2009-02-04 18:42:18

எங்கே நிம்மதி – பிப்ரவரி 04, 09 .


கவலைப்படுவதால் வரும் தீமைகள் என்ன ?. அலெக்ஸ் காரல் என்பவர் மருத்துவத்துக்காக நோபல் பரிசு வென்றவர் . அவர் கவலைப்படுவது பற்றி என்ன கூறுகிறார் . கவலையைப்போக்கக் கற்றுக் கொள்ளாதவர்கள் இளமையிலேயே சாவுக்கு அழைப்பு விடுக்கிறார்கள் .மருத்துவர்களிடம் வருபவர்களில் 70 விழுக்காடு நோயாளிகள் கவலைப்படுவதாலும் அச்சப்படுவதாலும் நோயைப் பெற்றுக் கொள்வதாகக் கூறுகிறார் . அதே போல மற்றும் ஒரு அமெரிக்க மருத்துவர் ஓ. எப் . கோபர் என்பவர்- ஜீரணம் இல்லாமை , வயிற்றுப்புண் , இருதய நோய்கள் , தூக்கமின்மை , தலைவலி போன்றவை கவலைப்படுவதால் வரக்கூடிய ஆபத்து உள்ளதாகக் கூறுகிறார் .

கவலையைப் போக்க நல்ல மருந்து எவை ? . கடவுள் பக்தி , நல்ல உறக்கம் , நல்ல இசையைக் கேட்டு மகிழ்தல் , நகைச் சுவை உணர்வு ஆகியவையாகும் .

ஓர் உதாரணத்துக்கு உண்மை நிகழ்ச்சி ஒன்றை எடுத்துக் கொள்வோம் . அவதூறான பழிச் சொற்கள் உங்களுக்குக் கவலை தருகிறதா ? . உங்களைப் பற்றி தவறான கருத்துக்களை பிறர் வசைபாடுகிறார்களா ? . அதனால் உங்களுக்கு கவலையும் மனச் சோர்வும் வருகிறதா ? .

1929 ஆம் ஆண்டு கல்வி உலகில் அமெரிக்காவின் சிக்காக்கோ நகரில் பெரிய பரபரப்பை ஏற்படுத்திய நிகழ்ச்சி இது . இராபர்ட் கச்சின்ஸ் என்பவர் உணவு விடுதியில் பணி செய்தவர் . கல்வி கற்ற பிறகு ஆசானாகினார் . துணி விற்க ஆரம்பித்தார் . 30 வயதில் அமெரிக்காவின் புகழ்மிக்க சிக்காக்கோ பல்கலைக்கழக வேந்தரானார் .கல்வியில் பெரும் பட்டங்கள் பெற்றோர் பொறாமைத் தீயில் வெந்து உழன்றனர் . விமரிசனங்களை மனம் போன போக்கில் அள்ளி வீசினார்கள் . கச்சின்ஸ் பலகலைக் கழக வேந்தராகப் பதவி ஏற்றபோது அவர் தந்தை அங்கு அமர்ந்திருந்தார் . அவரிடம் நண்பர் ஒருவர் கூறினார்- இன்றைய காலைச் செய்தித்தாளில் உங்கள் மகனைக் கடுமையாகத் தாக்கி விமரிசனம் செய்துள்ளார்கள் என்றார் . அதற்கு கச்சின்ஸ் கூறினார் – ஆமாம் கடுமையாக எழுதியுள்ளார்கள் . ஆனால் யாரும் இறந்து கிடக்கும் நாயை உதைக்க மாட்டார்களே என்றார் ! .

எவ்வளவுக்கு எவ்வளவு அந்த நாய் முக்கியமானதோ அவ்வளவுக்கு அதை உதைப்பதில் மக்களுக்கு பெரும் மகிழ்ச்சி உண்டாகும் .

வேல்ஸ் நாட்டு இளவரசு டேவன் ஷையரில் உள்ள டார்ட்மெளத் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார் . அப்போது அவருக்கு வயது 14 . அவர்தான் பின்னர் எட்டாவது எட்வர்டு மன்னரானார் . அங்குள்ள கப்பற்படை அதிகாரி ஒருநாள் இளவரசு அழுது கொண்டிருப்பதைப் பார்த்தார் . மெதுவாக விசாரித்தபோது இளவரசு காரணத்தைக் கூறியுள்ளார் . சக மாணவர்கள் அவரை நையப் புடைத்துவிட்டதாகக் கூறியுள்ளார் . குற்றவாளிகளைக் கண்டுபிடித்து விசாரித்தபோது அவர்கள் முதலில் உண்மையைக் கூற மறுத்துவிட்டனர் . பின்னர் அவர்கள் உண்மையான காரணத்தைக் கூறிவிட்டார்கள் . பின் வருங்காலத்தில் நாங்கள் அரசனையே உதைத்திருக்கிறோம் என்று கூறிக்கொள்ளலாம் அல்லவா எனக் காரணம் காட்டியிருக்கிறார்கள் ! . எனவே உங்களை யாராவது வசை மொழியால் வதைக்கும் போது இதை மறந்து விடாதீர்கள் – செத்துக் கிடக்கும் நாயை யாரும் உதைக்கமாட்டார்கள் . பழிச்சொல் என்பது மறைமுகமாக உங்கள் கழுத்தில் விழும் மலர் மாலை என்பதை மறந்து விடாதீர்கள் .



அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை

இகழ்வார்ப் பொறுத்தல் தலை .



தன் மேல் நின்று தன்னைத் தோண்டுகின்றவரையும் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வாரையும் பொறுத்துக் கொள்ளுதல் சிறந்த அறமாகும் .








All the contents on this site are copyrighted ©.