட்வர்ட் ஈகன் கூறினார்.

பேராயர் மார்ஷெல் லெப்பேப்ரே உருவாக்கிய புனித பத்தாம் பத்திநாதர் கழகத்தைச் சேர்ந்த ஆயர் ரிச்சர்டு வில்லியம்ஸ்சன் ஸ்வீடன் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இரண்டாம் உலகப்போரின் போது யூதர்களைக் கொல்வதற்கு வாயு அறைகள் பயன்படுத்தப்படவில்லை என்று கூறியதாகச் சொல்லப்படுகிறது. இவர், 1988ல் கத்தோலிக்கத் திருச்சபையால் புறம்பாக்கப்பட்டு அண்மையில் மீண்டும் அத்தடை நீக்கப்பட்ட அக்கழகத்தின் நான்கு ஆயர்களில் ஒருவராவார். இவர் மீதான புறம்பாக்கல் தடை நீக்கப்பட்டதால் அண்மையில் திருப்பீடம் யூதர்களின் கடும் எதிர்ப்பை சந்தித்தது.

இது குறித்து பேசிய நியுயார்க் கர்தினால் ஈகன், யூதப்படுகொலைகள் பற்றிய தவறான கருத்துக்களை வத்திக்கான் வன்மையாய் தெளிவான வார்த்தைகளால் கண்டித்துள்ளது என்றும், ஆயர் ரிச்சர்டு வில்லியம்ஸ்சனின் வார்த்தைகள் புண்படக்கூடியவை, ஆதாரமற்றவை மற்றும் அருவருப்பானவை என்றும் சொல்லியுள்ளார்.

இக்கண்டன நடவடிக்கையில் திருப்பீடம் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாட்டு ஆயர் பேரவையுடன் சேர்ந்து தனது குரலையும் உயர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புனித பத்தாம் பத்திநாதர் கழகத்தைத் திருச்சபையோடு ஒன்றிணைப்பதற்குத் திருத்தந்தை எடுத்து வரும் முயற்சிகளைப் பாராட்டியுள்ள போலந்து ஆயர்கள், உரையாடலுக்கான கதவைத் திறந்துள்ள திருத்தந்தையின் செயல் மிகவும் தைரியமானது மற்றும் அது அவரின் உண்மையான மேய்ப்புப்பணி அன்பைக் காட்டுகின்றது என்று கூறியுள்ளனர்.








All the contents on this site are copyrighted ©.