2009-02-03 11:52:18

பெப். 04 புனித அருளானந்தர் விழா.


புனித அருளானந்தர் என அழைக்கப்படும் ஜான் டி பிரிட்டோ போர்த்துக்கலைச் சேர்ந்த இயேசு சபை மதப்போதகரும் மறைசாட்சியும் ஆவார். ஜான் டி பிரிட்டோ ஒரு புகழ் பெற்ற போர்த்துக்கீசக் குடும்பத்தில் பிறந்தார். 1662 ஆம் ஆண்டில் இயேசு சபையில் இணைந்து 1673 ஆம் ஆண்டில் மதப் போதனைக்காக தென்னிந்தியாவில் மதுரை நகருக்கு வந்து சேர்ந்தார். தனது பெயரை தமிழில் அருளானந்தர் என மாற்றினார். அவர் உள்ளூர் மொழிகளை நன்கு கற்றறிந்தார்.. இந்து சமய நடைமுறைகளைப் பின்பற்றி புலால் உண்ணாமை, மது அருந்தாமை போன்ற வழக்கங்களைப் பின்பற்றினார். கத்தோலிக்க சமய நெறிகளை பாமர மக்களுக்கு புரியும்படியாக அவர்களுக்கு எடுத்துரைத்தார்.

ராணி மங்கம்மாள் காலத்தில் மறவர் சீமைக்கும், மதுரை அரசுக்கும் நல்லுறவு அறுந்து போயிருந்தது. அவ்வேளையில் மறவர் சீமையிலே சமயப் போதகம் செய்து வந்த ஜான் பிரிட்டோவினால் ஏராளமான மறவர் சாதியினர் கிறிஸ்தவம் தழுவிக் கொண்டிருந்தனர். இதனால் பிரிட்டோவை ஊரை விட்டு வெளியேறச் சொன்னார் மன்னர் சேதுபதி. கிறிஸ்தவ சமயத்தைத் தழுவியவர்களில் முதன்மையானவர் தடியத் தேவன் என்பவர். தடியத்தேவன் கிறிஸ்தவர்களின் உதவியோடு தலைமையைக் கைப்பற்றி விடுவானோ என்ற அச்சம் சேதுபதிக்கு இருந்தது.

கிறிஸ்துவனாகும் முன்பே தடியத்தேவன் இல்லற வாழ்வில் நுழைந்து விட்டார். அவருக்கு எண்ணற்ற மனைவியர் இருந்தனர். கிறிஸ்தவம் பலதாரமணத்தை ஆதரிக்காததால், தனது முதல் மனைவியைத்தவிர ஏனையோரை விலக்கி விட எண்ணினார்.

அவ்வாறு கழற்றி விடப்பட்ட பெண்களில் 'கதலி ' என்பவளும் ஒருவள். இவள், கிழவன் சேதுபதியின் மருமகள் ஆவாள். தடியத்தேவன் தன்னைக் கைவிட்டதைக் கண்ணீரும் கம்பலையுமாக சேதுபதியிடம் முறையிட்டாள். தடியத்தேவன் இவ்வாறு ஆனதற்கு காரணம், அந்த மதம் என்றும் அதற்கு மூல காரணம் ஜான் பிரிட்டோ என்றும் சேதுபதிக்குத் தெரிந்தது. இதனால் சினமடைந்த சேதுபதி பிரிட்டோவை ஒழித்துக்கட்ட முடிவு செய்தார்.

முனி எனும் கிராமத்தில் ஜான் பிரிட்டோ தங்கி இருந்தபோது 1693 ஜனவரி 8 ஆம் நாள் பிற்பகலில் மேலும் மூவருடன் சேர்த்துக் கைது செய்யப்பட்டார்

நான்கு பேர்களும் கைகளில் விலங்கிடப்பட்டு இரும்புச் சங்கிலிகளால் ஒன்றாகப் பிணைக்கப்பட்டு கயிறு கொண்டு குதிரையின் சேணத்தில் கட்டி இழுத்துச் செல்லப்பட்டனர். சாட்டை அடி வாங்கி துணிகள் கிழிந்து தொங்க உடம்பெல்லாம் ரத்தக் காயங்களுடன் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டனர். ஹனுமந்தக்குடி எனும் ஊரை அன்றிரவு சென்றடந்தனர். அவ்விரவில் அந்தக் கிராமத்தின் சிவன் கோவில் தேரிலே பிரிட்டோவைக் கட்டினர். சிவ நாமத்தை ஜெபிக்கச் சொல்லி வற்புறுத்தினர். அவர் மறுக்கவே அவர் மயக்கமடைந்து கீழே விழும் வரை சவுக்கடி வாங்கினார்.

ஜனவரி 31 ஆம் நாள் பாம்பாற்றங்கரையில் உள்ள உறையூருக்கு கொண்டு வரப்பட்டார்.

உறையூரிலும் தண்டனை உடனடியாக நிறைவேற்றப்படவில்லை. உறையூர் தேவனின் மனைவி கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பிரிட்டோ தன் கணவன் கையால் கொல்லப்படுவதை அவள் விரும்பவில்லை. தேவனுக்கு மந்திரியாயிருந்த முருகப்ப பிள்ளை என்பவனுக்கு கிறிஸ்தவர்கள் என்றாலே ஆகாது. அவர்தான் பிப்ரவரி 4 ல் தண்டனையை நிறைவேற்றிட ஆணையிட்டார்.

பெப்ரவரி 04, 1693 இல் கொலையாளிகள் பிரிட்டோவை கோட்டைக்கு எதிரில் உள்ள குன்றுக்கு அழைத்துச் சென்று தலையைத் துண்டித்தனர். உடல் துண்டம் துண்டமாக வெட்டப்பட்டு கழுகுக்கு இரையாக்கப்பட்டது. தலையும் கால்களும் மற்றவர்களுக்கு எச்சரிக்கையாக சிறிது காலம் கட்டித் தொங்க விடப்பட்டிருந்தன.

பிரிட்டோ ஆதரவாளர்களுக்கு, அவரின் உடல் அடக்கம் செய்யப்பட அரசன் அனுமதி தரவில்லை.

ஜூன் 22, 1947ல் ரோம் நகரில் திருத்தந்தை பன்னிரண்டாம் பத்திநாதர் இவரை புனிதர் என அறிவித்தார்.








All the contents on this site are copyrighted ©.