2009-01-27 16:45:32

தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் அரசியல்வாதிகள் ஜிம்பாபுவே அதிபருக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்த ஆயர்கள் அழைப்பு


27ஜன.2009. தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் அரசியல்வாதிகள் ஜிம்பாபுவே அதிபர் இராபர்ட் முகாபேக்கு கொடுக்கும் ஆதரவை நிறுத்த வேண்டும் அல்லது சந்தடியில்லாமல் நடைபெறும் படுகொலைகளுக்குத் துணைபோவதை வேண்டும் என்று அப்பகுதி கத்தோலிக்க ஆயர்கள் கூறினர்.

ஜிம்பாபுவேயில் நிலவும் அரசியல் தேக்க நிலையை தீர்க்கும் முகமாக, தெற்கு ஆப்ரிக்க நாடுகளின் வளர்ச்சிக்கானக் குழுத் தலைவர்கள் தென்னாப்ரிக்காவில் கூடியுள்ளதையொட்டி செய்தி வெளியிட்ட ஆயர்கள் அதிபர் முகாபே உடனடியாகப் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

அநீதியான வழிகளில் ஆட்சிபுரியும் முகாபேக்கு ஆதரவு வழங்குவதையும் அவரது ஆட்சிக்கு நமபகத்தன்மையை உருவாக்குவதையும் அப்பகுதி அரசியல் தலைவர்கள் நிறுத்த வேண்டும் எனவும் ஆயர்கள் கேட்டுள்ளனர்.

முகாபேக்கும் எதிர்க்கட்சித் தலைவருக்குமிடையே அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் ஆட்சிமுறை பற்றிப் பேசுவதற்கு ஏழு ஆப்பிரிக்க நாடுகளின் தலைவர்கள் பிரிட்டோரியாவில் கூடியுள்ளனர்.

மேலும் இக்கூட்டம் கூட்டப்பட்டுள்ள நிலையில், முகாபே அரசுக்கு எதிரான தடைகளை ஐரோப்பிய ஒன்றியம் மேலும் இறுக்கியுள்ளது எனக் கூறப்பட்டுள்ளது.








All the contents on this site are copyrighted ©.